Monday, 27 December 2021

ஆம்பூரில் கீழ்வெண்மணி நினைவு நாள்!

1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள்  எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?

தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக  இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச் சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால் ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.

நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.

சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன் நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.

00000

ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து  இராஷ்டிரத்தைக் கட்டமைக்க முயன்று வருகிறது.

மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத் திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும் மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை  உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

00000

மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரன்  அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர். 

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன் அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார். 

இடையிடையே மக்கள் கலை இலக்கியக் கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.












தகவல்

மக்கள் அதிகாரம்
திருப்பத்தூர் மாவட்டம்

Friday, 24 December 2021

குமரனுக்கும் இந்தக் கிழவன்தான் இனி கைத்தலம்!!

எந்த ஒரு கலைஞனும், ஒரு சமூகத்தை அதன் முழுமையான வடிவில் காண்பதில்லை. அதனால் அவனது படைப்புகளில் குறைகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் அந்தக் குறைகளைக் கண்டு அந்தக் கலைஞனை ஒதுக்கி விடுவதில்லை. மாறாக அந்தக் கலைஞன் விட்ட இடத்திலிருந்து விடுபட்ட உண்மைகளைத் தேடுகிறார்கள். அதானே அறிவுடைமை! அதனால்தானே கலைகள்  ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைகின்றன. இந்தக் கூற்று கலைகளுக்கும் கலைஞனுக்கும் மட்டுமானதல்ல, அனைவருக்குமானதுதான்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, பெண் விடுதலை, சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை உள்ளிட்ட அநீதிகள், பார்ப்பனிய சனாதன எதிர்ப்பு, சுயமரியாதை, கல்வி - வேலை வாய்ப்புகளில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய பங்கீட்டைப் பெறும் சமூக நீதிக் கோட்பாடு, சமதர்ம சமுதாயம் என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர் தந்தை பெரியார். 

இயக்கவியல் பொருள் முதல் வாதத்தைக் 'கரைத்துக் குடித்தவர்களைக்' காட்டிலும் அவர் பொதுவுடைமையை அதிகமாகவே நேசித்தார் என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்து கொள்ள முடியும். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவர்களால் நிச்சயமாக உண்மையைத் தேடிச் செல்ல முடியும். மாறாக அவர் விட்டதை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டுதான் நிற்க வேண்டும். வரலாறு கற்றுத் தரும் பாடம் இதுதான்.

இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் இன்று பொதுவுடைமையாளர்களும் பெரியாரைப் போற்றி புகழ்வதோடு அவரது நினைவையும் நெஞ்சிலேந்துகிறார்கள். 

பெரியாரின் நாற்பத்தி எட்டாவது நினைவு நாளான இன்று காலை வேலூர் மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் செல்வம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் பெரியாரை நினைவு கூர்ந்தனர். வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கையில் மாலையுடன், ஒரு பேனரை பிடித்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி, சுமார் 25 பேர் ஒரு 100 மீட்டர் தூரம் நடந்து சென்றதையே ஏதோ அனுமதியில்லாமல் பேரணி நடத்தி சட்டத்தை மீறி விட்டதாக வேலூர் போலீசார் சற்றுநேரம் களேபரம் செய்து விட்டனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், வளர்ப்பு  அப்படித்தானே இருக்கும் என்று சொல்வதைத் தவிர?






தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம் வேலூர் மாவட்டம்



Tuesday, 21 December 2021

"ஜெய் பீம்" சாதித்தது என்ன?

சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கூத்து, நடனம், நாடகம், திரைப்படம் என பல்வேறு வடிவங்களில் மனிதன் தனது வாழ்வின் இன்ப துன்பங்களை பதிவு செய்கிறான். இயற்கையை எதிர்த்துப் போராடிய காலம் தொட்டு, இன்று சக மனிதனை எதிர்த்துப் போராடும் காலம் வரை, மனித வாழ்வின் அத்துணை பரிமாணங்களும் கலை வடிவங்களில் பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. விருப்பு-வெறுப்பு, மகிழ்ச்சி-சோகம், வீரம்-கோழைத்தனம், வெற்றி-தோல்வி என மனிதனின் அத்தனை உணர்வுகளையும் கலைப் படைப்புகள் வெளிக்கொணர்கின்றன.

கூத்து போன்ற கலை வடிவங்களில் புராணக்கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதால்தான் பழைமைவாத கருத்துக்கள் மக்களிடையே மிக ஆழமாக வேரூன்றி உள்ளன. புராணக் கதைகள் சொல்லும் நீதிகளே நியாயமானவைகளாக நிலை பெற்றுவிடுகின்றன. ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் தங்களுக்குச் சாதகமான கலைகளை வளர்த்தெடுக்க திறமையான கலைஞர்களை பரிசுகள் கொடுத்து பாராட்டி தம் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றன. 

மன்னர்கள், பண்ணை - ஜமீன்கள், மத போதகர்கள் உள்ளிட்ட ஆதிக்க வாதிகளைப் பற்றிதான் பெரும்பாலான கலைப் படைப்புகள் பேசுகின்றன. ஆனாலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றியும் அவ்வப்போது கலைப் படைப்புகள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவை மிகப் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. 

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,  ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படம் பழங்குடி இருளர் மக்களின் அவலத்தை மிக நேர்த்தியாக, இயல்பாக எடுத்துக் காட்டியதால் இந்திய மக்களின், ஏன் உலக மக்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை, மேற்கு தொடர்ச்சி மலை, ஜெய் பீம் என தமிழ் திரைத்துறை எடுத்திருக்கும் புதிய பரிமாணத்தை சுட்டிக்காட்டி கோடம்பாக்கம் கோலிவுட்டிலிருந்து மும்பை பாலிவுட் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை "த பிரிண்ட்" என்ற ஆங்கில செய்தி  ஊடகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதான் ஜெய் பீம்-ன் வெற்றி.

ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள் என அடுத்தடுத்து சில திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது ஜெய் பீம். 

உலகப் புகழ்பெற்ற மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலையும், அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்" நாவலையும் மீண்டும் படிக்கத் தூண்டியது. உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டி, ஒரு சோசலிச சமுதாயத்தை படைக்க விழையும் தாய் நாவலும், இன ஒடுக்குமுறைக்கு ஆளான கருப்பின மக்களின் அவலங்களைப் பேசும் ஏழு தலைமுறை நாவலும் இதுவரை திரைப்படமாக வந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய கலைப் படைப்புகள் இவை. 

எனவே, இந்த இரு நாவல்களையும் அதன் அசல் வடிவில், அப்படியே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தரலாம் எனக் கருதுகிறேன். நூல் கிடைக்கப் பெறாதவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதுதான் ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்தியத் தாக்கத்திற்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.

தமிழ்மணி