பொறியியல், கணித அறிவியல், இரசாயணம், தோல், அச்சுத் தொழில்நுட்பம், பாலிமர், ஹோட்டல் மேலாண்மை, ஜவுளித் தொழில், வர்த்தகம், திரைப்படம் என விதவிதமாய் பல்தொழில் பயில்வதற்கான இடம்தான் சென்னை தரமணியில் உள்ள சிஐடி வளாகம் (Central Institute of Technology). உலகத் தமிழாரய்ச்சி நிறுவனமும் இங்குதான்.
அருகில்தான் ஐஐடி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகங்கள். அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு சிஐடி வளாகமும், மேட்டுக்குடியினருக்கு கிண்டி பொறியியல் கல்லூரி வளாகமும், உயர்சாதிப் பணக்காரர்களுக்கு ஐஐடி வளாகமும் என்பது பின்னாளில்தான் புரிய வந்தது. பத்தாவது முடித்த கிராமப்புற கீழ்த்தட்டு மக்களுக்கானதுதான் ஐடிஐ (ITI) படிப்பு.
இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல் பட்டயப் (Diploma) படிப்புக்கான தொழில்நுட்பக் கல்லூரிதான் மைய பாலிடெக்னிக் கல்லூரி (Central polytechnic-CPT). முதலாண்டு படிப்புக்கு 'முன் தொழில்நுட்பப் படிப்பு', PTC-Pre Technical Course, என்று பெயர். இதில் தேறினால்தான் பட்டயப் படிப்பைத் தொடர முடியும். கல்லூரிகளில் பட்டப் படிப்பிற்கு செல்லும் முன் படிக்கக்கூடிய PUC-Pre University Course போன்றது இது. PTC முடித்த பிறகு பொறியியல் பட்டப் படிப்பிலும் சேர முடியும்.
CPT மிகப்பெரிய பாலிடெக்னிக் கல்லூரி. முதலாமாண்டில் A முதல் E வரை வகுப்புகள் உண்டு. இது தவிர மூன்றரையாண்டு சாண்ட்விச் படிப்பும் உண்டு. CPT முதல் தரமான பாலிடெக்னிக் என்பதால் தமிழகமே அங்கு சங்கமிக்கும். பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். பள்ளி இறுதித் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 38 ஐத் தொடுவதற்கே கண்களை மூடி, தலையை அசைத்து, நடந்து, விரல்களை ஆட்டி உரு போட்ட எனக்குக் கண்ணைக் கட்டி விட்டது போலத்தான் இருந்தது. நல் வாய்ப்பாக எனக்குப் பக்கத்து இருக்கையில் சேக்ரி ராஜன். ஆங்கில வழிக் கல்வியை அனாயசமாக எதிர்கொள்ள அவன்தான் எனக்குக் கிரியா ஊக்கி. பட்டணத்து மாணவர்கள் முயலாய் இருந்தாலும் வாலிகண்டபுரம், அத்திமூரான் கொட்டாய், நாட்டார்மங்கலம் கிராமத்து ஆமைகளே முதல் மூன்று இடத்தைப் பிடித்தன.
விடுதி மாணவர்கள்-வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் என்கிற சிறு முரணைத் தவிர சாதி-மத-இன முரண் எதையும் நான் கண்டதில்லை. படிப்பிலே போட்டி இருந்தாலும் கூடிப் படிப்பதை பண்பாய்க் கொண்டிருந்தோம்.
மூன்றாமாண்டு தொடக்கத்தில் கிராமத்தில் வயல் வேலைகளை முடித்துவிட்டு ஒரு நாள் தாமதமாக வந்ததற்காக, இரண்டாம் ஆண்டு தர வரிசையில் முன்னிலையில் இருந்த எனக்கு, விரும்பிய விருப்பப்பாடம் கிடைக்காத வெறுப்பில் பலரும் வெறுக்கும் 'பவுண்ட்ரி டெக்னாலஜியை' கேட்டுப் பெற்றேன். நேர்மையற்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டேன்; வஞ்சிக்கப்பட்டேன் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் துவண்டு விடவில்லை. முத்திரையைப் பதித்து விட்டுத்தான் மூன்றாண்டு முடிந்து வெளியே வந்தேன்.
மூன்றாண்டு காலத்தில் மறக்க முடியாத எண்ணற்ற நிகழ்வுகள். சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆண்டு இறுதியில் தவறாமல் நடைபெறும் ஆண்டு விழா இசைக் கச்சேரிகளும், சிஐடி வளாகத்தில் நடைபெறும் பொறியியல் பொருட்காட்சியும் பிரபலமானவை. வளாகத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் நுழையும் வாய்ப்பும் இளவட்டங்களுக்கு அப்பொழுதுதான் கிட்டும்.
வண்ணத்திரையில் கண்ட நட்சத்திரங்களை நேரில் காணும் வாய்ப்பும் எங்களுக்கு வாய்த்ததுண்டு. T-ஸ்கொயரோடு கமல்ஹாசனை வகுப்பறையில் பார்த்ததுண்டு. நூலகத்தில் கமல்-ஸ்ரீபிரியா காதல் காட்சிகளையும் கண்டதுண்டு. திரைப்படக் கல்லூரி வளாகத்தில் மு.க. முத்துவோடு கைகுலுக்கிப் பேசியதும் உண்டு. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட 'பசி' திரைப்படம் இங்குதான் உருவாக்கப்பட்டது.
(பொறியியல் வரைபடம் வரைவதற்கு உதவும் T வடிவிலான ஒரு கருவி, அதன்பிறகு வந்துதான் மினி டிராஃப்டர்)
விடுதிக்கு மிக அருகில்தான் மாடர்ன் பிரட் ஆலை. மாடர்ன் பிரட் வாசத்துடன்தான் விடுதியின் காலைப் பொழுதே விடியும். கூட்டுறவு முறையில் விடுதியின் உணவகம் நடத்தப்பட்டதால் மாணவர்களே மளிகை- காய்கறிகள் வாங்கக் கொத்தவால் சாவடி செல்வோம். வஞ்சமில்லா பிஞ்சு உள்ளங்களை லஞ்சப் பேய் அண்டியதில்லை. வஞ்சனையின்றி உண்டோம். வெள்ளிக்கிழமை காலை பிரட் மசாலா என்னைக் கவர்ந்த விருப்ப உணவு. பள்ளியிலே முதல் வரிசைக் குள்ளனாய் இருந்த நான் வளர்ந்ததற்கும் சென்னை கல்லூரிகளின் விடுதி உணவகங்களுக்கே வழிகாட்டிய எங்கள் விடுதிச் சாப்பாடே ஆதாரம். கூட்டுறவு சொசைட்டி முறைக்குத்தான் எத்தனை பலம், பொது நலன் பேண! ஆனால் இன்றும்தான் சிலர் சொசைட்டி நடத்துகிறார்கள், தங்கள் பையை நிரப்பிக் கொள்ள!
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment