இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டை நெருங்க உள்ளதாம். மா-லெ இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் புரட்சி முன்னேறவில்லையாம். இனி மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையில் இந்தியப் புரட்சியை முன்னெடுக்கப் போகிறார்களாம். இப்படி அன்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது வினவு கும்பல்.
மகஇக முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் விலகளையொட்டி கட்சி அணிகள் தொடுத்த கேள்விக் கணைகளைக் கண்டும், 'பெல் சிட்டி' ஊழலுக்கு பழைய தலைமை துணை போனதால் எழுந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் திராணியற்று, பெரும்பான்மைக் கருத்தை ஏற்க மறுத்து, கட்சியை விட்டு ஓடிய பழைய தலைமையோடு ஓடியவர்கள்தான் இந்த வினவு கும்பல். அதன் பிறகு கட்சிப் பணத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் அவர்களும் பிளவுண்டு. போனார்கள்.
இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, ஏதோ கட்சியில் வலது சந்தர்ப்பவாதப் போக்கு வந்ததனால்தான் கட்சிப் பிளவுபட்டதாகக் கதை அளக்கிறார்கள்.
தோழர் மருதையன் விலகளை தவறாகக் கையாண்ட பழைய தலைமை, அதே நேரத்தில் அப்பொழுது எழுந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளரின் 'பெல் சிட்டி' ஊழலுக்கு துணை போன பழைய தலைமை ஆகிய இரு காரணங்களுக்காகத்தான் பழைய தலைமை அமைப்பை விட்டு ஓடி தனியாகச் செயல்பட்டது. இதுதான் பிளவுக்கு அடிப்படையான காரணம். இவையெல்லாம் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
தங்களை மிகப்பெரிய சித்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்வதற்காக அமைப்பில் வலது திசைவிலகல் தோன்றியதுதான் பிளவுக்குக் காரணம் என பழைய வெங்காயத்தையே தொடர்ந்து உரித்துக் கொண்டிருக்கிறது இந்த வினவு கும்பல். வினவு தளத்தை பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக நயவஞ்சகமாக வினவு இணைய தளத்தை கைப்பற்றிக் கொண்டது இந்த சதிகார கும்பல்.
இவர்கள் உரிக்கின்ற இதே வெங்காயத்தைத்தான் இவர்களிடமிருந்து பிரிந்து போன 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' என்ற பெயரில் செயல்படும் இன்னொரு குழுவும் உரித்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் இந்தியப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறித் திரிகிறது.
ஒரு கட்சி அல்லது குழு என்று சொன்னால், அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது அமைப்பு பிரச்சனையாக இருந்தாலும் அதில் பல நூறு கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் பெரும்பான்மைக் கருத்து எதுவோ அதை ஏற்றுக்கொண்டு, அந்த அமைப்பிலேயே தொடர்ந்து செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும்.
சிறுபான்மை கருத்து உடையவர்கள் தங்களுடைய கருத்தின் நியாயத்தை, அந்த அமைப்பிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி அவர்களுடைய கருத்தைப் பெரும்பான்மையாக்குவதற்கு முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். அதை விடுத்து எடுத்தேன் கவித்தேன் என்று சிறுபான்மை கருத்து உடையவர்கள் வெளியே சென்று தனியாக செயல்படுவது புரட்சிக்கும் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும்.
ஒருவேளை சிறுபான்மையாய் இருந்தாலும், தாங்கள்தான் மிகப் பெரிய அதிபுத்திசாலிகள் என்று கருதி வெளியேறும் பட்சத்தில், வெளியேறிய பிறகு வேறு ஒரு புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். ஆனால் இந்தச் சிறுபான்மை வினவு கும்பலோ, கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகளான மகஇக, மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்கிற பெயரிலேயே செயல்பட்டு, பிற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிற அளவுக்குத்தான் இவர்களுடைய அரசியல் புரிதலும் இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்கள் அரசியலில் கன்றுக்குட்டிகளாக இருந்து கொண்டு, புதியவர்களிடம் பழைய வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறித் திரிகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அரசியலை மாற்றிக் கொள்பவர்களுக்கு பழைய அமைப்பு பெயர்களைப் பயன்படுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை.
வினவு கும்பலில் எஞ்சி இருக்கின்ற புரட்சியை நேசிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற தோழர்கள், அந்தக் கும்பலை விட்டு வெளியேறி தோழர் கோவன், ராஜூ தலைமையிலான தாய் அமைப்பில் இணைந்து செயல்படுவதுதான் இன்றைய காலத்தின் தேவை. இல்லையேல், வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, போராட்டம் வழக்கு, கைது, சிறை உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டு செய்கின்ற அத்தனை அர்ப்பணிப்புகளும், தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போகும். இதை இப்போது அவர்கள் உணர முடியாது. 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர முடியும். இதுதான் பழைய தோழர்களின் அனுபவம்.
வினவோடு இருந்து வீணாய்ப் போக வேண்டாம் என்று வேண்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. வினவு கும்பலிடம் இருந்து பிரிந்து போன மற்றொரு சிறுபான்மை கும்பலான 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' தோழர்களுக்கும் இந்த வேண்டுகோளை சேர்த்தே முன்வைக்கிறேன்.
பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிளவுண்டு கிடக்கும் எல்லா மார்க்சிய - லெனினிய குழுக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.
ஒரு சிலரின் அரசியல் அரிப்புக்காக பல நூறு தோழர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. யாரையும் புண்படுத்துவதற்கோ மட்டம் தட்டுவதற்கோ அல்ல.
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்