Sunday 7 November 2021

வேலூரில் நவம்பர் புரட்சி விழா!

விலைவாசி உயர்வு, அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு, ஆலை மூடல்-ஆட்குறைப்பு, வேலையின்மை,  சுற்றுச்சூழல்-சுகாதாரக் கேடுகள், காசு உள்ளவனுக்கே கல்வி மற்றும் மருத்துவம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரதட்சணை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி ரீதியிலான வன்கொடுமைகள், மத-மொழி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னல்களிலிருந்து தங்களுக்கு விடுதலை  கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டி இம்மண்ணில் ஒரு பொன்னுலகைப் படைத்த 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை நோக்கி பயணிப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களது துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

சோசலிசம்தான் உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று என்றாலும்கூட கூட, இன்றைய சூழலில் இந்திய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதே மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதற்காக, மோடிக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறிவுத்துறையினர் ஓர் அணியில் சேர வேண்டும். இல்லையேல் காவிகள் நம்மை கபளீகரம் செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆம்! இன்றைய தேவை மோடிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு. சாத்தியப்பட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்தி மோடியை வீழ்த்துவதுதான் இன்றைய உடனடிக் கடமை. அதற்கான விதையை ஊன்றும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்  நவம்பர் புரட்சி விழாவை தமிழகமெங்கும் கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா குறித்த ஒரு தொகுப்பு.

07.11.2021 மாலை, வேலூர் மாநகரில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி தலைமையில் நவம்பர் புரட்சி விழா எழுச்சியோடு நடைபெற்றது.

மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் இராவணன் அவர்களும், சங்கமாய் சேருவதன் அவசியம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் செல்வம் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அடிமைத்தனம் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து வழக்கறிஞர் பாலு அவர்களும், மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமேயானால் 2025 ல், ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவின் போது இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கக் கூடும் என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலா அவர்களும், சோசலிசத்தை நேசித்த விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் வரலாற்றை பதிவு செய்து தோழர் விசு அவர்களும், நேசம் தலைப்பில் தோழர் இரமணி அவர்களும் உரையாற்றினர்.

அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளில் நலனைக் காக்கவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவவும் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிக்க மோடி கும்பலுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் ஓரணியில் ஐக்கிய முன்னணியாய் அணிசேர்வதன் அவசியத்தை வலியுறுத்தி தொழிற்சங்க முன்னோடி தோழர் மோகன்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

லெனினின் ஏன் தேவைப்படுகிறார்? என்ற தலைப்பில் மகஇக தோழர் முத்துராமன் கவிதை வாசிக்க, ‘அம்மா இல்லாம யாருமே இல்ல!’ , ‘சம்மதமா? சம்மதமா?’,  'சாமக்கோழி கூவும் நேரத்திலே,  ஊருக்கு ஊரு சாராயம்,  நாடு முன்னேறுதுங்குறான்,  மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!’,  டெல்லி சலோ! டெல்லி சலோ!’, உள்ளிட்ட பாடல்களை கலைக்குழு தோழர்கள் பாட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தோழர் சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

வேலூர் மாவட்டம்

விழா காட்சிகள்












காலையில் சங்கக் கிளைகளில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.