Tuesday 9 March 2021

சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றுக்கு அங்கீகாரம்!

புத்தகக் கண்காட்சியில் வெள்ளி விழா ஆண்டில் கீழைக்காற்று !

09.03.2021, மாலை 6 மணிக்கு பபாப்சியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கீழைக்காற்று !
தோழர்களே !
கீழைக்காற்று பதிப்பகம் பபாப்சியில் இணைந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அங்கீகரித்து பபாப்சி சார்பில் 09.03.2021 மாலை கீழைக்காற்று உரிமையாளர் தோழர் முகுந்தன் பெயரில் பரிசு வழங்கினர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
"முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி" என்ற அறிமுகத்தை அனைவரும் ஏற்கும் வகையிலும் மார்க்சிய - லெனினிய அரசியலில் வழுவாமலும், வியாபார நோக்கமில்லாமலும் தமிழகம் தழுவிய அளவில் உள்ள தோழர்களின் உணர்வுபூர்வமான பங்களிப்போடு இந்த நிலையை கீழைக்காற்று அடைந்துள்ளது.
இதில் கிடைக்கும் உற்சாகத்துடன், நமது அரசியல் பணியை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம் !

இவண்

கீழைக்காற்று







தமிழகத் தேர்தல்: மக்கள் அதிகாரம் என்ன செய்யப் போகிறது?

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் : மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள்!

நாள்:09.03.2021

அன்புடையீர், வணக்கம் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் 09.03.2021 செவ்வாய் அன்று காலை 11-00 மணியளவில் திருச்சி, உறையூர் கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுகுழு கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், மருது, செழியன், பாலு, மோகன் மற்றும் பிற மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் வருகிற 2021 ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தமிழக சட்டமன்றத் தேர்தலில், கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களையும், காவி பாசிசத்தையும் அமல்படுத்தி, போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி வரும் பாசிச பா.ஜ.க-வையும், அடிமைச் சேவகம் செய்து வரும் அதிமுக, பா.ம.க கூட்டணிக் கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2. ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பெரியாரிய - திராவிட கருத்துக்களையும், பார்ப்பனிய சனாதன எதிர்ப்பு மரபையும் ஒழிக்க நினைக்கும் பா.ஜ.க விற்கு ஆதரவாகச் செயல்படும் கமலஹாசன், சீமான் போன்றோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3. மக்கள் அதிகாரம் முதலாளித்துவ தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்ற, பங்கேற்காத அமைப்பு. கார்ப்பரேட் - காவி பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம், பிரச்சாரம் என செயல்படுத்தி வருகிறோம். வடமாநிலங்கள் போல் தேர்தல் மூலம் பாசிச பா.ஜ.க தனது ஆட்சி அதிகாரத்தைத் தமிழகத்தில் நிறுவத் துடிக்கிறது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி, ஆரிய – பார்ப்பனிய எதிர்ப்பு, சனாதன வருணாசிரம எதிர்ப்புப் பாரம்பரியத்தை வீழ்த்தித் தனது பாசிச அதிகாரத்தை நிறுவ வேண்டும் என வெறிகொண்டு களமிறங்கி உள்ளது. இத்தகைய பாசிச பா.ஜ.கவையும், அதற்குத் துணை போகும் அதிமுக கூட்டணிக் கட்சிகளையும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பது தமிழக மக்களின் கடமை என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என இயக்கம் மேற்கொள்ள உள்ளோம் என்பதை இப்பொதுக்குழு மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
4. கார்ப்பரேட் - காவி பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த அனைத்து ஜனநாயக இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய, சிறுபான்மையின சக்திகளும் ஒன்று திரண்டு தொடர்ந்து போராட வேண்டும் என இப்பொதுக்குழு அறைகூவி அழைக்கிறது.

5. பா.ஜக மற்ற கட்சிகளைப் போன்று தேர்தல் கட்சி அல்ல. ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்ற இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்பின் கொடிய அரசியல் பிரிவு. ஜெர்மனியில் பாராளுமன்றத்தின் மூலம் சட்டபூர்வமான வழியில்தான் ஹிட்லர் தனது பாசிசத்தை அமல்படுத்தி கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள், மக்கள் என பல லட்சம் பேரை கொன்று குவித்தான். ஆரிய மேன்மை பேசி, தேசவெறியூட்டி, நாட்டின் வளர்ச்சி எனப் பிரச்சாரம் செய்து தனது பாசிச அதிகாரத்தை நிலை நாட்டினான். ஹிட்லரின் வாரிசுகளான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவும் அதே சட்டபூர்வ வழியில் தேர்தலை பயன்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் பாசிசத்தைப் பல வடிவங்களில் அமல்படுத்தி வருகிறது. பாகிஸ்தான், சீன எதிர்ப்பு என தேசவெறியூட்டி, சாதி, மத, இன வேறுபாடுகளை ஊதிப் பெருக்கி, மக்களை மோதவிட்டு, கலவரம் நடத்தி தனது ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கி வருகிறது. தமிழகத்திலும் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு காலூன்ற வருகிறது. இந்த அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் பா.ஜ.க-வையும் அதிமுக கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

