கோவில் குடமுழக்குகள்-திருவிழாக்கள், இளைஞர் மற்றும் நற்பணி மன்றங்களின் ஆண்டு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானங்கள், தமிழ் ஆர்வலர்களின் இலக்கியக் கூட்டங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பேரணிகள்-ஆர்ப்பாட்டங்கள்-பொதுக்கூட்டங்கள்-மாநாடுகள் என ஒவ்வொரு ஊரிலும் ஓராண்டில் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவைகள் அனைத்துக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிதிக்காக பெரும்பாலும் நம்பி இருப்பது வியாபாரப் பெருங்குடி மக்களைத்தான்.
வீடுகளிலும் அலுவலகங்களிலும் கூட ஒரு சிலர் நிதி வசூலிக்கின்றனர். அங்கே நிதி இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த வீட்டிற்கும், அடுத்த நபரிடமும் சென்று விடுகின்றனர். ஆனால், கடைவீதிகளில் அப்படி அல்ல. எந்த ஒரு வியாபாரியும் குறிப்பாக சிறு வியாபாரிகள் நிதி இல்லை என்று அவ்வளவு எளிதாகச் சொல்லி விட முடியாது. பெரும்பாலும் பெரிய கடைகள்-மால்களில்தான் முதலாளி இல்லை என்று சொல்லி நிதி தர மறுத்து விடுவார்கள்.
ஒவ்வொரு தனி நபருக்கும் ஏதோ ஒரு கொள்கையில் பிடிப்பு இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள் தங்களது கொள்கைக்கு ஏற்புடையவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிதி கொடுப்பார்கள். மாறாக எதிர் கருத்து உள்ள நிகழ்ச்சிகளுக்கு நிதி தர மறுத்து விடுவார்கள். அது அவர்களின் உரிமை. அவர்களிடம் சண்டை போட்டு எல்லாம் நிதி வாங்க முடியாது. யார் நிகழ்ச்சி நடத்தினாலும் அது மக்களுக்கானதாக இருந்தாலும் கூட நிதி தர மறுப்பவர்களும் உண்டு.
நிதி தருகின்ற தனி நபர்கள், வியாபாரிகள், முதலாளிகள் இவர்களில் எத்தனை பேர் நியாயமானவர்கள்? சுரண்டல்-வரி ஏய்ப்பு மற்றும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடாதவர்கள் என்பதைக் கண்டறிவது கடினம். இவற்றையெல்லாம் கண்டறிந்து நிதி வாங்கினால் நிதி கொடுப்பவர்கள் சொற்பமானவர்களாகவே எஞ்சி இருப்பர்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூர் கடை வீதியில் ம.க.இ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் முடியும் தருவாயில் பார்வையாளர்களிடமும் அருகில் இருந்த கடைகளிலும் நிதி வசூல் செய்த போது, அந்தப் பகுதியில் இருந்த பிராந்திக் கடையிலிருந்து கணிசமானத் தொகையை நிதியாகக் கொடுக்க முன் வந்த போது அதை வாங்கத் தோழர்கள் மறுத்து விட்டனர். பொதுக்கூட்டத்தால் கவரப்பட்டுதான் அவர் நிதி கொடுக்க முன்வந்துள்ளார், மாறாக கைமாறு எதையும் எதிர்பார்த்து அல்ல என்பது தெரிந்தும் அந்த நிதியை தோழர்கள் மறுத்ததற்குக் காரணம், சாராயக் கடைகளிலும், வட்டிக்கடைகளிலும் நிதி பெறுவதில்லை என்கிற ம.க.இ.க கடைபிடித்துவந்த நடைமுறைதான்.
நகரங்களில், பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு சில இடங்கள் மட்டும்தான் காவல்துறையினரால் தேர்வு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அத்தகைய இடங்களில் அடிக்கடி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவதனால் அந்தப் பகுதி வியாபாரிகளிடம்தான் அடிக்கடி நிதி வசூல் செய்கின்றனர். இப்படி அடிக்கடி தங்களிடமே நிதி வசூல் செய்தால் தங்களால் எவ்வளவுதான் தர முடியும் என்ற நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர். அதேபோல ஒவ்வொரு வியாபாரிக்கும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கான கொள்கைகளும் கருத்துக்களும் இருக்கத்தானே செய்யும். அதன் அடிப்படையில் அவர்கள் நிதி கொடுக்க முன்வருவதும் அல்லது மறுப்பதும் அவர்களுக்கு இருக்கும் உரிமைதானே? ஆனால் அந்த உரிமையை வியாபாரிகள் கடைபிடிக்க முயலும் போது சலசலப்புகள் ஏற்படுவதும் உண்டு. அண்மையில் சேலத்திலும், மதுரையிலும் இதுபோன்ற சலசலப்புகள் நடந்ததாக சமூக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.
எல்லாக் கட்சிகளும், இயக்கங்களும் தாங்கள் வசூலிக்கின்றத் தொகையை நேர்மையான முறையில் கணக்கை சரிபார்த்து முறைப்படுத்திக் கொள்கிறார்களா என்றால் அதிலும் முறைகேடுகள் நடப்பதுண்டு. குறிப்பாக கட்சிகள் இயக்கங்களில் உள்ள ஒருசில பிழைப்புவாதிள் தாங்கள் வசூலிக்கின்ற தொகையை கணக்குக் காட்டி முறையாக ஒப்படைக்காமல் வசூலித்தத் தொகையை ஆட்டையைப் போடுவதும் உண்டு. நான் அங்கம் வகித்த ஒரு குழுவில் இருந்த ஒரு நபர் இப்படி தொடர்ந்து நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதை என்னால் காண முடிந்தது. வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து ஒரு சிலர் வெளியேறிய தருணம் அது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்து அந்த நபரிடம் நான் கேள்வி எழுப்பிய போது, இனியும் இங்கே குப்பை கொட்ட முடியாது என்பதை அறிந்து அந்த 'அழகர்', 'வினவு' அணிக்குத் தாவி விட்டார். மேற்கண்ட நபர்களின் மோசடிகள் சொற்பமாக இருந்தாலும் அது சமூக மாற்றத்திற்காக செயல்படும் ஒரு இயக்கத்தையே அரித்துத் தின்றுவிடும்.
பெரு வியாபாரிகள் மற்றும் முதலாளிகளிடம் லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி வசூல் செய்து சுகபோகமாக வாழ்கின்ற ஒரு சில குட்டித் தலைவர்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கோவையை மையமாக வைத்து கட்சி நடத்துகின்ற ஒரு சங்கி, தூத்துக்குடியில் நடைபெற்ற தனது கட்சியின் சனாதன மாநாட்டைக் காரணம் காட்டி, இராணிப்பேட்டையில் ஒரு முதலாளியிடம் 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெற்றுச் சென்றுள்ளான். எங்கோ இருக்கிற ஒருவன் எங்கோ நடந்த ஒரு மாநாட்டிற்கு இங்கே வந்து ஐந்து லட்சம் ரூபாயை ஆட்டையை போட்டுள்ளான் என்றல்லவா இராணிப்பேட்டைக்காரனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.
ஒருவர், தான் கொடுத்த நிதி உண்மையில் பயனுள்ள வகையில் மக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்றால் அதில் அவர் மன நிறைவு பெறுவார். மாறாக, அதை ஒரு சிலர் ஆட்டையப் போட்டது தெரிந்தாலோ அல்லது குடி-கும்மாளம் என வீணாகச் செலவழிக்கப்பட்டாலோ, இதை அறியும் நிதி கொடுத்த நன்கொடையாளர் பெரிதும் வருந்துவது மட்டுமல்ல அடுத்த முறை நிதி கொடுப்பதற்கும் தயங்குவார். நிதி கேட்பவன் ஒரு மோசடிக்காரன் என்று தெரிந்தும் ஒருவர் நிதி கொடுக்கிறார் என்றால் அவர் பிரதிபலன் எதையோ எதிர்பார்க்கிறார் என்றுதான் பொருள். சமூக மாற்றத்திற்காக பாடாட்டுகின்ற இயக்கங்கள் பிரதிபலனை எதிர்பார்க்கும் நபர்களிடம் நிதி பெறுவதும் ஏற்புடையதல்ல.
எனவே, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் தாங்கள் வசூலிக்கின்ற தொகையை முறையாகக் கணக்கு வைத்துக்கொண்டு நியாயமான முறையில் செலவழிப்பதும், நிதி கொடுப்பவர்கள் தாங்கள் கொடுத்த நிதி உண்மையிலேயே சரியான முறையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதும் அவர்களின் உரிமையாகும்.
என்ன காரணத்திற்காக நிதி தேவை என்று பிரசுரம் அடித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிதி வசூலித்தார்களோ, அதுபோலவே, அது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதையும் முறையாக நிதி கொடுத்தவர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பது அவர்களின் கடமையும் ஆகும்.
தமிழ்மணி
x