Wednesday 23 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....5

நிலக்கிழார் எல்லாம் இனி கிழிந்த கோவணத்தோடு.....!

கால் காணி இருந்தாலே நிலக்கிழார் என்று மீசையை முருக்குபவன் நம்ம ஊர் விவசாயி. கஞ்சி குடிக்க வழி இல்லை என்றாலும் யார் முன்பும் கைகட்டி நிற்க மாட்டான். இனி.....‌?

சொந்தமாக தொழில் செய்யும் போதே சோத்துக்கு வழி இல்லை. இதுல ஒப்பந்த விவசாயமாம். நிரந்தரத் தொழிலாளியாக இருந்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாறும் ஒரு தொழிலாளியின் நிலையைப் போலத்தான் சொந்தமாக விவசாயம் செய்யும் ஒரு ஒப்பந்த விவசாயின் நிலையும் இருக்கும்.

ஏற்கனவே கரும்பு, உருளை, வாழை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் ஒப்பந்த முறையில்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. கரும்பை பெற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வட்டியோடு ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கரும்பு ஆலை முதலாளிகள் அதை மயிரளவுக்கும் மதிப்பதில்லை. இந்தியாவில் சுமார் 24,000 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் பாக்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ 2300 கோடி அளவுக்கு பணம் வர வேண்டியுள்ளது.  மோடியும் எடப்பாடியும் என்ன செய்து கிழித்தார்கள்? தற்போது கொண்டு வரப்படும் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் நெல்லுக்கும் கோதுமைக்கும் அப்படி பாக்கி வைத்தால் புதிதாக ஏதாவது கிழிக்கவாப் போகிறார்கள்? 

சுயசார்பாய் இருக்கிற விவசாயிகளையும் முதலாளிகளின் கண்ணியிலே பிணைப்பதுதான் மோடியின் திட்டம். ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்த பிறகு உருளையில் ஓட்டை இருக்கிறது, நெல்லில் ஈரம் இருக்கிறது, கரும்பில் சாறு இல்லை, வேர்க்கடலையில் எண்ணெய் இல்லை, வாழையில் ருசி இல்லை; அதனால் ஒப்பந்த விலையைத் தர முடியாது என்று பிகு பண்ணினால் விவசாயி என்ன செய்வான்? கலெக்டர் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கி இளைத்துப் போவதைத் தவிர? அவன் இருப்பதையும் இழந்து கோவணத்தோடு கார்ப்பரேட்டுகள் முன்னால் கைகட்டி நிற்க வேண்டும், "ஐயா ஏதாவது பார்த்து குடுங்க" என்று!

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய பதிவுகள் 

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4



No comments:

Post a Comment