Tuesday 22 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....2

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாயிகள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைக் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்தி வருகின்றனர். 96,000 டிராக்டர்கள், 6 மாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளுடன் 1.2 கோடி விவசாயிகள் டெல்லியின் நுழைவு வாயில்களை முற்றுகையிட்டுள்ளனர். சிறுவர், முதியோர், ஆண், பெண் என பலரும் குடும்பம் குடும்பமாக
போராட்டக் களத்தில் உள்ளனர்.

இந்திய தேசியக் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி( மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் 10 மத்திய தொழிற்சங்கங்கள் என பலரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.

ஆங்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது கேல்ரத்னா விருதை திரும்பத் தரப்போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தனது பத்மவிபூஷண் விருதை ஏற்கனவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட
மத்திய அரசு குழுவினர் விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் ஏற்படாமல் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 33 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர்நீத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டிசம்பர் 21 அந்த நாடெங்கிலும் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்கள்

1.விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்
2.விலை பொருள் உறுதி மற்றும் சேவைகள் சட்டம்
3.அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இந்தச் சட்டம் பயனளிக்கும் என்கிறது மத்திய அரசு. இல்லை, இவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் பயனளிக்கும்; விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிரானது என்கின்றனர் சட்டத்தை எதிர்ப்போர். இவற்றில் எது உண்மை? 

தமிழ்மணி

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment