Thursday, 18 June 2026

திராவிடம்: யாருடைய சொத்தும் அல்ல; அது சனாதன ஆதிக்கத்திற்கு எதிரான வரலாற்று அடையாளம்!

சமீப காலங்களில் "திராவிடம்" என்ற சொல்லைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. சிலர், "திராவிடம் என்பது கால்டுவெல் உருவாக்கிய கருத்து" என்கிறார்கள். 

சிலர், "அயோத்திதாச பண்டிதர்தான் முதலில் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்" என்று ‘பெரியாருக்கும் பெரியார் அயோதிதாசர்’ என்ற தொணியில் பெருமை பேசுகிறார்கள். 

இன்னும் சிலர், "பெரியார்தான் திராவிட அரசியலையே உருவாக்கினார்" என்கிறார்கள்.


ஆனால், இந்த விவாதங்களில் பெரும்பாலும் மறைக்கப்படும் ஒரு உண்மை என்னவென்றால், "திராவிடம்" என்பது கால்டுவெல்லாலும், அயோத்திதாசராலும், பெரியாராலும் புதிதாக உருவாக்கப்பட்ட சொல் அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வரலாற்றிலும் இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இடம்பெற்ற ஒரு பண்டைய அடையாளம்.

திராவிடம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறிப்பு

வடஇந்திய சமஸ்கிருத இலக்கியங்களிலும், புராணங்களிலும், தர்மசாஸ்திரங்களிலும் "திராவிட" என்ற சொல் காணப்படுகிறது.

மனுதர்ம சாஸ்திரம் (10:44–45) தென்னிந்திய மக்களையும் பகுதிகளையும் குறிப்பிடும் போது "திராவிடர்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

பாகவத புராணம் உள்ளிட்ட பல புராண நூல்களிலும் திராவிட தேசம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

7ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங் (Xuanzang) தனது பயணக் குறிப்புகளில் காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட தென்னிந்தியப் பகுதியை "திராவிட நாடு" (Dravida) என்று பதிவு செய்கிறார்.

யுவான் சுவாங் (Xuanzang) 

எனவே, திராவிடம் என்பது 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சொல் அல்ல. குறைந்தபட்சம் இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாற்றில் உலவி வரும் ஒரு புவியியல்-பண்பாட்டு அடையாளம்.

கால்டுவெல் உருவாக்கியது என்ன?

ஆங்கிலேய பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் 1856ஆம் ஆண்டு வெளியிட்ட தனது மொழியியல் ஆய்வில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று விளக்குவதற்காக "Dravidian Languages" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

அவர் உருவாக்கியது "திராவிடம்" என்ற சொல்லல்ல; ஏற்கனவே இருந்த சொல்லை மொழிக் குடும்பத்திற்கான அறிவியல் வகைப்பாட்டாகப் பயன்படுத்தினார்.

ஆகவே, "திராவிடத்தை கால்டுவெல்தான் உருவாக்கினார்" என்பது வரலாற்று உண்மைக்கு முரணான கூற்றாகும்.

அயோத்திதாசரும் திராவிடமும்

அயோத்திதாச பண்டிதர் "திராவிடர்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவர் பயன்படுத்திய சூழல் என்ன?
அவரது எழுத்துகளில் "ஆதிதிராவிடர்", "திராவிட புத்தர்கள்" போன்ற அடையாளங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக, தீண்டத்தகாத மக்களின் வரலாற்றையும் அடையாளத்தையும் மீட்டெடுக்கும் நோக்கத்திலேயே அவர் "திராவிட" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

அதாவது, அயோத்திதாசரின் பயன்பாடு முதன்மையாகப் பறையர் சாதி (ஆதி திராவிடர்) மக்களின் வரலாற்று அடையாளத்தை மீட்டெடுப்பதற்கானது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதி மக்களையும், சாதி ஒழிப்பை விரும்பும் அனைத்து சமூகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பரந்த அரசியல் அடையாளமாக அவர் "திராவிடம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

பெரியாரின் திராவிடப் புரிதல்

பெரியார் காலத்தில், "திராவிடம்" என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இல்லாமல், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பிற்கும் எதிரான அரசியல் அடையாளமாக மாற்றமடைந்தது.
அதனால்தான் அவர் உருவாக்கிய அமைப்புக்கு "திராவிடர் கழகம்" என்று பெயரிட்டார்.

