Thursday 12 November 2020

ஆட்டோத் தொழிலாளி: ரொட்டித் துண்டுக்குத் தூக்குத் தண்டனையா?

கடந்த எட்டு மாதங்களாக கரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியதால் பலருடைய வாழ்வும் இருண்டு விட்டது. அதில் ஒன்று ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வு. இன்று கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்படிருந்தாலூம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் அட்டூழியங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இது தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால் தங்களின் தேவைகளுக்காக மக்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 06.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு பயணிகளை இறக்குவதற்காக வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு ஆட்டோ நுழைகிறது. அப்பொழுது எதிரே நின்ற ஒரு காரில் இருந்து ஒருவர் இறங்கி ஆட்டோவை நிறுத்துகிறார். பயணிகளை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அந்த ஆட்டோ எடுத்து செல்லப்படுகிறது. 

அங்கே ஆவணங்களை காட்டச் சொல்கிறார்கள். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் ஆட்டோ ஓட்டுநர் காட்டுகிறார். எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஆனால் "அசல் எங்கே?" என்று அதிகாரிகள் கேட்கின்றனர். "அசல் ஆவணங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனத்திடம் இருக்கிறது, தேவை எனில் வாங்கிக் காட்டுகிறேன்" என்று கூறியும் ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காகவும் மற்றும் பேருந்து நிலையத்திற்குள் நுழையத் தடை இருந்தும் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தற்காகவும் ஆட்டோவை பறிமுதல் செய்வதாகக் கூறுகிறார் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி.

பண்டிகைக் காலத்தில் ஆட்டோ இல்லை என்றால் வருவாய்க்கு என்ன செய்ய முடியும் என்ற சிந்தனையோடு செய்வதறியாதுத் தவித்த அந்த ஆட்டோத் தொழிலாளி, தனது சக ஆட்டோத் தோழர்களுக்குத் தகவல் தெரிவிக்க, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் ஆல்வின், செல்வம், திருமலை உள்ளிட்ட சுமார் பத்து பேர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு விரைகின்றனர். 

"வட்டாரப் போக்குவரத்து அதிகாரியைச் சந்திக்க வேண்டும்" என்று வரவேற்பாளர் என்ற பெயரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அவர்கள் கேட்டபோது "ரூ.250 பணம் கட்டினால் மட்டும்தான் ஆர்டிஓவைப் பார்க்கமுடியும்" என்று அந்தப்பெண் கூறுகிறார். "இது என்ன ஆர்டிஓ அலுவலகமா? இல்லை மருத்துவமனையா? டாக்டர்கள் கன்சல்டிங் ஃபீஸ் கேட்பது போல பணம் கேட்கிறீர்கள்?" எனத் தோழர்கள் கேள்வி எழுப்பினர். 

"பொதுமக்களின் குறைகளைக் கேட்க 'மக்கள் தொடர்பு அதிகாரி'தானே இருக்க வேண்டும். நீங்கள் என்ன 'வரவேற்பாளர்' என்று போர்டு வைத்திருக்கிறீர்கள்? இது என்ன கல்யாண மண்டபமா?" எனக் கேள்வி எழுப்பிய உடன் அங்கிருந்த வரவேற்பாளர் 'போர்டு' உடனடியாக அகற்றப்பட்டு மக்கள் தொடர்பு அலுவலர் என்ற போர்டு வைக்கப்படுகிறது.

பிறகு அங்கு வந்த பொதுத் தகவல் அலுவலரிடம் இது பற்றி கேட்டபோது ஆர்டிஓவைப் பார்க்க பணம் எதுவும் கட்டத் தேவையில்லை என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார்.  விதிமுறைகளை மீறியதற்காக  ரூ.10,000 அபராதம் கட்டச் சொல்கிறார்கள். "இது என்ன? பசிக்கு ரொட்டித் துண்டு எடுத்தவனுக்கு தூக்குத் தண்டனை கொடுப்பது போல உள்ளதே உங்களது தீர்ப்பு!" என்று தோழர்கள் கேள்வி எழுப்பி அபராதம் ஏதும் இன்றி ஆட்டோவை விடுவிக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

ஆட்டோவை உடனடியாக மீட்கவில்லை என்றால் வருவாய் ஏதுமின்றி தவிக்க வேண்டிய வரும் என அந்தத் தொழிலாளியும் குறைந்தபட்ச அபராதத் தொகையை செலுத்த முன் வந்ததால் பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோ வரக்கூடாது என மாநகராட்சி விதித்துள்ள தடையை மீறியதற்காக ரூபாய் 500 அபராதம் செலுத்த முன்வந்தபோதும் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்தனர். 

"நீங்கள் ஏற்க வில்லை என்றால் நாங்கள் பிரசுரம், சுவரொட்டி என இயக்கம் எடுத்து உங்களுக்கு எதிராகப் போராட வேண்டி வரும்" என எச்சரித்த பிறகு "5000 ரூபாயாவது கட்டுங்கள்" என்றனர். "முடியாது" என்ற பிறகு "2500 ரூபாயாவது கட்டுங்கள்" என்றனர். அதற்கும் முடியாது என்ற பிறகு 1000 ரூபாய் கட்டுவதற்கு ஒப்புக்கொண்டனர்.

1000 ரூபாய் அபராதம் கட்டிய பிறகு அதற்கான ரசீதை கொடுத்தபோதும் ஆட்டோவை ஒப்படைக்க மறுத்தனர். "விதிமுறையை மீறி ஆட்டோவை  ஓட்டியிருக்கிறேன், இனி அவ்வாறு செய்ய மாட்டேன்" என உறுதிமொழி அளித்து 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மாலை நாலரை மணி ஆகியும் ஆட்டோவை ஒப்படைக்கவில்லை. உடனே அலுவலகத்திற்கு உள்ளேயே சமூக இடைவெளி விட்டுத் தோழர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணாப் போராட்டத்தை தொடங்கிய பிறகே மாலை ஐந்தரை மணிக்கு உறுதிமொழி எதுவும் எழுதிக் கொடுக்காமலேயே ஆட்டோவை விடுவித்தனர்.

பசிக்கு ஒரு ரொட்டித் துண்டை எடுத்தவனுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கும் கொடிய நீதிபதிகளாக வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் புதிய அவதாரம் எடுக்கின்றனர்.

எல்லாமே 'டிஜிட்டல்' மயமான பிறகு இவர்கள் எப்படி பத்தாயிரம் பதினைந்தாயிரம் அபராதம் கட்டச் சொல்கின்றனர்? அதற்கான விதிமுறைகள் எங்கே இருக்கின்றன?செலுத்தப் படுகின்ற அபராதத் தொகையும் 'கம்பவுண்ட் ஃபீ' (compound fee) என்றே குறிப்பிடப்படுகிறது. இவையெல்லாம் கம்ப்யூட்டரைக் கொண்டு மோசடி நடக்கிறதோ என்கிற ஐயத்தை வலுவாக எழுப்புகிறது.

பறிமுதல் செய்யப்படும் வண்டிகளுக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. வெயிலாலும் மழையாலும் பாழ்பட்டு நாசம் அடைகின்றன.

கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலுமாக இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. பேருந்துகளிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் போதே, ஆடு மாடுகளை அடைப்பது போலத்தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இவை எல்லாம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையோ!

ஒரு இந்தியக் குடிமகன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒரு தொழிலைச் செய்வதற்கும், உயிர் வாழ்வதற்கும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒரு சில ஊழல் அதிகாரிகள் பறித்துக் கொள்ள ஏழைகள் என்ன கிள்ளுக் கீரைகளா?

வாகனப் சோதனை செய்யும் இடத்தில் ஆவணங்களைச் சோதிக்காமல் வண்டியைக் கைப்பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திறகு எடுத்துச் சென்றது என்பது விசாரணை இன்றி தண்டனை வழங்கியதற்கு ஒப்பாகும் என்பதால் வட்டாரப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகைக் காலத்தில் உழைத்து வாழ உழைப்பாளிகள் விழைகிறார்கள். ஆனால் ஊழல் அதிகாரிகளோ உழைக்காமல் பாக்கெட்டை நிரப்பப் பார்க்கிறார்கள். உழைப்பாளிகளின் கரங்கள் உயராதவரை ஊழல்வாதிகளின் கொட்டம் தொடரவே செய்யும்.

தகவல் 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்



No comments:

Post a Comment