Monday 21 December 2020

"வசந்தத்தின் இடிமுழக்கம்!" கவிதை நூல்!

ஒரு கவிதை எழுதுவதென்பது!

நேற்று மாலை தீவிர இடது இயக்க தோழர் ஒருவரோடு டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தோம். தோழர் 'வசந்தத்தின் இடிமுழக்கம்' எனும் மொழி பெயர்ப்பு கவிதை நூலைக் கொடுத்தார்.

பல்வேறு இந்திய மொழிக் கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தோழர் சுமந்தா பானர்ஜி ஆங்கிலத்தில் தொகுத்ததை, ம.க.இ.க அமைப்பைச் சார்ந்த தோழர் வீராச்சாமி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

இந்த நூலுக்கு சுமந்தா பானர்ஜி எழுதியிருக்கும் முன்னுரையை தமிழ்க் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். 

'கலைஞனுக்கும் மக்களுக்கும் இடையே , இந்திய நகர்ப்புற படைப்பாளிக்கும் நாட்டுப்புறப் படைப்பாளிக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி , கடல் அளவு ஆகிவிட்டது. அதைக் குறைக்கவோ , உடைத்தெறியவோ, முயற்சிகள் மிகக் குறைவாகவோ நடக்கின்றன.' என வருத்தப்படுகிறார் சுமந்தா பானர்ஜி. 

நம் ஊர் கவிஞர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் பலர் எழுதும்போதே இது ஜெயமோகனுக்குப் பிடிக்குமா? இது காலச்சுவடோ, கிரியாவோ வெளியிடும் தரத்துக்கு இருக்கிறதா? விஷ்ணுபுறம், விளக்கு, இப்படி விருதுகள் ஏதாவது தருவார்களா? எனும் ஏக்கத்தோடுதான் எழுதத் தொடங்குகிறார்கள்.

இவர்களுடைய கவிதைகளை, இவர்கள் வெளியேறிய கிராமத்து மக்கள் படிக்கிறார்களா? இவர்களுடைய குடும்பத்தினர் படிக்கிறார்களா? என்றாவது இவர்கள் எழுதிய கவிதைகளை, தங்கள் படிக்கத்தெரியாத அம்மா, அப்பாக்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார்களா? பிள்ளைகளிடம் தங்கள் கவிதைப் புத்தகங்களை இவர்கள் படிக்கக் கொடுத்ததுண்டா? தெரியவில்லை. 

சுமந்தா பானர்ஜி மேலும் கூறுகிறார்.  'மேற்கத்திய கலை, கலாச்சாரம், நமது கலை இலக்கியத்தின் மீது மயக்குவலை வீசி வருகிறது . நமது படைப்பாளி அதன்முன் பலமிழந்து நிற்கிறான். அதையே தன் இலக்கியத்திலும் போலி செய்து உருவாக்க முயலும்போது , பெரும்பாலான மக்கள் தன்னைக் காது கொடுத்து கேட்பதுகூட இல்லை என்பதை உணர்கிறான். மெல்ல மெல்ல ஒரு சிறு வட்டத்துக்குள்ளே சுருங்கிப்போகிறான். அதிலேயே மனம் நிறைவடைந்தும் போகிறான்.' 

ஒருவருடைய கவிதை இயக்கத்தின் வெற்றி என்பது, இன்றைய மனச்சாய்வுகளோடு கூடிய மேட்டிமை விமர்சகர்களின், படைப்பாளிகளின் வெற்று முகத் துதிகளோ, புகழுரைகளோ ஆகாது. 

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எது ஒன்றும் இந்த நோக்கோடு எழுதப்பட்டவை அன்று. 

இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டே, ஆளும் வர்க்கத்தின் மதிப்பீடுகளைத் தாங்கிப்பிடிக்காமல், அதன் அங்கீகாரங்களுக்கு ஏங்காமல் எழுதப்பட்டவை. 

இந்தக் கவிதைகள் பல தூக்கு மரங்களின் நிழலில் எழுதப்பட்டவை. விசாரணைக் கூடங்களில் வடிந்த குருதி தொட்டு எழுதப்பட்டவை. 

மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி, ஆந்திராவின் சிரிகாகுளம் போன்ற கிராமங்களின் வெந்தணலில் மணந்த கவிதைகள் இவை. 

சுப்பாராவ் பாணிக்கிரகி, செரபண்ட ராஜூ, தரித் குமார், சச்சிதானந்தன், சரோஜ் தத்தா, நித்யா சென், ஹரிஹர் துவிவேதி, குமார் விகால், ஷோவன் ஷோம், பி.வரவரராவ், ஸ்ரீஸ்ரீ, ராம்பாலி இப்படிப் பல மக்கள் கவிகளால் எழுதப்பட்ட தொகுப்பு இது. 

இவர்களது கவிதைகளுக்கு கிடைத்த பரிசுகள் எல்லாம் சிறைத் தண்டனை, தூக்குமேடை மட்டுமே!

'என் மணிக்கட்டையே நீ வெட்டி எறிந்தாலும் ஏந்திய வாளை நான் எந்நாளும் விடமாட்டேன்!' என்று எழுதினாரே செரபண்டராஜூ, 

இன்றும் டெல்லியில் வாசிக்கத் தகுந்த வரியல்லவா! 

உலகத் தரத்துக்கு எழுதியது போதும் உங்கள் தெருக்காரர்கள் படிக்க ,
ஒரு கவிதையாவது எழுதிக்காட்டுங்கள்!

-  Karikalan R

நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று
சென்னை.


No comments:

Post a Comment