Sunday, 14 January 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?

பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. 

நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் கண்டவர்கள்.

மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயன்ற ஜோதிராவ்-சாவித்திரி பாய் புலேயின் போராட்டங்கள் இதைத்தான் உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் நீதிக் கட்சி, அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் கல்வியை பரவலாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைக்காக கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு திராவிட இயக்கங்களைக் குறை கூற புறப்பட்ட சங்கிக் கூட்டம், 

"திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குக் கல்வி கொடுத்ததா? அதற்கு முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கவில்லையா? சங்க இலக்கியங்களைப் படைக்கவில்லையா? பக்தி இலக்கியங்களைப் படைக்கவில்லையா?" என்று எதிர்வாதம் செய்கின்றனர். 

சில தமிழ் தேசிய அரைகுறைகளும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் இதை அப்படியே வாந்தி எடுக்கின்றனர். சீமானின் தந்தை யாக்கோபுவும், அவரது பாட்டடனும் முப்பாட்னும்,  ஏன் வள்ளுவனைப் போல, ஔவைப் பாட்டியைப் போல, கம்பனைப் போல  இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை? இலக்கியம் இருக்கட்டும், குறைந்த பட்சம் கைச்சாத்தாவது இடத்  தெரிந்ததா? இதற்கெல்லாம் விடை தேடாமல் விடலைத்தனமாக பேசுவதால் யாருக்கு இலாபம்?

தமிழ் செழித்து விளங்கியதும், சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதும் பார்ப்பனியம் கோலோச்சாத காலகட்டத்தில். ஒரு காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகம், இடையில் தற்குறிகளாக மாறியதற்கு பார்ப்பனியம்தான் காரணம்; சனாதனம்தான் காரணம் என்பதை மூடி மறைப்பதற்காக, திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கின்ற வேலையை சங்கிக் கூட்டம் செய்கிறது. 

இவர்கள் திராவிட இயக்கத்தை வசை பாடுவது என்பது, மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவையும் வசை பாடுவதற்கு ஒப்பாகும்.

சனாதன-பார்ப்பனிய எதிர்ப்பின்  அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இன்றளவும் இருப்பது திராவிட கருத்தியல்தான். திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டினால், பார்ப்பன எதிர்ப்பு மட்டுப் பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கருதுகின்றனர். 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரான, சனாதனக் கோட்பாடு, அதாவது இந்து மதக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது சாதியும், தீண்டாமையும் நீடிக்கும் வரை திராவிடக் கருத்தியல் தேவைப்படுகிறது. 

சாதியும், தீண்டாமையும் சரியானது, அவசியமானது, தேவையானது என்பதுதான் சனாதனத்தின் மையக் கருத்து. இதை மேலும் உயிர்ப்பிக்கவும் நிலைநாட்டவும் பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. அதை பார்ப்பனிய ஜனதா கட்சி என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். 

மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் பொற்காலம். இந்த 10 ஆண்டு காலத்தில் கோவில்கள் பெருகின. கோவில்கள் பெருகினால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும்தான் நிறையும்.

அரசு நடத்தும் ஆலைகளும், கல்விச்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நிறைவே பார்த்து விட்டோம்.

இத்தகைய மக்கள் விரோத, பார்ப்பன பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் பேசுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதற்கு ஒப்பாகும்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்? நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

ஊரான்