Thursday, 31 August 2023

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம், புரட்சி, அதற்கான கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகள், நிலவுகின்ற அரசியல் சூழலில் பாசி எதிர்ப்பு மற்றும் அதற்கான ஐக்கிய முன்னணி அல்லது மக்கள் முன்னணி பற்றி இன்று எண்ணற்ற அமைப்புகள் பேசி வருகின்றன.

தங்களுடைய அமைப்புகளின் கோட்பாடு மற்றும் நடைமுறை, உண்மையில் அறிவியல் பூர்வமானதா என்பதைப் புரிந்து கொள்கிற ஆற்றல் இந்த அமைப்புகளில் உள்ள அணிகளில் பலருக்கும் இல்லை என்றாலும், தங்களுடைய அமைப்பு மட்டும்தான் மிகவும் சரியானது என நம்பி இவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாகக் களமாடி வருகின்றனர். 

மேற்கண்ட இயக்கங்களின் நீண்ட காலத் திட்டம் மற்றும் உடனடித் திட்டம் குறித்த ஆவணங்களைப் பரிசீலித்தால் மட்டுமே அத்தகைய அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். ஒரு சில அமைப்புகளைக் தவிர, பெரும்பாலான அமைப்புகளுக்கு அத்தகைய ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நிற்க, இன்று வெளிப்படையாகச் செயல்படுகின்ற சில அமைப்புகளின் தலைவர்கள், திடீர் என்று வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல; மாறாக, ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து, சில கருத்து வேறுபாடுகளுக்காக வெளியே வந்து, தனி அமைப்பு கண்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அமைப்புகளைக் குறைகூறிவிட்டு இவர்கள் வெளியே வந்தார்களோ, அந்த அமைப்புகளோடு இன்று கூட்டு நடவடிக்கை வேறு! இது கேளிக்கூத்தாக இல்லையா என்பதை வெளியே வந்தவர்களும் பரிசீலிப்பதில்லை; தாய் அமைப்பினரும் பரிசீலிப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், இதை கலைப்பு வாதம் என்றுகூட இவர்கள் முத்திரை குத்தக்கூடும். 

கனவுலகில் தலைவர்கள்

இப்படி, தாய் அமைப்பை விட்டு வெளியே வந்த பிறகு,  புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மார்க்ஸ்-லெனின்-பெரியார்-அம்பேத்கர் ரேஞ்சுக்குத் தங்களை நினைத்துக் கொள்கின்றனர். நினைக்கட்டும், அது அவர்களது உரிமை. ஆனால், ஒரு பெயர்ப் பலகை அமைப்பை வைத்துக் கொண்டு, இவர்கள் ஆடுகின்ற ஆட்டம்தான் சகிக்க முடியவில்லை. 

தாய் அமைப்பின் கோட்பாடு-நடைமுறையை குறைகூறி விட்டு வெளியே வந்த இவர்களது புதிய கோட்பாடும், நடைமுறையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிற அளவுக்குப் போதியத் தரவுகளோடு இருப்பதில்லை. கோட்பாடே இல்லாமல் நடைமுறையில் இருப்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

தாய் அமைப்பை அவதூறு செய்துவிட்டு வெளியேறி, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு ,கோட்பாட்டுத் தெளிவையும் பெறாமல், தாய் அமைப்பு என்ன செய்ததோ அதையே இவர்களும் தொடர்ந்து செய்வது என்பதுதான் நூற்றுக் கணக்கில் உள்ள உதிரி அமைப்புகளின் தற்போதைய நிலைமை. 

புகழ் நாட்டம்

நக்சல்பரி என்ற சொல்லை பல அமைப்புகள் கைவிட்ட நிலையில், இரகசிய கட்சி-ஆயுதப் புரட்சி என்ற சொல்லாடல்களை சில அமைப்புகள் கைவிட்டு தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கேற்கும் நிலையில்-இதை நான் குறையாக இங்கே குறிப்பிடவில்லை- முற்போக்கு இயக்கங்கள் மீதான அரசின் அடக்குமுறை முன்பு போல் இன்று இல்லை என்பதாலும், சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் தனிநபர் புகழ் நாட்டம் காரணமாகவும், இத்தகையோர் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக அவதாரம் எடுத்துள்ளனர். இனியும் புதிய அவதாரங்கள் வரக்கூடும். மக்களின் பின்தங்கிய அரசியல் புரிதல் காரணமாகவும், தாங்கள் சார்ந்த சாதி-மத-இன-மொழி அடிப்படையிலான ஈர்ப்பு காரணமாகவும் இத்தகையோரை சிலர் ஆதரிப்பதுதான் இவர்களின் பலம்.

