Monday 21 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....1

1850 களின் தொடக்கம்,  கடைசி முகலாயன் ஜாபர் என்கிற பகதூர் ஷா II வின் காலம் அது. முகலாயர்களின் நீதிபரிபாலன முறையை அகற்றி விட்டு பிரிட்டிஷ் சட்டங்களைப் புகுத்த முற்பட்டதோடு மட்டுமன்றி கிறிஸ்தவத்தையும் பரப்ப முயன்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு எதிர்வினையாக உருவெடுத்ததுதான் 1857 மாபெரும் சிப்பாய்க் 'கலகம்.' இதைக் கலகம் என்று சொல்வதை விட ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தொடுத்த ஒரு விடுதலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். ஒன்று சிப்பாய்களை அடக்கி ஒடுக்கி டெல்லியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் அல்லது இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் ஓட வேண்டும் என்பதுதான் அன்றையச் சூழல். அதைத் தொடர்ந்து டெல்லியே இரத்தக்களறியானது. பின்னாளிலே ஆங்கிலேயப் படையினரால் சிப்பாய்கள் அடக்கப்பட்டனர். பகதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மியச் சிறையிலேயே மாண்டு போனார் என்பது வரலாறு.

வேளாண்மையில் விவசாயிகளின் சுயசார்பு நடைமுறைகளை அகற்றிவிட்டு விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றவும், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவும் வழிவகுக்கும் புதிய சட்டங்களைப் புகுத்தும் மோடி-அமித்ஷா காவிகளின் காலம் இது. அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வட இந்திய சிப்பாய்கள் டெல்லியை முற்றுகையிட்டனர். இன்று வட இந்திய விவசாயிகள் மோடி-அமித்ஷா காவிகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். 

அன்றைய டெல்லி முற்றுகை 6 மாதம் காலம் நீடித்தது. ஆறு மாத காலத்திற்குத் தேவையான தயாரிப்போடுதான் இன்றைய டெல்லி முற்றுகையும் தொடர்கிறது. 1857 சிப்பாய்களின் டெல்லி முற்றுகையை நினைவுபடுத்துகிறது விவசாயிகளின் இன்றைய டெல்லி முற்றுகை. 

25 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் வெற்றி பெறுமா? தோல்வியில் முடியுமா? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமா? என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்யும். ஒரு போராட்டம் வெற்றி பெறலாம் அது தோல்வியிலும் முடியலாம். ஆனால் அது ஒரு வரலாற்றுச் செய்தியை உணர்த்தி விட்டுத்தான் செல்கிறது. இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்துவது என்ன?

இத்தகையச் சூழலில் வேளாண் சட்டங்கள் குறித்தும், டெல்லி முற்றுகை குறித்தும், அதன் அரசியல்  தன்மை குறித்தும் நாம் விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய டெல்லி முற்றுகை நமக்கு உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்மணி

தொடரும்.


No comments:

Post a Comment