6. 2019 –ல் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய மக்கள் அனைவரையும் தங்களது குடியுரிமையை நிருபிக்க சி.ஏ.ஏ, என்ஆர்.சி, என்பிஆர். சட்டத்தைக் கொண்டு வந்து நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் அனைத்துப் பொதுத்துறைகளையும் இரயில்வே, துறைமுகம், வங்கி, காப்பீடு, சாலை உட்பட, கடல்வளம், கல்வி நிறுவனங்கள், இயற்கை கனிமவளங்கள், மின்சாரம், வேளாண்மை, உணவு உற்பத்தி என அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள், சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பல்வேறு சட்டங்களைப் பாராளுமன்றத்தில் எந்த விவாதமுமின்றி தனது அதிகார மிருக பலத்தால் நிறைவேற்றி உள்ளது. 3 வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பஞ்சாப், ஹரியான விவசாயிகள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு நூறு நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள போராட்டத்தை மாவோயிஸ்டுகள், காலிஸ்தான் என அவதூறுசெய்து, அடக்குமுறைகளை ஏவி சீர்குலைக்கப் பார்க்கிறது. பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை கார்ப்பரேட் சேவையை எதிர்த்துப் பேசும் அறிவுத்துறையினரை, மனித உரிமைப் போராளிகளை, போராடும் மக்களை, தேசத்துரோகி என முத்திரைகுத்தி ஊபா, போன்ற கொடிய வழக்கில் கைது செய்து பிணையின்றி சிறையிலடைக்கிறது. அதுமட்டுமல்ல, பன்சாரே, தபோல்கர், கௌவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற அறிவுத்துறையினரை சனாதன் சன்ஸ்தான் என்ற இந்துத்வா பயங்கரவாத அமைப்பின் மூலம் சுட்டுப் படுகொலை செய்கிறது. இத்தகைய மனிதகுல விரோத சக்தியை சமூகத்திலிருந்தே துடைத்தெறிய மக்கள் போராட வேண்டும் எனவும், அதற்கான போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்று களத்தில் நிற்கவும் இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

7. கார்ப்பரேட் சேவைக்காக பா.ஜ.க-விற்கு தேர்தல் நன்கொடையாக கார்ப்பரேட் முதலாளிகள் பல லட்சம் கோடிகள் பணம் கொடுத்து வருகின்றனர். அதனால் பா.ஜ.க-வால் யாரையும், எந்தக் கட்சியையும் விலைக்கு வாங்க முடியும். எத்தனை தேர்தல்களையும் பல ஆயிரம் கோடி வாரியிறைத்து சந்திக்க முடியும். தேர்ந்தெடுக்கபட்ட அரசாங்கத்தை குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் கவிழ்த்து பல மாநிலங்களில் பா.ஜ.க அதிகாரத்தைக் குறுக்கு வழியில் கைபற்றி உள்ளது. இத்தகைய பா.ஜ.க-விற்கு தமிழகத்தில் ஒரு எம்.பி - எம்.எல்.ஏ கூட இல்லை. ஆனாலும் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தை அடிமை அதிமுக மூலம் பா.ஜ.க-தான் ஆட்சி அதிகாரத்தை நடத்தி வந்தது, மாநில உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன. இந்நிலையில் மொத்தத் தமிழகத்தையும் அடிமையாக்கும் திட்டத்துடன் 2021 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் பா.ஜ.க-வையும் அதன் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என தமிழக மக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

8. ’’பூர்ஷ்வா வர்க்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகளையும் பாசிசத்தின் வளர்ச்சியையையும் அவற்றின் தயாரிப்புக் கட்டங்களிலேயே யார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ அவர்கள் பாசிசத்தின் வெற்றியை தடுக்கும் நிலையில் இருக்கவில்லை. அதற்கு நேர்மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கிறார்கள் என்று பொருளாகும்.’’ என்று பாசிசத்தை முறியடிப்பதற்கு மார்க்சிய ஆசான்கள் எச்சரிக்கை செய்து வழிகாட்டியுள்ளனர். இதனை கணக்கில் கொண்டு நம் நாட்டில் வளர்ந்து வரும் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை முறியடிக்க அதற்கெதிரான சக்திகள் அனைவரையும் ஒன்று திரட்டுவது தற்போதைய முதன்மைக் கடமையாகும் என இப்பொதுக்குழு கருதுகிறது.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு - புதுவை
தொடர்பு எண்.9597138959







Saturday 6 March 2021

வேளாண் சட்டங்களை எதிர்த்து நூறாவது நாள்! தொடரும் போராட்டங்கள்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டி உள்ள நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் 06.03.2021 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கடலூர்

நூறு நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதைக் கண்டுகொள்ளாத மோடி அரசை கண்டிக்கும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.






தகவல்

மக்கள் அதிகாரம்
கடலூர் மண்டலம்

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி கிளை,
தொடர்புக்கு:-9444457892.