உண்மையிலேயே வாய்சவடால் அடிக்கும் பல பெயர்ப்பலகை  உதிரி அமைப்புகளை அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில் அதைச் செய்வது, பாசிச சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது. இருந்தாலும், இந்த உதிரி அமைப்புகளின் நீண்ட கால-உடனடித் திட்டம் குறித்தவைகள் மீது அணிகளிடையே விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் மார்க்சியத்தின் பெயராலும், தமிழ் தேசியம் என்ற பெயராலும், அம்பேத்கர்-பெரியாரின் பெயராலும் இன்று நூற்றுக்கணக்கில் செயல்படும் உதிரி அமைப்புகள், நாளை மேலும் பெருகினால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் பலம்பெறவே உதவும்.

தமிழ்மணி

Friday, 25 August 2023

நாங்குநேரி பள்ளி மாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

இந்து மதமும் சாதிய வன்மமும்

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. 

அதுதான் நாங்குநேரியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த சக மாணவனையே, இடைநிலைச் சாதியினரான மறவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் கொடும் ஆயதங்களைக் கொண்டு வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தக் காரணமாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் இந்து மதத்தின் சாதிய வன்மத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. இக்கொடியத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இத்தகையத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

கிராமமோ நகரமோ, ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மதச் சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியதாகும்.

நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம்,  நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல், சக மாணவர்களே வீடு புகுந்து தலை முதல் கால் வரை செதில் செதிலாக வெட்டிய கொடூரத்தைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்  ஒருங்கிணைப்பில்  25.08.2023, வெள்ளி மாலை 5.30 மணிக்கு வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கம் (இணைப்பு/பு.ஜ.தொ.மு), தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் உணர்வு பூராவமாகப் பங்கேற்றனர்.


மகஇக, வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகஇக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாநகர-மாவட்டச் செயலாளர் தோழர் பிலிப், விசிக திருப்பத்தூர்-வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சஜன் குமார், கிருத்துவ சமூக நீதிப்ண பேரவை மாநில துணைச் செயலாளர் தோழர் ஆல்பர்ட் ஜெயராஜ், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழுத் தோழர் சா.குப்பன், AICCTU மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலைதோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசா சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் தோழர்.செல்வம்மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திக், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினார். 

இடையிடையே, சாதி மற்றும் காவிப் பாசிசத்திற்கெதிரான பாடல்கள், சிறுவர்கள் பங்கேற்புடன் பாடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிகரமான முழக்கங்கள் உணர்வு பூர்வமாக எழுப்பப்பட்டன. 

இறுதியாக, தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் தோழர் சரவணன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது

சஜன் குமார்

ஆல்பர்ட் ஜெயராஜ்

சா.குப்பன்

பிலிப்


கார்த்திக்



தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

Saturday, 19 August 2023

விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாடு: நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நிற்பதில்லை! தொடர்-2

பேரணி

மாலை மணி நான்கைக் கடந்தும் தலையை கிறுகிறுக்க வைக்கும் கடும் வெயில், தஞ்சை ரயிலடி முகப்பில் படர்ந்திருந்த பல்மர நிழலில் தோழர்கள் செங்கொடியுடன் சற்றே இளைப்பாற, மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரிவாளைப் பிடித்த கைகளுடன்கூடிய கொடிகள் உயர்ந்த போது ரயிலடியே செங்கடலாய் காட்சியளிக்க, அலை அலையாய் தோழர்கள் அணியமாக, அதுவரை நிழல் தந்து மரங்கள் எல்லாம் மௌனித்தன.

