Friday 18 June 2021

வேலூர்: கேள்விக்குரியாகும் ஆட்டோத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

கரோனா பெருங்தொற்றின் இரண்டாவது அலை தமிழ் நாட்டையும் இந்தியாவையும் புரட்டிப் போட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக் கவசம், வெளியில் செல்லாமல் வீட்டிலேயே தனித்திருந்தல் மற்றும் தடுப்பூசி இவற்றைத் தவிர நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள  வேறு வழியே இல்லை என்று சொல்லி அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாட வருவாயை நம்பி வாழும் ஆட்டோத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'இ-பாஸ்' இல்லாமல் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என விதி உள்ளதால் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஆ்டோக்கள் முடங்கிக் கிடக்கின்றன்; ஆட்டோக்கள் மட்டுமல்ல அவற்றை நம்பி வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்களும் வாழ வழியின்றித் தவிக்கின்றனர்.

எனவே ஆட்டோத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கக் கோரி வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆட்டோத் தொழிலாளர்கள் தோழர் ஆல்வின் தலைமையில் தோழர்கள் திருமலை, செல்வம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் இராவணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் 18.06.2021 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து,

ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை இரத்து செய்ய வேண்டும்,
ஆட்டோத் தொரிலாளர்களுக்கு மாதம் ரூ.7500- நிவாரணம் தர வேண்டும், 
ஆட்டோக்களில் மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும், 
ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த கால அவகாசம் வேண்டும்,
ஆட்டோத் தொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை மற்றும் ஆட்டோக்களை காவல் நிலையங்களில் முடக்குவதைக் கைவிட வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரும் ஆவன செய்வதாகக் கூறி உள்ளார்.





தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்