அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் கவர்ச்சிகரமாகப் பேசி, தங்களை 'முற்போக்காளர்கள்' என்று காட்டிக் கொள்ளும் பலர், தங்களின் சுயரூபம் வெளிப்படும்போது காணாமல் போவது தமிழக அரசியலில் புதியதல்ல.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, பிக்பாஸ் புகழ் 'விக்ரமன்' என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன் அவர் இருக்கும் இடம் தெரியாமல் பொதுவாழ்விலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று.
- அதேபோல, தீவிர இடதுசாரி செயல்பாட்டாளராகத் தன்னை முன்னிறுத்திய 'மதூர் சத்யா' போன்ற நபர்களும் பாலியல் புகார்களுக்குப் பிறகு தங்களின் பொதுவெளி முகத்தை இழந்து காணாமல் போனார்கள்.
பிக்பாஸ் புகழ் விக்ரமன்
இவர்கள் மீது சட்டரீதியான இறுதித் தீர்ப்புகள் வராமல் போனாலும், சமூகக் குற்றச்சாட்டின் அழுத்தத்தால் தற்காலிகமாக ஒதுங்கினர். ஆனால், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் 'பிரபலங்களுக்கு' மட்டும் தமிழ்நாட்டு முற்போக்குக் களங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
கேரள 'வேடன்'
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் 'வேடன்' (Vedan) மீது கடந்த காலங்களில் கடுமையான பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் (Me Too Complaints) அடுக்கடுக்காக வைக்கப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகளை அவரே ஒப்புக்கொண்டு பொதுவெளியில் மன்னிப்புக் கோரிய வரலாறும் உண்டு.
ஆனால், தன் மீதான கரைகள் இன்னும் சட்டப்படியாகத் துடைக்கப்படாத சூழலில், அண்மையில் அவர் தமிழ்நாடு வருகை தந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சமூகநீதி அமைச்சருமான வன்னியரசு அவர்களைச் சந்தித்துப் பேட்டியும் கொடுத்திருக்கிறார்.
பெண்ணுரிமை பேசும், சனாதன ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு இயக்கத்தின் முன்னணித் தலைவர், மோசமான பாலியல் குற்றச்சாட்டு இருக்கும் ஒரு நபரைத் தோளோடு தோள் சேர்த்து அரவணைத்துப் பேட்டி கொடுப்பது எந்த வகையான முற்போக்கு அரசியல்?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் வேடன் சந்தித்துள்ளார். யார் வேடனை சந்தித்து மரியாதை செய்தாலும் அது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகவே அமையும்.
பொதுவாழ்வில் அறம்
குற்றச் செயல்களிலேயே மிக கொடூரமானதும், அருவருப்பானதுமான குற்றம் பெண்ணின் உடல் மீதும், உளவியல் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைதான்.
ஒரு நபர் மீது இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அதிலிருந்து அவர் நீதிமன்றத்தால் முழுமையாக விடுவிக்கப்படாத வரை, அவர் பொதுவாழ்வில் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதே பொது ஒழுக்கம் (Public Morality). தன் மீதான கறை நீங்காத ஒரு நபர், மீண்டும் பொதுவெளிக்கு வந்து முற்போக்கு அரசியல் பேசுவதும், அதற்கு இங்கிருக்கும் தலைவர்கள் ஆதரவு கரம் நீட்டுவதும் பாதிக்கப்பட்ட பெண்களை இழிவு படுத்துவதற்கு ஒப்பாகும். அதுவும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக சிங்கப் பெண் படை அமைக்கப்பட்ட அதே நாளில் வேடனை அரவணைப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
'வேடன்' ஒடுக்கப்பட்ட பூர்வகுடிப் பின்னணியில் இருந்து ராப் இசை பாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரது 'பாலியல் குற்றங்களை' முற்போக்குச் சக்திகள் மன்னித்து அரவணைக்கப் போகிறதா? சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் ஒரு கலை வடிவம், பெண்ணை ஒடுக்கும் பாலியல் குற்றவாளியின் கைகளில் இருக்கும்போது அதை எப்படிக் கொண்டாட முடியும்?
சாதி ஒழிப்பைப் பேசும் தலைவர்கள், வர்க்க மற்றும் பாலினச் சமத்துவப் பார்வையில் (Gender & Class Consciousness) இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சந்திப்பே சான்று. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, முற்போக்காகப் பேசுகிறார் என்பதற்காக அவரை ஆரத்தழுவிக்கொள்வது தார்மீக ரீதியாக அறமற்ற செயலாகும்.
சாதி, பாலினம், வர்க்கம் — மூன்றும் ஒரே தராசில் நிறுக்கப்பட வேண்டும். அதுவே உண்மையான முற்போக்கு அரசியல்.
ஊரான் @ பொன். சேகர்
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment