தொடராக வெளியிட்ட கட்டுரையை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.
*****
1850 களின் தொடக்கம், கடைசி முகலாயன் ஜாபர் என்கிற பகதூர் ஷா II வின் காலம் அது. முகலாயர்களின் நீதிபரிபாலன முறையை அகற்றி விட்டு பிரிட்டிஷ் சட்டங்களைப் புகுத்த முற்பட்டதோடு மட்டுமன்றி கிறிஸ்தவத்தையும் பரப்ப முயன்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு எதிர்வினையாக உருவெடுத்ததுதான் 1857 மாபெரும் சிப்பாய்க் 'கலகம்.' இதைக் கலகம் என்று சொல்வதை விட ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடுத்த ஒரு விடுதலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். ஒன்று சிப்பாய்களை அடக்கி ஒடுக்கி டெல்லியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் ஓட வேண்டும் என்பதுதான் அன்றையச் சூழல். அதைத் தொடர்ந்து டெல்லியே இரத்தக்களறியானது. பின்னாளிலே ஆங்கிலேயப் படையினரால் சிப்பாய்கள் அடக்கப்பட்டனர். பகதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மியச் சிறையிலேயே மாண்டு போனார் என்பது வரலாறு.
வேளாண்மையில் விவசாயிகளின் சுயசார்பு நடைமுறைகளை அகற்றிவிட்டு விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றவும், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் புதிய சட்டங்களைப் புகுத்தும் மோடி-அமித்ஷா காவிகளின் காலம் இது. அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வட இந்திய சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். இன்று வட இந்திய விவசாயிகள் மோடி-அமித்ஷா காவிகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
அன்றைய டெல்லி முற்றுகை 6 மாதம் காலம் நீடித்தது. ஆறு மாத காலத்திற்குத் தேவையான தயாரிப்போடுதான் இன்றைய டெல்லி முற்றுகையும் தொடர்கிறது. 1857 சிப்பாய்களின் டெல்லி முற்றுகையை நினைவுபடுத்துகிறது விவசாயிகளின் இன்றைய டெல்லி முற்றுகை.
25 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுமா? தோல்வியில் முடியுமா? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்யும். ஒரு போராட்டம் வெற்றி பெறலாம் அது தோல்வியிலும் முடியலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தியை உணர்த்தி விட்டுத்தான் செல்கிறது. இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்துவது என்ன?
இத்தகையச் சூழலில் வேளாண் சட்டங்கள் குறித்தும், டெல்லி முற்றுகை குறித்தும், அதன் அரசியல் தன்மை குறித்தும் நாம் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாயிகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைக் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்தி வருகின்றனர். 96,000 டிராக்டர்கள், 6 மாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன் 1.2 கோடி விவசாயிகள் டெல்லியின் நுழைவு வாயில்களை முற்றுகையிட்டுள்ளனர். சிறுவர், முதியோர், ஆண், பெண் என பலரும் குடும்பம் குடும்பமாகபோராட்டக் களத்தில் உள்ளனர்.
இந்திய தேசியக் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி( மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் என பலரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.
ஆங்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது கேல்ரத்னா விருதை திரும்பத் தரப்போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது பத்மவிபூஷண் விருதை ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டமத்திய அரசு குழுவினர் விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் ஏற்படாமல் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 33 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர்நீத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டிசம்பர் 21 அந்த நாடெங்கிலும் நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்கள்
1.விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்
2.விலை பொருள் உறுதி மற்றும் சேவைகள் சட்டம்
3.அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்
விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கும் என்கிறது மத்திய அரசு. இல்லை, இவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் பயனளிக்கும்; விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிரானது என்கின்றனர் சட்டத்தை எதிர்ப்போர். இவற்றில் எது உண்மை?
விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும் போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்றும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித தடையுமின்றி இந்தியாவெங்கும் இணையவழி மூலம் நேரடியாக விற்பனை செய்து கொள்ள முடியும் என்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் நுகர்வோருக்கும் பொருள் கிடைக்கும் என்றும் சட்டத்தை ஆதரிப்போர் தரப்பில் சொல்லப்படுகிறது.
விவசாயத்தில் ஈடுபடுவோரில் 75% பேர் சிறு குறு விவசாயிகள். கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப்பரட்சி, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவைகளால் இயற்கை வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் பயனடைந்தனர்; விவசாயிகளோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைகின்றனவோ அங்கெல்லாம் உணவு உற்பத்தி சங்கிலியின் கண்ணிகள் நொறுக்கப்பட்டு மொத்தமும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. உணவு உற்பத்தியில் தற்சார்பை ஒழித்துக்கட்டி, விவசாய உற்பத்தி முதல் மொத்த வணிகம், சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக இருக்கிறது.
உணவிற்கு இனி உத்தரவாதம் உண்டா?
உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு அடிப்படைத் தேவை. உணவு கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றால் உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவர் உயிர் வாழ்வதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பதால்தான் உயிர்வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம்.
விலை பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து இருப்பதால்தான் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவோ, மலிவு விலையிலோ கிடைக்கின்றன. இதை நம்பி இந்தியாவில் சுமார் 76 கோடி பேர் உயிர் வாழ்கின்றனர். அரசே நேரடியாக விளை பொருட்களை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது. இனி கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கார்ப்பரேட்டுகளே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதற்கும், நியாயவிலைக் கடைகளுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் 76 கோடி மக்களின் உயிர் வாழும் உரிமையும் ஊசலாடுகிறது.
வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் என இனி எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் பதித்து வைத்துக் கொள்ள முடியும். உணவு சேமிப்புக் கிடங்குகள் மூடப்படுவதால் புயல், பெருவெள்ளம், நில அதிர்ச்சி, வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அரசு கையறு நிலையில்தான் நிற்கும். அதிக விளைச்சல் இருந்தாலும் பதுக்கலுக்கு வழிவகுத்திருப்பதால் மக்களுக்கு எளிதில் பொருட்கள் கிடைக்காது. பேரிடர் காலங்களில் கார்ப்பரேட்டுகளிடருந்து அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கி மக்களைக் காக்க எந்த அரசும் முன் வராது. எனவே மக்களின் உயிர்வாழும் உரிமை மீண்டும் ஒரு முறை பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் இடிபாடுகளின் மீது கார்ப்பரேட்டுகளின் சேமிப்புக் கிடங்குகள்!
எம்.எஸ் சுவாமிநாதன் குழு முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவதாக சவடால் அடித்துதான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. 23 பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 7 பொருட்களை மட்டுமே அந்த விலைக்கு வாங்குகிறது. விளைவிக்கும் நெல், கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களில் 20-30 % பொருட்களை மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலைக்கு அரசு வாங்குகிறது. கிடங்குகள் நிறைந்து விட்டன என்று அரசு கைவிரித்து விடுவதால் மற்றவர்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்கத் தள்ளப்படுகிறார்கள். விளை பொருட்களை வாங்கிய கடனுக்காக கடன்காரனிடமோ அல்லது கமிஷன் மண்டிக்காரனிடமோதான் அவர்கள் கேட்கிற விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பனை வருகிறார்கள்.
ஒரு பக்கம் சில விளைபொட்களுக்கு கொள்முதல் விலையை அரசு சில சமயங்களில் உயர்த்துவதோடு சரி. ஆனால் பொருட்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்களைத் திறப்பதே இல்லை. அப்படியே திறந்தாலும் ஒரு சில நிலையங்களை மட்டும் திறப்பது என்பதை அரசு திட்டமிட்டே செய்கிறது. இதனால் வேறு வழியின்றி வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.
