Wednesday 30 December 2020

இழி குணம்: என்னை ஈர்த்த மக்கள் கலை இலக்கியக் கழகம்!.....4

பட்டயப் படிப்பு முடிந்து விட்டது. பெயருக்குப் பின்னால் பெருமையாய் DME (diploma in mechanical engineering) ஒட்டிக் கொண்டது. ஆனால் வேலை? கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையோடு திருச்சி பெல் நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை முடித்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பினேன். 'ஐந்தைப் பெற்றவன் ஆண்டியாவான்' என்பார்கள். நாங்களோ அதற்கும் மேலே, இரண்டு ஆண் வாரிசுகளோடு ஈன்றவர்கள் உட்பட ஒன்பது பேர். கைக்கும் வாய்க்குமே எட்டாத சூழலில் பட்டணத்துப் படிப்பு என்றால் சும்மாவா? ஒரு இளங்காளையையும் அரை ஏக்கர் புன்செய்யையும் DME உள்வாங்கிக் கொண்டது.

இடையில் திருச்சி பெல்லுக்குச் சென்று மற்றுமொரு எழுத்துத் தேர்வையும்  நேர்காணலையும் எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றுத் திரும்பினேன்.  தேர்வில் நான் 'காப்பி' அடிப்பதாக நினைத்துக் கொண்டு "ஏய் யு ப்ளு சர்ட்?" என மேற்பார்வை செய்து கொண்டிருந்த  ஒரு அதிகாரி என்னைப் பார்த்துக் கூச்சலிட்ட போது,  எனது திறமையை சந்தேகிக்கிறாரே என, வந்த வேலை கெட்டு விடக்கூடாது என்பதற்காக என்னுள் எழுந்த ஆத்திரத்தை உள் அழுத்திக் கொண்டேன். மாதங்கள் உருண்டோடின. ஆனால் அழைப்பு மட்டும் வந்தபாடில்லை. 

பட்டணத்து வாசிகளுக்குப் பிரச்சனை இல்லை. நாலு கம்பெனி படி ஏறினாலே ஏதாவது ஒன்றில் நுழைந்து விட முடியும்‌. அத்திமூரான் கொட்டாயில் நான் எங்கே தேட? பெல்லிலிருந்து தபால் வருமா என ஆறு மாதம் காத்திருந்து பட்டணத்திற்குப் பயணமானேன். தபாலே வந்தாலும், தபால்காரரின் பாதம் படாத கொட்டாய்க்கு மட்டும் வந்து விடுமா என்ன? தபால்காரர் கை மாற்ற, வழிப்போக்கர்களே கடுதாசியைச் சேர்க்கும் காலம் அது.  'ஏதோ கடுதாசி!, கொடுக்கலாம்!' என எரவாணத்தில் (தாழ்வாரக் கூரை) சொருகிவிட்டால் அது 'அப்பாயின்மெண்ட் ஆர்டராக' இருந்தாலும் அத்தோடு முடிந்தது கதை; ஆடு மாடுகளோடு காலத்தைக் கடத்த வேண்டியதுதான். 

ஊரைத் தாண்டி நடந்து வந்தேன்.  எதிர்ப்பட்டான் இளைய பங்காளி. உள்ளத்தில் பகை இருந்தாலும், வஞ்சிக்க எண்ணாமல், அவன் கொடுத்த கடுதாசியே பட்டணத்துப் பயணத்தைத் திருச்சிக்குத் திசை மாற்றியது. டிசம்ர் 4, 1978, திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராய் தற்காலிகப் (NMR) பணி. ஒரு நாள் ஊதியம் ரூ.13.20. வாடகை, போக்குவரத்து, உணவு, பராமரிப்பு போக மாதம் 100 ரூபாய் வீட்டுக்கும் அனுப்பி வந்தேன். ஓராண்டு NMR,  ஓராண்டு  பயிற்சி முடித்து, மீண்டும் ஒரு நேர்காணலைச் சந்தித்து  ரூ.520 அடிப்படை ஊதியத்தில் 28.03.1981 ல் பொறுப்பாளராய் நிரந்தரப் பணி. 

சிலகாலம் கீழரண் சாலை முருகன் திரையரங்கு எதிரில் லிபர்ட்டி, லாட்ஜ், அதன் பிறகு அல்லிமால் தெரு அமுதா லாட்ஜ் வாசம். 

1980 களின் தொடக்கத்தில், பெல்லில் பணியாற்றிய சில ஊழிர்களை ஈர்த்தது போலவே என்னையும் உள்வாங்கிக் கொண்டது மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக). அதுமுதல் தமிழ்மணி ஆனேன். பகலில் ஆலைப்பணி, மாலையில் மக்கள் பணி என்பது வழமையாய் மாறிப்போனது. நக்சலைட் பயங்கரவாத அமைப்பு என்கிற பயம் பலரை அச்சுறுத்தினாலும் பிரசுரம், சுவரெழுத்து, சுவரொட்டி, தெருமுனைப் பிரச்சாரம், பேச்சு என அனைத்திலும் ஆர்வத்துடன் அஞ்சாமல் பயணத்தைத் தொடர்ந்தேன். 

நண்பர்களோடு வீடெடுத்து தில்லை நகரிலும், மலைக்கோட்டை தெற்குத் தெருவிலும் கருணா-காங்க்ஸ்-எபி-கோவிந்தா-குணா-ராம்கியோடு சிலகாலம் வாசம். உறவுகள் கூட வெறுக்கும் சொரியாசிஸ் என்னை ஆட்கொண்ட போதும் பண்போடு அரவணைத்த பாசக்கார நண்பர்கள்‌. சமையலுக்கு ஆள் வைத்தோம். அன்னமிட்ட காடப்பன் மட்டும் இன்றும் என் நினைவில். 

வயது கூடியது. பருவ வயதில் பலரைப் கண்டாலும் காதல் மட்டும் எட்டாக் கனியாய், வாழ்க்கைத் துணையைத் தேடி....

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்:

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....

2 comments:

  1. நன்றி தோழரே! அனுபவங்கள் பதிவாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

    ReplyDelete