“ஞாயிறு” என்பது வெறும் வார இறுதி நாள் அல்ல. இன்று ஒரே நாளில் நான்கு கொண்டாட்டங்கள் குவிந்த நாள். சர்வதேச யோகா தினம், இசை தினம், தந்தையர் தினம், ஆனி உத்திர அபிஷேகம்.
இவை அனைத்தும் ஓய்வு, கொண்டாட்டம், ஆன்மீகம் சார்ந்தவை. ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தும் சாத்தியமாவதே ஒரு பெரும் பகுதி மக்கள் இன்றும் இடைவிடாமல் உழைப்பதால்தான்.
ஓயாத உழைப்பாளிகளின் உலகம்
ஞாயிற்றுக்கிழமை சுகத்தை அனுபவிக்க அரசு ஊழியர்களைப் போலவோ, மாதச் சம்பள நடுத்தர வர்க்கத்தைப் போலவோ, அன்றாட உதிரிப் பாட்டாளிகள் ஓய்வெடுத்துவிட முடியாது. அவர்கள் ஒரு நாள் உழைக்கவில்லை என்றால், அவர்களது வீட்டில் அடுப்பே எரியாது.
ஞாயிறு காலை காய்கறிச் சந்தைகள் இயங்குகின்றன. கறிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. பால்காரர்கள், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், பேருந்து மற்றும் இரயில் ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என எண்ணற்ற மக்கள் தங்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இந்த உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பால்தான், மற்றவர்களின் விடுமுறை நாளும் உயிர் பெறுகிறது. அவர்கள் உழைக்காமல் நின்றுவிட்டால், நமது நகரங்களும் குடியிருப்புகளும் மயான அமைதியில் உறைந்துவிடும்.
அடிப்பம்பைக் கபலீகரம் செய்த ‘செல்வ விநாயகர்’
எனது வீட்டிற்கு எதிரே இன்று இருக்கும் விநாயகர் கோயில் ஒருகாலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய அடிப்பம்பு இருந்த இடமாகும்.
மக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்க, என் தந்தை ஒரு மொட்டைக் கல்லை வைத்து அதைப் பிள்ளையாராக்கினார். நோக்கம் பொதுச் சொத்தைப் பாதுகாப்பதுதான்.
ஆனால் பின்னர் சிலர் அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அடிப்பம்பை அகற்றி, அதை முழுமையான கோயிலாக மாற்றிவிட்டனர்.
பொதுமக்களின் நீராதாரத்தைப் பாதுகாக்க உருவான குறியீடு, இறுதியில் பொதுச் சொத்தையே விழுங்கிய ஒரு நிறுவனமாக மாறியது. இது ஒரு சிறிய நிகழ்வு மட்டுமல்ல; பொதுவெளிகள் எவ்வாறு மத நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்பதற்கான சமூகப் படிப்பினையும் ஆகும்.
ஆன்மீகமும் நடுத்தர வர்க்கமும்
இன்று காலை அந்தக் கோயிலில் கூடியிருந்தவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும்.
இங்கு புரோகிதர் தனது தொழிலைச் செய்கிறார்; அதில் அவருக்கு வருமானம் இருக்கிறது. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஆன்மீகச் சந்தையின் பொருளாதார அடித்தளத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
விசேட நாட்கள், விரதங்கள், யோகா முகாம்கள், தியான வகுப்புகள், ஆன்மீகப் பயிற்சிகள், மூலிகை மருத்துவக் கருத்தரங்குகள் — இவை அனைத்தும் ஒரு பெரிய சந்தையாகவே இன்று இயங்குகின்றன. இந்தச் சந்தையின் முதன்மை வாடிக்கையாளர்களாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி மாறியுள்ளது.
மன உளைச்சலும் தீர்வின் தேடலும்
இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கை வெளிப்படையாக வசதியானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் பாதுகாப்பின்மை, போட்டி, கடன், எதிர்கால அச்சம், தனிமை போன்ற பல உளவியல் அழுத்தங்கள் இருக்கின்றன.
இந்த மனநிலையிலிருந்து விடுபட பலர் கோவில்களையும், யோகா மையங்களையும், தியானப் பயிற்சிகளையும், ஆன்மீக முகாம்களையும் நாடுகிறார்கள்.
பிரச்சினை இங்கேதான் இருக்கிறது.
