Saturday, 2 November 2024

தமிழ்த் தேசியத்தை ஒடுக்குவது ஒன்றியமா? திராவிடமா?

மரபியல் ரீதியாக தமிழ் இனம் மிகவும் மூத்தது, தொன்மையானது என்பதில் இருவேறு கருத்துக்கு இடல்லை. ஆனால், இன்று பேசப்படும் தமிழ்த் தேசியம் அன்றே பேசப்பட்டது போல ஒரு கருத்தை ஏற்படுத்த சீமான், மணியரசன் உள்ளிட்ட ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். 

தேசிய இன உருவாக்கம் என்பதே இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

மரபின அடிப்படையை வைத்து ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனம் என்று வரையறுப்பதில்லை. ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனமாக கருதப்பட வேண்டுமேயானால் அதற்கு, 

ஒரு பொது மொழி, 

பொதுவான ஒருங்கிணைந்த எல்லைப் பிரதேசம்,

ஒருங்கிணைந்த பொருளாதார வாழ்வு,

பொதுவான மன இயல்பு அல்லது பண்பாடு 

என்கிற நான்கு வரையறைகளும் இருக்க வேண்டும். இதில், எந்த ஒரு வரையறை குறைந்தாலும் அந்த மக்கள் கூட்டம் தேசிய இனமாகக் கருதப்பட மாட்டாது. 

இந்திய ஒன்றியம், தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பார்கள். இதில் தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவழி மாநிலங்கள் அனைத்தும் அடங்கும். 

தமிழ் நாட்டில், தமிழ்த் தேசியம் பேசினால்தான் அரசியலிலும் நீடிக்க முடியும் என்பதால்தான் பலரும் இன்று தமிழ்த் தேசியம் பேசுகின்றனர்.  இந்திய ஒன்றியத்திலிருந்து, தமிழ் நாட்டை தனியாகப் பிரித்து "தனித் தமிழ்த் தேசியம்" அமைப்போம் என்று பேச, தமிழ்த் தேசியம்  பேசும் எவருக்கும் துணிவில்லை என்பதிலிருந்து இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் வெற்றுக் கூச்சல் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். 

இந்திய ஒன்றிய சிறைக் கூடத்திலிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்டு, தனியரசு அமைப்போம் என்று எவராவது பேசினால் அவர் ஜெயில் கூடத்தில்தான் இருக்க முடியும் என்பதில் இவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அதனால்தான் திராவிடத்திடமிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்பேன் என்று மண்குதிரையில் சவாரி செய்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை ஒடுக்குவது திராவிடமா? இந்திய ஒன்றியமா? 

"எடப்பாடி ஆண்டபோது திராவிடம், தமிழ்த் தேசியத்தை ஒடுக்கவில்லை. ஆனால், கலைஞரும், ஸ்டாலினும் ஆளும் போது மட்டும்தான் திராவிடம், தமிழ்த் தேசியத்தை ஒடுக்குகிறது." 

இப்படித்தான் தேசிய இன அரசியலை மிகத் தவறாக, தமிழக மக்களிடையே பரப்பி வருகின்றனர். தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தவிர இதில்  வேறு வெங்காயம் எதுவும் இல்லை.

தேசிய இனம் குறித்த ஒரு தொடர் கட்டுரையை சமூக ஊடகங்களில் நான் தொடர்ந்து மீள் பதிவு செய்து வருகிறேன். கூடுதல் விவரங்களுக்கு அந்தத் தொடரைப் படிக்கலாம்.

தமிழ்மணி