சிறுநகர் "இசைச் சமர்" கலைக்குழுவின்  தாரைத் தப்பட்டைகள் முழங்க, தருமபுரி-கிருஷணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தோழர் இராமலிங்கம் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைக்க, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் செங்கடல் நகரத் தொடங்கியது. கடலே நகரும் போது தஞ்சை மட்டும் அதிராதா என்ன?

மூன்றில் ஒரு பங்கு மகளிர், கைக் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர்கள் என குடும்பம் குடும்பமாய் மாந்தவினத்தின் பருவமனைத்தும் கைகோர்த்த கண்கொள்ளாக் காட்சியால் தஞ்சையே வியந்தது. 

அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள் சங்கங்கள் சார்பாக பேரணி-மாநாடுகள் என்றால் பெரியவர்கள் மட்டுமே பங்கேற்பதுதான் தமிழ்நாட்டு வழக்கம்.
ஆனால், 1980 களிலேயே இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து, மாநாடுகளிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மறியல்களிலும், கைது சிறை என்றாலும் அதற்கும் அஞ்சாது, குடும்பம் குடும்பமாய் அலை அலையாய் மக்களைத் திரட்டும் புதியதொரு பரிமாணத்தை உருவாக்கியது மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயி விடுதலை முன்னணி உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்தான் என்றால் அது மிகையல்ல.

வீரவணக்கம்! வீரவணக்கம்!
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தெலுங்கானாவில் நக்சல்பாரியில்,
வடாற்காட்டில் தருமபுரியில், 
புன்னப்புராவில் வயலாரில்,
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக,
இன்னுயிர் ஈந்தத் தோழர்களே!
நக்சல்பாரித் தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!


தோழர்களின் நரம்புகளை முறுக்கேற்றும் மந்திர முழக்கங்கள் இவை. மெய்சிலிர்க்கும் இம்முழக்கங்கள் கேட்போரை திகைக்க வைக்கும். மார்ச்சிய-லெனினிய பொதுவுடமைப் போராளிகளை நக்சலைட்' என்ற கிலியூட்டும் வசைச்சொல்லாக ஆளும் வர்க்கம் அதை மாற்ற முயன்ற போது, இல்லை, இது நக்சல்பரிஎன விளித்து அதை மக்கள் மொழியாக மாற்றியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.
 
அகவை அறுபத்தைந்து ஆனாலும், ஆண்டுகள் பல கழித்து, முன்களத்தில் முழங்கி வந்தேன் இறுதிவரை; பின்புலத்தில் அணித்தோழர்கள் முழங்க! இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.
 
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சங்கமித்தது செங்கடல். விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் இராமலிங்கம் அவர்கள் கொடியேற்ற, மாலை ஆறு மணிக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டம்
 
பொதுக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற, விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கம்பம் மோகன் அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டவாறு, பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வதைப் போல தமிழகத்தின் பல் முனைகளிலிருந்தும்  தோழர்கள் காவிரிப் படுகையை நோக்கிப் பாய்ந்ததால்தான் திடலே நிரம்பி வழிந்ததோ!
 
விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராவணன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் சாமி நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – CPM), தோழர் மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர், CPI), தோழர் சுந்தர் மோகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மகா சபை), தோழர் பழனி ராஜன் (சமவெளி விவசாயிகள் பாசன சங்கம்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), தோழர் சின்னதுரை (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்றது) உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.



விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர் காளியப்பன் (பொருளாளர், மக்கள் அதிகாரம்), தோழர் இராவணன் (இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்), தோழர் அன்பு (மாநிலச் செயலாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி), தோழர் பழனி (தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 
SKM அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான புருஷோத்தம் சர்மா மாநாட்டில் சிறப்புரையாற்றினார். SKM-இன் தமிழ்நாடு தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெங்களூர் வழக்கறிஞர் தோழர் பாலன் வராத குறையை, மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் ராஜூ அவர்கள் தனது எழுச்சி உரையின் மூலம் ஈடு செய்தார்.
 
