கஞ்சாவும் சாராயமும் மட்டும்தான் காரணமா?
கஞ்சா அடித்தால் பாலியல் வெறி ஏறுமா? கள்ளு-சாராயம் குடித்தால் பாலியல் வெறி ஏறுமா? இந்த நாட்டில் கஞ்சா அடிப்பதும், கள்ளு-சாராயம் குடிப்பதும் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வெறும் கஞ்சா மற்றும் கள்ளு-சாராயப் போதை மட்டும்தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதன்மைக் காரணியா? இதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆய்வுத் தரவுகள் உண்டா?
இல்லை!
போதைப்பொருள் என்பது ஒரு மனிதன் தனது சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் ஒரு கருவியே தவிர, அதுவாக ஒருவனுக்குள் பாலியல் வெறியை உற்பத்தி செய்துவிடாது. பாலியல் வன்கொடுமைகளின் உண்மையான அடிப்படை என்பது... பெண்ணை ஒரு மனிதப் பிறவியாகப் பார்க்காமல், அவளை வெறும் 'போகப் பொருளாக', 'நுகர்வுப் பொருளாக'ப் பார்க்கும் ஆண் ஆதிக்க மனோபாவம்தான்!
ஆள்தோட்ட பூபதி
நுகர்வுப் போதையும் காமப் பெருக்கமும்
முதலாளித்துவச் சந்தை எப்போதுமே ஒரு பொருளை நுகர்வுப் பொருளாக மாற்றுவதன் மூலம், அதை எந்த விலையைக் கொடுத்தாவது அடைந்தே தீர வேண்டும் என்கிற வெறியைத் தூண்டுகிறது. நாம் உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை எண்ணற்ற விளம்பரங்கள் மூலம் இந்த ஆசை எப்படி வெறியாக மாற்றப்படுகிறதோ, அப்படித்தான் பெண்களும் இங்கே நுகர்வுப் பண்டங்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில், இந்த ஆபத்து இணையத்தின் வழியாக நம் கைகளுக்குள் இருக்கும் கைபேசியிலேயே அடங்கிவிட்டது.
ஒரு காலத்தில் 'சரோஜாதேவி புத்தகங்கள்' இரகசியமாக ஏற்படுத்திய அதே பாலியல் தூண்டல் விளைவை... இன்று திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், இணையத்தில் குவிந்து கிடக்கும் ஆபாச ரீல்ஸ்கள் மற்றும் 'போர்ன்' (Porn) படங்கள் பகிரங்கமாகச் செய்கின்றன.
இவைகளே பெண்களை—அவள் சிறுமியாக இருந்தாலும் சரி, மூதாட்டியாக இருந்தாலும் சரி—அனுபவிக்க வேண்டிய ஒரு சதைப்பிண்டமாகப் பார்க்கும் வேட்கையை ஆண்களிடம் தொடர்ச்சியாக உருவாக்குகின்றன.
திரைகளில் நெளியும் ஆபாசம்
திரைப்படங்களில் நடிகைகளின் அக்குளையும், தொப்புளையும், தொடையையும், இடையையும், மார்பகங்களையும் கேமராக்கள் வழியே ஆபாசமாகத் துளைத்தெடுப்பதோடு மட்டுமின்றி... அங்கெல்லாம் கதாநாயகன் தனது வாயையும் மூக்கையும் தேய்ப்பது போலவும், இடுப்பைக் கிள்ளுவது போலவும், கன்னத்தையும் கழுத்தையும் கடிப்பது போலவும் காட்டுகிறார்களே... இவற்றைத் திரையில் பார்ப்பவனுக்குள் பக்திப் பரவசமா ஊற்றெடுக்கும்? இல்லை, பாலியல் வெறிதானே தலைக்கேறும்?
இது ஏதோ திரையரங்கில் ஒருமுறை பார்த்துவிட்டு கடந்து போகும் ஒன்றல்ல. இந்த ஆபாசக் காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், கைபேசிகளிலும் 24 மணி நேரமும் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கின்றன.
குவாட்டரில் தொடங்கி எப்படி ஒருவன் காலப்போக்கில் 'மொடாக்குடியனாக' மாறுகிறானோ, அதுபோலவே இந்தத் தொடர் காமக் காட்சிகளால் பாலியல் வெறி ஏற்றப்பட்ட ஒருவன், எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறான். வாய்ப்புக் கிட்டும் போது மிருகமாய் வெறிகொண்டு குதறுகிறான்.
கூட்டுக் குற்றவாளிகள்
மக்களிடையே இந்த ஆபாசக் காமக் காட்சிகளைக் கொண்டு சேர்க்கும் வணிகப் பணியை திரை உலகக் 'கதாநாயகர்கள்', 'கதாநாயகிகள்', 'தயாரிப்பாளர்கள்', 'தொலைக்காட்சி உரிமையாளர்கள்' மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய 'மாநில-ஒன்றிய அரசுகள்' அனைவருமே கூட்டுக்குற்றவாளிகள்தான்! இன்று நடைபெறும் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களும் இவர்கள்தான்! காசுக்காக கேமரா முன்னால் அனைத்தையும் அவிழ்த்தவர்கள், இன்று பொதுமேடைகளில் போர்த்திக் கொண்டு வந்தால் மட்டும் புனிதர்களாகிவிடுவார்களா?
படுக்கை அறையில் இருவருக்குள் நடக்கக்கூடிய அந்தரங்கங்களை நாலு காசுக்காகப் பொதுவெளியில் அசிங்கமாகக் காட்சிப்படுத்தும் இவர்கள் அனைவருமே 'காம வியாபாரிகள்'. தெருவில் கஞ்சா விற்கும் குற்றவாளிகளுக்கும், இவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது!
எப்படிச் சாராயத்தையும் கஞ்சாவையும் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழித்தால்தான் மக்களைப் போதையில் இருந்து மீட்க முடியுமோ... அதுபோலவே, பாலியலைத் தூண்டும் இத்தகைய காமக் காட்சிகளையும், ஆபாசச் சித்தரிப்புகளையும் திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் முற்றிலுமாகத் தடை செய்தால்தான், இந்த சமூகப் பாலியல் வெறியைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், ஆட்சியாளர்கள் ஒருபோதும் இதைச் செய்யமாட்டார்கள். காரணம், அவர்கள் தங்களின் சாராய வருவாயையும், முதலாளிகளின் லாபத்தையும், வணிகச் சந்தையையும் பாதுகாக்கும் ‘ஆள்தோட்ட பூபதிகள்” அல்லவா?
களத்தில் இறங்க வேண்டியது மக்களின் கடமை!
எனவே, மக்களாகிய நாம்தான் இத்தகைய கலாச்சாரச் சீரழிவிற்கு எதிராக நேரடியாகக் களம் காண வேண்டும். காமத்தைத் தூண்டும் ஆபாசக் காட்சிகளுக்கும், இந்தச் சீரழிவிற்கும் காரணமானவர்களைப் பொதுவெளியில் கண்டால் துரத்தியடிக்க வேண்டும்! காமக் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் திரையரங்குகளையும், இந்த அசிங்கங்களை விற்கும் ஊடக நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும்!
இது ஒரு நீண்ட நெடிய போராட்டக் களம். இப்பொழுதே இந்த ஒட்டுமொத்த காமப் பண்பாட்டிற்கு எதிராக நாம் போராட்டத்தைத் தொடங்கவில்லை என்றால்... நாளை நம் வீட்டுப் பிஞ்சுக் குழந்தைகள் இந்த மிருக வெறிக்கு இரையாவதை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்!
எச்சரிக்கை!
ஊரான்@பொன்.சேகர்
தொடர்புடைய பதிவுகள்

No comments:
Post a Comment