அவருக்கு "திராவிடம்" என்பது வெறும் இன அடையாளமோ, மொழி அடையாளமோ அல்ல. அது:
  • சாதி ஒழிப்பு,
  • பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு,
  • சனாதன எதிர்ப்பு,
  • சமூக நீதி,
  • சுயமரியாதை
ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிலைப்பாடாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு திராவிட அரசியல் இயக்கங்கள் உருவாயின.

யாருடைய சொத்து?

இதிலிருந்து தெளிவாகப் புரிவது என்ன?
திராவிடம் என்பது:
  • கால்டுவெல்லின் சொத்தும் அல்ல;
  • அயோத்திதாசரின் சொத்தும் அல்ல;
  • பெரியாரின் சொத்தும் அல்ல.
அவர்கள் மூவரும் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப அந்தச் சொல்லுக்கு வெவ்வேறு அரசியல் மற்றும் சமூக உள்ளடக்கங்களை வழங்கியவர்கள் மட்டுமே.

திராவிடம் என்ற சொல் அவர்களை விடவும் பழமையானது; வரலாற்று ஆழமுடையது.

எனவே, இன்று யாரும் "திராவிடத்திற்கு நாங்கள்தான் உரிமையாளர்கள்" என்று கூற முடியாது.

இன்றைய காலத்தின் தேவை

இன்று இந்தியா முழுவதும் சனாதன வர்ணாசிரமக் கருத்தியலை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் வலுப்பெற்று வருகின்றன.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை உயர்வு-தாழ்வாகப் பிரிக்கும் சிந்தனை, பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கும் மனநிலை, மதவெறி மற்றும் பண்பாட்டு மேலாதிக்க அரசியல் ஆகியவை புதிய வடிவங்களில் மீண்டும் தலைதூக்குகின்றன.

இத்தகைய சூழலில், திராவிடத்தை வெறும் இனவாதக் கண்ணோட்டத்திலோ அல்லது மொழியியல் விவாதத்திலோ சுருக்கிப் பார்ப்பது வரலாற்றுப் பிழையாகும்.

இன்று "திராவிடம்" என்பதன் அரசியல் பொருள்:
சனாதன ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, சாதி ஒழிப்பிற்கான உறுதி, சமூக நீதிக்கான போராட்டம், மனித சமத்துவத்திற்கான நிலைப்பாடு என்பதாகும்.

முடிவுரை

திராவிடம் என்பது ஒரு தனிநபர் கண்டுபிடித்த சொல் அல்ல; ஒரு தனி சமூகத்தின் சொத்தும் அல்ல.
அது வரலாற்றின் நீண்ட ஓட்டத்தில் உருவாகிய தென்னிந்திய மக்களின் பண்பாட்டு-அரசியல் அடையாளம்.

அந்த அடையாளத்தின் உயிர் இன்று எதில் இருக்கிறது என்றால், அது சனாதன ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் இருக்கிறது.

எனவே, "திராவிடம் யாருடையது?" என்ற கேள்வியை விட, "திராவிடத்தின் உள்ளடக்கத்தை இன்று யார் காக்கிறார்கள்?" என்பதே முக்கியமான கேள்வி.

சனாதன மீட்டுருவாக்கம் தீவிரமடையும் இந்தக் காலகட்டத்தில், திராவிடத்தை ஒரு அருங்காட்சியகச் சொல்லாக அல்லாமல், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்ட ஆயுதமாகப் புரிந்துகொண்டு களமாட வேண்டியதே காலத்தின் கட்டாயமாகும்.

ஊரான் @ பொன். சேகர்

No comments:

Post a Comment