கொள்முதல் செய்த தானியங்களைக் கூட பாதுகாக்க வக்கற்றுப் போன அரகளைத்தான் நாம் இந்தியாவெங்கும் பார்த்து வருகிறோம். கொள்முதல் நிலையங்களில் பாழாகிப் போன அரிசி-கோதுமையைத்தான் நியாயவிலைக் கடைகளில் வழங்குகிறார்கள். அதைக் கொண்டுதான் நாமும் உயிர் வாழ்ந்து வருகிறோம்.
உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் சிறு குறு விவசாயிகள் இணையவழி மூலம் இந்தியாவெங்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகிறது மோடி அரசு. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில் இணையவழி மூலம் எவனுமே பொருளை வாங்க முன் வரவில்லை என்றால் விவசாயி என்ன செய்வான்? ஒன்று சாலையில் கொட்ட வேண்டும், இல்லை என்றால் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் அள்ளிக் கொடுக்க வேண்டும். 'உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அசலூரில் ஆணை பிடிக்கப் போனானாம்்' என்ற கதையாக உள்ளூரிலேயே குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத போது ஆன்லைன் மூலம் அகிலமெங்கும் விற்று லாபத்தை அள்ளலாம் என்று புதுமொழி எழுதுகிறது மோடி கும்பல்.
அனைத்து விளை பொருட்களையும் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து அரசாங்கமே கொள்முதல் செய்தால் அனைவருக்கும் பயன்படுமே! அதை விடுத்து இருக்கிற அரைகுறை கொள்முதல் முறையையும் ஒழித்துக் கட்டுவதால் யாருக்கு பயன்? அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளைத் தவிர? அதனால்தானோ என்னவோ கார்ப்பரேட்டுகள் நவீன சேமிப்புக் கிடங்குகளை கட்டி வருகிறார்கள். சன் குழுமம் கூட தொலைக்காட்சி மட்டும் நடத்தினால் போதாது, சேமிப்புக் கிடங்குகளையும் கட்டட்டுமே என்று அங்கலாய்க்கிறார் அக்கா வானதி.
நிலக்கிழார் எல்லாம் இனி கிழிந்த கோவணத்தோடு.....!
கால் காணி இருந்தாலே நிலக்கிழார் என்று மீசையை முருக்குபவன் நம்ம ஊர் விவசாயி. கஞ்சி குடிக்க வழி இல்லை என்றாலும் யார் முன்பும் கைகட்டி நிற்க மாட்டான். இனி.....?
சொந்தமாக தொழில் செய்யும் போதே சோத்துக்கு வழி இல்லை. இதுல ஒப்பந்த விவசாயமாம். நிரந்தரத் தொழிலாளியாக இருந்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாறும் ஒரு தொழிலாளியின் நிலையைப் போலத்தான் சொந்தமாக விவசாயம் செய்யும் ஒரு ஒப்பந்த விவசாயின் நிலையும் இருக்கும்.
ஏற்கனவே கரும்பு, உருளை, வாழை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் ஒப்பந்த முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. கரும்பை பெற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வட்டியோடு ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கரும்பு ஆலை முதலாளிகள் அதை மயிரளவுக்கும் மதிப்பதில்லை. இந்தியாவில் சுமார் 24,000 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் பாக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ 2300 கோடி அளவுக்கு பணம் வர வேண்டியுள்ளது. மோடியும் எடப்பாடியும் என்ன செய்து கிழித்தார்கள்? தற்போது கொண்டு வரப்படும் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் நெல்லுக்கும் கோதுமைக்கும் அப்படி பாக்கி வைத்தால் புதிதாக ஏதாவது கிழிக்கவாப் போகிறார்கள்?
