Wednesday 23 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....6

ஜல்லிக்கட்டா? டெல்லிக்கட்டா?

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகளே நிறைந்துள்ளனர். ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்கக் கூடியவைதான் புதிய வேளாண் சட்டங்கள். டெல்லி மட்டும் களை கட்டுகிறது. ஜல்லிக்கட்டைக் கண்ட தமிழகமோ தத்தித் தவழுகிறது. மற்ற இடங்களில்  சுவடுகூட இல்லை. ஏன் இந்த நிலை?

நெருப்பைத் தொட்டவன், சுட்டதனால் சீறி எழுகிறான். மற்றவனோ பட்டால்தான் எழுவேன் என்கிறான். புதிய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் ஏற்கனவே பஞ்சாப், அரியானா விவசாயிகள் அனுபவித்து விட்டார்கள். அதனால் சீறுகிறார்கள். எஞ்சிய இந்தியாவோ கெஞ்சிக் கொண்டிருக்கிறது. பாடங்களிலிருந்து படிப்பினை பெறாதவன் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது.

தாக்குதல் பலமாக இருக்கும் போது அதற்கான எதிர்வினை.........?

ஏழ்மையில் உள்ள விவசாயிகளை உய்விக்கப்போவதாகவும், இடைத்தரகர்களிடமிருந்து அவர்களை மீட்கப் போவதாகவும் மோடி சொல்வதெல்லாம் உண்மையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்றுமில்லாத அளவில் அடிமைச் சேவகம் செய்து, எல்லை இல்லாத அளவில் விவசாயிகளைக் கொடுமையாகச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்வதுதான்.

1990களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளாலும், காட் ஒப்பந்தப்படி உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கிணங்க நமது நாட்டின் அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதை தீவிரப்படுத்தி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல். அதற்கு ஏற்ப தொழிலாளர் நலச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், மின்சார சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது மோடி-அமித்ஷா கும்பல். சுரண்டலையேத் தொழிலாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளும், வேளாண்மையை இழிதொழில் என வரையறுக்கும் அதிகாரத்தில் உள்ள மனுவாதிகளும் இங்கே கை கோர்க்கிறார்கள்.  எதிர்ப்போரை ஈவிரக்கமின்றி அடக்குகிறார்கள், தாக்குகிறார்கள்,  வேட்டையாடுகிறார்கள். கார்ப்பரேட்டுகளும் காவிகளும் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். 

பாதிப்பை உணர்ந்தவர்கள் வீதிக்கு வருகிறார்கள். காவியின் ஒடுக்குமுறையை புரிந்துகொண்ட நாம் அன்று காளைகளாய் சீறி எழுந்து ஜல்லிக்கட்டு கண்டோம். கார்ப்பரேட்டுகளின் பாதிப்பை உணர்ந்தவர்கள் இன்று சிங்கங்களாய் கர்ஜித்து டெல்லிக்கட்டைக் காண்கிறார்கள். 

மக்களின் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்றுபவனே மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்; மக்களின் கோரிக்கைகளுக்கு, தேவைகளுக்குப் புறம்பாக தங்களது திட்டத்தை நிறைவேற்ற யார் முன் வந்தாலும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பார் மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளி தோழர் ஸ்டாலின். வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு, தேவைக்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட்-காவி, மோடி-அமித்ஷா கும்பலை விரட்டி அடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக அவர்களை வீழ்த்தாமல் வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை. ஜல்லிக்கட்டும் டெல்லிக்கட்டும் மொத்தமாய் சேர்ந்து மல்லுக்கட்டும் நாள் எந்நாளோ!

முற்றும்

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

என்ன?.....5

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4



No comments:

Post a Comment