வேளாண் குடிகள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். அவன் விளைவிக்கின்ற விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற அதிகாரம் அவனுக்கு இருந்தால்தான், முட்டுச் செலவு போக அவன் கையில் காசு புரளும், தனக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை வாங்க முடியும். உற்பத்திப் பொருட்கள் விற்பனையானால் ஆலைகள் உருவாகும், வேலைவாய்ப்புகள் பெருகும். அனைவருக்கும் உத்தரவாதமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுவிட்டால் அதுதானே பொன்னுலகம். இதைக் கொள்கையாகக் கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் என்னைப் பிணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். இதற்காக எத்தகைய இன்னல்வரினும் எதிர்கொள்ளத் துணிந்தேன்.
வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். எனது இயக்க வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிற, தாலி-சடங்கு-சம்பிரதாயங்கள், மொய்-சீர்-வரதட்சணையை மறுக்கின்ற துணைதான் தேவை என அப்பாவுக்குக் கடுதாசுப் போட்டேன். தாய்மாமன் பரிந்துரைத்தப் பெண் வீட்டார் இதை ஏற்க மறுத்ததால் அப்பெண்ணை நிராகரித்தேன். மாமன் சொல்லைத் தட்டிக் கழித்ததால் பின்னாளில் அவருடனான உறவையும் இழந்தேன். வையத்தில் எங்கு தேடினாலும் தாலி மறுப்புக்குப் பெண் கிடைக்காது என்று கை விரித்தார்கள். நானாகத் தேடினேன். அப்பொழுதுதான் பெல் நிறுவன பயிற்சியாளர்களின் IV-வது தொகுப்பைச் (technician apprentice 4th batch) சேர்ந்த சகப் பயிற்சியாளரான ரங்கன் உதவிக்கு வந்தார்.
3-வது, 4-வது மற்றும் 5-வது தொகுப்பைச் சேரந்த சுமார் 400 பேர் 1978 ஆம் ஆண்டு பட்டயதாரர்கள். ஆறு மாதம் வகுப்பறைப் பயிற்சி, ஆறுமாதம் களப்பணிப் பயிற்சி என பெல் மனிதவள மேம்பாட்டு மையம் கொடுத்தப் பயிற்சியால் பொறியியற்க் களஞ்சியமாய் வார்க்கப்பட்டோம். AMIE முடித்து எப்படியாவது 'எக்சிகூட்டிவ்' ஆகிவிட வேண்டும் என்ற முனைப்போடு சிலரும், "Be Happy Enjoy Life" என மகிழ்ந்த சிலரும், ஆலைப் பணியோடு சமூகப் பணியிலும் அக்கறை கொண்ட சிலரும் என கதம்பமாய்த் திகழ்ந்தது எங்கள் அணி. தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களை பயிற்சிக் காலத்தின் போது விடுதிக்கு அழைத்து, அவரது தமிழைச் சுவைத்தவர்கள் நாங்கள்.
நண்பர் ரங்கன் அறிமுகப்படுத்தியப் பெண் மகஇக-வோடு மாற்றுக் கருத்துடைய மக்கள் கலாசாரக் கழகத்தின் களப்பணியாளர். நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளை கைவிட்டதால், அவர்கள் "ஓடுகாலிகள்" என்று விளிக்கப்பட்ட காலம் அது. மாற்று அமைப்பு என்பதால் அரசியல் பேசி, இணங்கிய பிறகு இருவரும் இணைவது என உறுதியானது.
'இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு மணவிழா எதற்கு, சேர்ந்து வாழுங்களேன்' என சில சொந்தங்கள் வெறுப்பாய்ச் சொன்னபோது, எட்டுவகைத் திருமணங்களில் இது காந்தர்வத் திருமணம் என பெரியப்பா நாராயணசாமி ஆதரவுக் கரம் நீட்ட, அவர் பெயரிலேயே அழைப்பிதழும் போடப்பட்டது.
மின்சாரம் இல்லாத ஊராச்சே, பேச வேண்டும், பாட வேண்டும் என்பதற்காக கிழக்கே நானூறு மீட்டர், மேற்கே நானூறு மீட்டர் என இரண்டு பம்ப் செட்டுகளிலிருந்து உயரமானக் கழிகளை ஊன்றி ஒயர் இழுத்துக் கொண்டு வந்தோம் மின்சாரத்தைத் தெருவுக்கு. இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் செங்கம் கொட்டாவூரிலிருந்து வாழை இலைகள் மிதிவண்டியிலேயே உறவுகளால் எடுத்து வரப்பட்டன. உறவுகள் ஓடி ஆடி வேலை செய்ய 1986, ஜூன் முதல் நாள், ஞாயிறு மாலை ராகு காலத்தில் உரை வீச்சு, உருக வைத்த நாடகம், கலை நிகழ்ச்சி என களைகட்ட, தோழர் கதிரவன் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு விழா எனது வீட்டு வாசலிலேயே இனிதே நடந்தது. வீடியோ பதிவு ஆடம்பரம் என்பதால் ஆதியின் ஆக்கத்தில் நிகழ்வுகள் நிழற்படமாய் மாறின. 'கலிகாலத்தில் இப்படியுமா? பிழைக்கத் தெரியாதவன்' என எண்ணியோரும் உண்டு.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்:
தொடருக..... தொடர்கிறேன்..
ReplyDeleteஊரானில் தொடங்கிய நட்பு இங்கும் தொடர்கிறது. நன்றி! வாழ்த்துகள்.
Delete