சுயசார்பாய் இருக்கிற விவசாயிகளையும் முதலாளிகளின் கண்ணியிலே பிணைப்பதுதான் மோடியின் திட்டம். ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்த பிறகு உருளையில் ஓட்டை இருக்கிறது, நெல்லில் ஈரம் இருக்கிறது, கரும்பில் சாறு இல்லை, வேர்க்கடலையில் எண்ணெய் இல்லை, வாழையில் ருசி இல்லை; அதனால் ஒப்பந்த விலையைத் தர முடியாது என்று பிகு பண்ணினால் விவசாயி என்ன செய்வான்? கலெக்டர் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கி இளைத்துப் போவதைத் தவிர? அவன் இருப்பதையும் இழந்து கோவணத்தோடு கார்ப்பரேட்டுகள் முன்னால் கைகட்டி நிற்க வேண்டும், "ஐயா ஏதாவது பார்த்து குடுங்க" என்று!
ஜல்லிக்கட்டா? டெல்லிக்கட்டா?
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகளே நிறைந்துள்ளனர். ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கக் கூடியவைதான் புதிய வேளாண் சட்டங்கள். டெல்லி மட்டும் களை கட்டுகிறது. ஜல்லிக்கட்டைக் கண்ட தமிழகமோ தத்தித் தவழுகிறது. மற்ற இடங்களில் சுவடுகூட இல்லை. ஏன் இந்த நிலை?
நெருப்பைத் தொட்டவன், சுட்டதனால் சீறி எழுகிறான். மற்றவனோ பட்டால்தான் எழுவேன் என்கிறான். புதிய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் ஏற்கனவே பஞ்சாப், அரியானா விவசாயிகள் அனுபவித்து விட்டார்கள். அதனால் சீறுகிறார்கள். எஞ்சிய இந்தியாவோ கெஞ்சிக் கொண்டிருக்கிறது. பாடங்களிலிருந்து படிப்பினை பெறாதவன் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது.
தாக்குதல் பலமாக இருக்கும் போது அதற்கான எதிர்வினை.........?
ஏழ்மையில் உள்ள விவசாயிகளை உய்விக்கப்போவதாகவும், இடைத்தரகர்களிடமிருந்து அவர்களை மீட்கப் போவதாகவும் மோடி சொல்வதெல்லாம் உண்மையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்றுமில்லாத அளவில் அடிமைச் சேவகம் செய்து, எல்லை இல்லாத அளவில் விவசாயிகளைக் கொடுமையாகச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்வதுதான்.
1990களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளாலும், காட் ஒப்பந்தப்படி உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கிணங்க நமது நாட்டின் அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதை தீவிரப்படுத்தி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல். அதற்கு ஏற்ப தொழிலாளர் நலச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், மின்சார சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். சுரண்டலையேத் தொழிலாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளும், வேளாண்மையை இழிதொழில் என வரையறுக்கும் அதிகாரத்தில் உள்ள மனுவாதிகளும் இங்கே கை கோர்க்கிறார்கள். எதிர்ப்போரை ஈவிரக்கமின்றி அடக்குகிறார்கள், தாக்குகிறார்கள், வேட்டையாடுகிறார்கள். கார்ப்பரேட்டுகளும் காவிகளும் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
பாதிப்பை உணர்ந்தவர்கள் வீதிக்கு வருகிறார்கள். காவியின் ஒடுக்குமுறையை புரிந்துகொண்ட நாம் அன்று காளைகளாய் சீறி எழுந்து ஜல்லிக்கட்டு கண்டோம். கார்ப்பரேட்டுகளின் பாதிப்பை உணர்ந்தவர்கள் இன்று சிங்கங்களாய் கர்ஜித்து டெல்லிக்கட்டைக் காண்கிறார்கள்.
மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றுபவனே மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்; மக்களின் கோரிக்கைகளுக்கு, தேவைகளுக்குப் புறம்பாக தங்களது திட்டத்தை நிறைவேற்ற யார் முன் வந்தாலும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பார் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளி தோழர் ஸ்டாலின். வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு, தேவைக்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட்-காவி, மோடி-அமித்ஷா கும்பலை விரட்டி அடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக அவர்களை வீழ்த்தாமல் வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை. ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும் மொத்தமாய் சேர்ந்து மல்லுக்கட்டும் நாள் எந்நாளோ!
தமிழ்மணி