பொருளாதார கோரிக்கைகளை பெறுவது மட்டுமல்ல, மாறாக நிலம், அதிகாரம், ஜனநாயகம் கோரும் அரசியல் உரிமையும் விவசாயிகளின் விடுதலைக்கு அடிப்படையானவைகளாகும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் போடி செல்வராஜ் அவர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.
 
மாநாட்டுத் தீர்மானங்களை விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவி அவர்கள் வாசித்தார்.

கலைநிகழ்ச்சி
 
இடையிடையே பாடல்கள் பாடிய கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழுவினர், இறுதியில் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சியை நடத்தி முடிக்க, பாட்டாளி வர்க்க  சர்வதேசிய கீதத்துடன் மாநாடு-பொதுக்கூட்டம் இரவு பத்து மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

நூல் வெளியீடு
 
மாநாட்டில் விவசாயப் புரட்சியும் மக்கள் திரள் பாதையும் தோழர் ரங்கநாதன் வாழ்க்கைப் பயணம் என்கிற நூலை காரப்பட்டு தோழர் ஏழுமலை அவர்கள் வெளியிட,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலாக்கம் குறித்து காரப்பட்டு தோழர் அம்பேத்கர் அவர்கள் விளக்கினார். (இந்நூல் குறித்துத்  தனி பதிவு ஒன்றை எழுத உள்ளேன்).
 
இயற்கை உபாதைகளுக்காக ஒரு சிலர் எப்போதாவது இருக்கைகளை விட்டு எழுவதைத்தவிர, ஆயிரக்கணக்கானோர் நான்கு மணி நேரம் அசையாமல், அசராமல் அமரந்திருப்பதை மகஇக-விவிமு கூட்டங்களில்தான் காணமுடியும். தேநீரோ, சுண்டல், பொறி-கடலையோ, எதுவும் இங்கே திடலுக்குள் நுழையாது என்பதால் பார்வையாளர்களின் கவனம் சிதறாது.  ஏன்? கைபேசியை நோண்டினாலே தொண்டர்கள் எச்சரிக்கை செய்வர். அவ்வப்பொழுது நாவை நனைக்க அயராமல் தொண்டர்கள் கொடுக்கும் குடிநீர் மட்டும்தான் இங்கு ஆகாரம். சிறுவர்களைக்கூட கூட்டம் சுண்டி இழுத்துக் கொள்ளும்.

அறிவுப் பசிக்கு கீழைக்காற்றும், உணர்வுப் பசிக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணைநல்லூர் மூத்த தோழர் ஏழுமலை தொடங்கி வைத்த ஓவியர் முகிலனின் "ஓவியக் காட்சியும்" திடலில் தடம் பதித்தன.
 
புதிய அரசியலை மட்டுமல்ல புதிய பண்பாட்டையும் கைக்கொள்ளும் கூட்டமிது என்பதனால் மதுப்பிரியர்களை இங்கே காண முடியாது. அதனால் திடல் ஓரங்களில், திரைமறைவுகளில் கண்ணாடிக் காடுகள் முளைப்பதில்லை. இதனால்தானே காலை மற்றும் பகல் உணவை முடிக்க, மரத்தடியை நாடாமல் கோயிலடியை எங்களால் நாட முடிந்தது.
 
மாநாடு முடிந்த பிறகு, அவரவர் கொண்டு வந்த கலவை உணவை பகிர்ந்துண்ண, எமக்கோ பாலாவும் ராஜனும் இட்டிலியை பகிர்ந்தளிக்க, பசியாறினோம்.
காலை நேரப்பயணம்-பேரணி-பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வால் இரவு பதினோரு மணிக்கு உடல் ஓய்வை நாடினாலும், மாநாட்டு அனுபவத்தை அவரவர் பகிர்ந்த பிறகு, பேருந்துச் சன்னல்களின் மென்காற்று உடலை வருட ஊர் நோக்கிப் பயணமானோம்.
 