சமூகப் பிரச்சினைகளின் காரணங்கள் மாறாமல் இருக்கும்போது, அவற்றால் உருவாகும் மன அழுத்தத்திற்கு மட்டும் தனிநபர் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
உழைப்பின் அர்த்தத்தையும், சமூக உறவுகளையும், பொதுநலச் செயல்பாடுகளையும் இழந்து நிற்கும் மனிதனுக்கு ஆன்மீகம் ஒரு தற்காலிக ஆறுதலாகத் தோன்றுகிறது.
தியானம்: தீர்வா? தற்காலிக வடிகாலா?
ஹோமியோபதி மருத்துவப் பார்வையில், "தனிமையில் இருக்க விரும்புதல்", "மற்றவர்களுடன் பேச விரும்பாமை" போன்ற மனக்குறிகள் நோய்க்குறிகளாகக் கருதப்படுகின்றன.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது, தியானம் என்பது பல நேரங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயல்முறை அல்ல; மாறாக அவற்றிலிருந்து தற்காலிகமாக விலகி நிற்கும் மனநிலையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
சமூகப் பிரச்சினைகளையும் வாழ்க்கையின் முரண்பாடுகளையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு தீர்க்க வேண்டிய இடத்தில், பலர் தியானத்தின் வழியாக மன அமைதியைத் தேடுகிறார்கள்.
ஆனால் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது கூட, தீர்க்கப்படாத வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். கண்களைத் திறந்தவுடன் அவை மீண்டும் நம்மை எதிர்கொள்கின்றன.
எனவே குழப்பத்திலிருந்து வெளியே வருவதற்குத் தேவையானது தப்பிச் செல்வது அல்ல; தெளிவைப் பெறுவதுதான்.
யோகம், மூலிகை, ஆன்மீகம்: புதிய சந்தையின் மூன்று முகங்கள்
ஒரு காலத்தில் ஆன்மீகம் மட்டுமே இருந்தது. பின்னர் அதனுடன் யோகம் இணைந்தது (இன்று சர்வதேச யோகா தினமும்கூட).
இப்போது அதனுடன் இயற்கை உணவு, மூலிகை மருத்துவம், டிடாக்ஸ் (Detoxification) வெல்னஸ் (wellness), ஹோலிஸ்டிக் லிவிங் (holistic living) போன்ற புதிய சொற்களும் இணைந்துள்ளன.
ஒவ்வொன்றிலும் சில பயனுள்ள அம்சங்கள் இருக்கலாம். ஆனால் அவை மனித வாழ்க்கையின் மையக் கேள்விகளுக்கு விடை தருவதில்லை.
வாழ்க்கையின் அர்த்தம், சமூக நீதி, பொருளாதார பாதுகாப்பு, மனித உறவுகள், உழைப்பின் மதிப்பு போன்ற கேள்விகளுக்குப் பதிலாக, புதிய நுகர்வுப் பொருட்களை மட்டும் வழங்கப்படுகின்றன.
உண்மையான தேவை என்ன?
மனிதனுக்கு தேவையானது:
- சமூக உறவுகள்,
- பயனுள்ள உழைப்பு,
- அறிவார்ந்த உரையாடல்கள்,
- தத்துவார்த்தத் தெளிவு,
- சமூகப் பொறுப்பு.
இவை இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காகத்தான் ஆன்மீகமும், யோகாவும், தியானமும், மூலிகை வியாபாரங்களும் பெரும் சந்தையாக வளர்கின்றன.
முடிவுரை
உழைக்கும் மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு தியான அறைகளிலும், யோகா மையங்களிலும், ஆன்மீக முகாம்களிலும் இல்லை.
பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலும், சமூகத்தைப் புரிந்துகொள்வதிலும், மனிதர்களுடன் இணைந்து செயல்படுவதிலும்தான் உண்மையான தெளிவு இருக்கிறது.
கிரேக்க ஹோமியோபதியர் ஜார்ஜ் வித்தல்காஸ் கூறியது போல:
"Confusion is disease; clarity is health."
குழப்பமே நோய்; தெளிவே ஆரோக்கியம்.
ஆகவே, ஆன்மீகச் சரணாகதியையும், தியானப் போதையையும் தாண்டி, வாழ்க்கையின் உண்மையான சமூகக் காரணிகளைப் புரிந்துகொள்ளும் பாதையில்தான் மனித விடுதலையும் மன நலமும் இருக்கின்றன.
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment