Monday 14 December 2020

கடலூரில் காத்திருப்புப் போராட்டம்!

வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு! 

கடலூரில் தடையை மீறி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) அனைத்து விவசாய சங்கத்தினர் கைது!

வேளாண் திருத்தச் சட்டம், இலவச மின்சார சட்டத்தைத் திரும்ப பெறு என்று "டெல்லி சலோ" முழக்கத்தை முன்வைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 20 நாட்களாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இந்தப் போராட்டம் "பாரத் பந்த், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை" என ஒவ்வொரு கட்டமாகக் கடந்து, இன்று விவசாச் சங்கத் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம், மற்ற மாநிலங்களில் காத்திருப்புப் போராட்டம் என தற்போது நடத்தி வருகின்றனர். 

மத்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு விவசாயிகளின் போராட்டத்தைத் துளியும் மதிக்காமல் வேளாண் சட்டங்களால் அவர்களுக்கு நன்மையே ஏற்படும் என மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை செய்தித்தாள்கள் மூலம் பரப்பி வருகிறது.

மேலும் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு எதிராக பிஜேபியின் விவசாயச் சங்கங்கள் வேளாண் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என பாசிச மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் நடக்கும்  விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு தரப்பினரும்  விவசாயிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் நாடு தழுவிய  போராட்டத்தை ஆதரித்து இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள பாசிச மோடி அரசு  டெல்லியின் எல்லைகளில்  துணை இராணுவத்தைக் குவித்து வருகிறது. 

விவசாயிகளின் போராட்டம் உலகம் தழுவிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, பாசிச மோடி அரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழகம் முழுக்க இன்று ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அனைத்துக்கட்சி விவசாய சங்கத்தினர், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (14/12/2020) கடலூர், கார் ஸ்டாண்ட், மஞ்சகுப்பம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), சார்பாக சிபிஎம், சிபிஐ, மக்கள் அதிகாரம், காங்கிரஸ், மதிமுக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தடையை மீறி போராடி கைது செய்யப்பட்டு கடலூர்  சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில்  வைக்கப்பட்டுள்ளனர். 






தகவல்:

அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு,(AIKSCC).

தோழர். பாலு
மண்டல ஒருங்கிணைப்பாளர், 
மக்கள் அதிகாரம், 
கடலூர்.
தொடர்புக்கு:81108 15963

No comments:

Post a Comment