'பெல் சிட்டி' ஊழல்வாதிகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு சிறு கூட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கையும் களவுமாய் பிடிபட்டபோது, அணிகளின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடியதால் இடையில் ஒரு சிறு சலசலப்பு; சற்றே சலிப்பு. உண்மைகளை உணர்ந்தோர் ஓர் அணியில் ஆயிரமாயிரமாய் இங்கே; உணராத அச்சிறு கூட்டம் மேலும் பிளவுண்டு, கேள்வியாய், கனலாய் சீந்த நாதியற்று நடுத்தெருவில்
 
நடுத்தெருவில் நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுமா என்ன?

முற்றும்
 
தமிழ்மணி
 

தொடர்புடைய பதிவுகள்


தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1


நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?



Wednesday, 16 August 2023

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் பெயரில், தமிழகத்தில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன. 80% பேரைக் கொண்ட ராஜூ தலைமையிலான அணிதான் உண்மையான மக்கள் அதிகாரம் என்ற உண்மை தெரிந்தும்கூட, மற்ற இரண்டு சிறுபான்மை கோஷ்டிகளும் மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதால் குழப்பம்தான் நீடிக்கிறது. தோழர் ராஜூ தலைமையிலான அணியினர்தான் பெரும்பான்மை அணியினர் என்பது 13.08.2023 அன்று தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணியின் பேரணியும் மாநாடும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. 

எனவே, கூட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படும் சிறுபான்மை கோஷ்டிகளிடம் இதுகுறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். சிறுபான்மை கோஷ்டிகளான வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்டிகள் தங்களது அமைப்புப் பெயரை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களைக் கூட்டு நடவடிக்கைகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லாத சூழலில் அவர்களை அழைக்கும் போது, குறைந்தபட்சம் மக்கள் அதிகாரம் (வெற்றிவேல் செழியன் பிரிவு), மக்கள் அதிகாரம் (முத்துக்குமார் பிரிவு)  என்றாவது பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் போட வேண்டும் . சமூக வலைதளங்களிலும் அவ்வாறே தெரிவிக்க வேண்டும்.


இன்று, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களில் செயல்படுவோர், ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து வெளியேறி வந்தவர்கள்தான். அவ்வாறு வந்தவர்கள், தங்களது தாய் அமைப்பின் பெயரிலேயே செயல்படுவதில்லை; மாறாக, புதியதொரு அமைப்புப் பெயரில்தான் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், ஒரு பிரிவினர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" என்ற பெயரிலும் மற்றொரு பிரிவினர் "பாட்டாளி வர்க்க சமரன் அணி" என்ற பெயரிலும்தான் செயல்பட்டு வருகின்றனர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" தோழர்களும் அதன் பெயரிலேயே செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தனித்தனியாக இருந்த போதிலும், பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் ஏற்பாடு செய்கின்ற கூட்டு நடவடிக்கைகளில் மேற்கண்ட மூன்று பிரிவினரும்கூட அதில் பங்கேற்கின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு பிளவுபட்ட அதே காலகட்டத்தில் நடந்தவைதான் மேற்கண்ட எடுத்துக்காட்டும்.

இத்தகைய கள நிலவரம் தெரிந்தும், வெற்றிவேல் செழியன் கோஷ்டியினரும் முத்துக்குமார் கோஷ்டியினரும், மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அராஜகமானதும் வன்முறையானதுமாகும்கூட.

மக்கள் அதிகாரம் அமைப்புகள் பிளவுபட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சிறுபான்மை கோஷ்டியினர் தொடர்ந்து மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதை பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் அங்கீகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. எனவே, முற்போக்கு ஜனநாயக இயக்கங்களே! நீங்கள் தொடர்ந்து கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

வருத்தத்துடன்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

Tuesday, 15 August 2023

தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1

2023, ஆகஸ்டு 13, அதிகாலை 4.34 மணிக்கு கைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் வேலூரிலிருந்து இராவணன். காலை 7.00 மணிக்கு ஆற்காட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார்.

பயணத்திற்குத் தேவையான உணவை எனது இணையர்  தயார் செய்ய, 23 ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் எனது இணைபிரியா நண்பன் சுசுகி மேக்ஸ் 100 ஐத் தட்டிக் கொடுத்து காலை 7.20 மணிக்கு ஆற்காட்டை நோக்கி விரைகிறோம்.

எனது நண்பனுக்கு வயதாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் அவனை அதிக தூரம் விரட்டுவதில்லை. அதனால் அவனுக்குக் கால் வயிறு அளவுக்குத்தான் கஞ்சி ஊற்றுவேன். போகும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நூறு ரூபாய்க்கு அவன் வயிற்றை நனைத்து, பத்து நிமிடத்தில் ஆற்காடு சென்றடைந்தோம்.

நாங்கள் பயணிக்க வேண்டிய வாகனம் ஏற்கனவே அங்கே எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. தாமதத்திற்கான குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ள, அருகில் இருந்த வண்டி நிறுத்தத்தில், பத்து ரூபாய் கொடுத்து எனது நண்பனை ஓரங்கட்டினேன். இதுவே பாலாற்றங்கரைக்கு வடக்கே உள்ள முத்துக்கடையிலும், வாலாசாப்பேட்டையிலும் ரூ.15/-, இது 24 மணி நேரத்திற்கு. அதுவே சென்னை போன்ற நகரங்களில் 12 மணி நேரத்திற்கு ரூ.20/-. ஏன் இத்தனை வேறுபாடு? பேராசை யாரைத்தான் விட்டது என்று எண்ணியவாறு தெற்கு நோக்கி தோழர்களுடன் பயணமானேன்.

பசியாற அங்காளத்தாள்

காலையிலேயே முழு வயிற்றை நிரப்பிக் கொண்டதால், சற்றும் களைப்பின்றி எங்களைச் சுமக்கும் வாகனம், ஆரணி மற்றும் சேத்துப்பட்டு நகரங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பசி எடுக்க, அருக்கம்பூண்டியில் எங்கள் ஆத்தா அங்காளத்தாள் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். பரந்து விரிந்த சிமெண்ட் தரை தளம், ஓய்வெடுக்க கொட்டகைகள், தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி என தன்னை நாடி வருவோருக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு படுகளத்தில் ஒரு ஓரமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறாள் அங்காளத்தாள். பார்ப்பனியம் யாரைத்தான் விட்டு வைத்தது? எங்கள் ஆத்தாவையும்  ஈஸ்வரனுக்கு வைப்பாட்டியாக்கி, அவளை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியாக்கிவிட்டனர்.

இட்லி, பொங்கல், எலுமிச்சை சோறு, புளி சோறு, சப்பாத்தி  மற்றும் மாட்டுக் கறி என தோழர்கள் கொண்டு வந்த  உணவை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். கிரிவலப் பாதையில் அசைவ உணவா? என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமானால் அங்கலாய்க்கலாம். ஆனால் எங்கள் ஆத்தாவே அசைவப் பிரியர் என்பதால் இங்கு அங்கலாய்க்க ஏதுமில்லை. தோழர் சரவணன் குடும்பத்தாரின் முன்முயற்சியால் அவர்கள் கொண்டு வந்த கூடுதல் இட்லி அனைவரின் தேவையையும் இட்டு நிரப்பியது.

நாம் எதற்காகத் தஞ்சை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை விளக்கி, தோழர்கள் அகிலன், இராவணன், சரவணன், சாமி ஆகியோர் உரையாற்ற, 'சாமக்கோழி கூவும் நேரத்திலே', 'வெள்ளி முளைக்கையிலே நெல்லறுக்கப் போயிருந்தோம்', 'ஆலைத் தொழிலாளி நாங்கடா', 'காடுவெட்டி நெல் குவித்து', போன்ற பிரபலமான மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடல்களைத் தோழர்கள் அகிலன், வாணி உள்ளிட்டோர் பாட, பயணம் தொடர்ந்தது.

மாநில நெடுஞ்சாலைகள் பச்சைக் கொடி காட்ட, தேசிய நெடுஞ்சாலைகளோ மோடி என்ற முகமூடியுடன் ஆங்காங்கே மறிக்கிறது. கேட்டதைக் கொடுத்தால்தான் பாதை கிடைக்கும்.

திருமாந்துறை முகமூடிக் கொள்ளையரைத் தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகி, உள்ளூர் சாலையின் ஊடாக லப்பைக்குடிக்காடு வழியாக அரியலூரை நோக்கிப் பயணமானோம். 

மருதையன் கோவிலும் ஐய்யனாரும்

பிற்பகல் மணி ஒன்றரையைத்தாண்டி விட்டதால் பசியாறுவதற்காக மாத்தூர் மருதையன்கோவில் அருள்மிகு ஐய்யனார் திருக்கோவிலுக்குள் நுழைந்தோம்.

தங்களைப் பாதுகாத்த வீரனை மதிப்பதும் வழிபடுவதும் பழந்தமிழர் வழக்கம். அத்தகைய வீரனைத்தான் இன்றும் பல்வேறு கிராமங்களில் கோவில் எழுப்பி ஐய்யனாராக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். ஐய்யனார் ஒருவன் அல்ல, அவன் ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஊர்க்காவலன். ஐய்யனாருக்கு மட்டுமன்றி, அவனது சீடர்கள், அவன் பயன்படுத்திய‌ குதிரை உள்ளிட்ட அனைவருக்கும் சிலையமைத்து அழகு பார்க்கின்றனர் தமிழர்கள். இன்று இவர்களோடு கையில் துப்பாக்கியுடன் காவலர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிலை அமைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஐய்யனாரையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வேறுவேறாக இருந்த ஐய்யனாரை, ஈஸ்வரனுக்கும், பெண்ணாக அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த வாரிசாகக் கதை அளந்து ஐய்யனாரை அசிங்கப்படுத்தி விட்டனர். இங்கே, மருதையன் கோவில் ஐய்யனார் கையில் வீணையைக் கொடுத்து கேவலப்படுத்தி உள்ளனர். இதுவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

இது அப்பகுதியில் பிரபலமான கோவில் போல. ஒரு சிலர் பொங்கல் வைத்துக் கொண்டும், ஒரு சிலர்‌ விருந்துக்கான உணவு சமைத்துக் கொண்டும் இருந்தனர்.

கோவிலுக்குள் நுழைந்தால் தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது என்பதனால்தான் கோவிலைத் தேர்வு செய்து தஞ்சமடைந்தோம். இங்கேயும் அவரவர் கொண்டு வந்த உணவை அனைவரும் பங்கிட்டுப் பகிர்ந்து கொண்டோம். வயிறு முட்ட உண்ணவில்லை என்றாலும் மனம் மகிழ உண்டதனால் யாருக்கும் குறையொன்றுமில்லை.

தஞ்சை ரயிலடி

மீண்டும் பயணம் தொடர்ந்தது. அரியலூர், திருவையாறு வழியாக தஞ்சையை நெருங்கினோம். விவசாயிகள் விடுதலை முன்னணியின் (வி.வி.மு) பேரணி தஞ்சை கீழ்வாசலுக்குப் பதிலாக, ரயிலடிலிருந்து தொடங்குவதாக செய்தி கிடைக்க, நேராக மாலை நான்கு மணிக்கு முன்பாகவே ரயிலடியைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற பிறகே மற்ற ஊர்களில் இருந்து தோழர்கள் வரத் தொடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பம் மோகன், செல்வராஜ், காரப்பட்டு ஏழுமலை, பெருவளப்பூர் மணி, திருச்சி போஜகுமார், ராஜா, ஜீவா, ஜான், நிர்மலா, குமார், செழியன், வழக்குரைஞர் ஆதி, தருமபுரி இராமலிங்கம், தஞ்சை அருள், இராவணன், காளியப்பன், ராஜன், கோவை சித்தார்த்தன், சிவகங்கை நாகராஜ், சங்கராபுரம் இராமலிங்கம், திருவண்ணாமலை ஆனந்த், பாடகர் கோவன், வழக்குரைஞர் ராஜூ உள்ளிட்ட பழையத் தோழர்களைப் பார்த்து அளவலாவிய போது மனம் ஏனோ குதூகலித்தது. நேரம் ஆக ஆக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் குவியத் தொடங்கினர். ரயிலடி எங்கும் செங்கொடிகள் உயரத் தொடங்கின.


தொடரும்….

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்