Tuesday, 22 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....3

விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும் போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்றும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித தடையுமின்றி இந்தியாவெங்கும் இணையவழி மூலம் நேரடியாக விற்பனை செய்து கொள்ள முடியும் என்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் நுகர்வோருக்கும் பொருள் கிடைக்கும் என்றும் சட்டத்தை ஆதரிப்போர் தரப்பில் சொல்லப்படுகிறது.

விவசாயத்தில் ஈடுபடுவோரில் 75% பேர் சிறு குறு விவசாயிகள். கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப்பரட்சி, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவைகளால் இயற்கை வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் பயனடைந்தனர்; விவசாயிகளோ தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைகின்றனவோ அங்கெல்லாம் உணவு உற்பத்தி சங்கிலியின் கண்ணிகள் நொறுக்கப்பட்டு மொத்தமும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. உணவு உற்பத்தியில் தற்சார்பை ஒழித்துக்கட்டி, விவசாய உற்பத்தி முதல் மொத்த வணிகம், சில்லரை வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக இருக்கிறது. 

உணவிற்கு இனி உத்தரவாதம் உண்டா?

உயிர் வாழ வேண்டும் என்றால் உணவு அடிப்படைத் தேவை. உணவு கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றால் உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவர் உயிர் வாழ்வதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்பதால்தான் உயிர்வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம். 

விலை பொருட்களை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து இருப்பதால்தான் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவோ, மலிவு விலையிலோ கிடைக்கின்றன. இதை நம்பி இந்தியாவில் சுமார் 76 கோடி பேர் உயிர் வாழ்கின்றனர். அரசே நேரடியாக விளை பொருட்களை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்து வருகிறது.  இனி கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கார்ப்பரேட்டுகளே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதற்கும், நியாயவிலைக் கடைகளுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் 76 கோடி மக்களின் உயிர் வாழும் உரிமையும் ஊசலாடுகிறது. 

வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள்  என இனி எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கார்ப்பரேட்டுகள் பதித்து வைத்துக் கொள்ள முடியும். உணவு சேமிப்புக் கிடங்குகள் மூடப்படுவதால் புயல், பெருவெள்ளம்,  நில அதிர்ச்சி, வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அரசு கையறு நிலையில்தான் நிற்கும். அதிக விளைச்சல் இருந்தாலும்  பதுக்கலுக்கு வழிவகுத்திருப்பதால் மக்களுக்கு எளிதில் பொருட்கள் கிடைக்காது. பேரிடர் காலங்களில் கார்ப்பரேட்டுகளிடருந்து அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கி மக்களைக் காக்க எந்த அரசும் முன் வராது. எனவே மக்களின் உயிர்வாழும் உரிமை மீண்டும் ஒரு முறை பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய  பதிவுகள்


No comments:

Post a Comment