Thursday, 10 September 2026

'வெட்டிப் பய' என திட்டலாமா?

'வெட்டி' எனும் சொல்லின் வரலாற்றுப் பின்னணியும் சாதிய அடக்குமுறையும்

வெட்டியான் / வெட்டி: சமூகத்தில் இறந்தோரின் பிணங்களை அடக்கம் செய்வதும், மயானங்களைப் பராமரிப்பதும், நிலப்பிரபுத்துவக் காலத்தில் ஊர் வேலைகளைச் செய்வதும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த (பறையர்/பஞ்சமர்) மக்களிடம் கட்டாயப் பணிகளாகச் சுமத்தப்பட்டன.


ஊதியமில்லாச் சுரண்டல் (Unpaid Labor): நிலவுடைமைச் சமூகத்தில் இத்தகைய உழைப்புக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாமல், "வெட்டி வேலை" (வெறும் வேலை அல்லது ஊதியமில்லா உழைப்பு) என்ற பெயரிலேயே கட்டாயப்படுத்தி வாங்கும் வழக்கம் இருந்தது.

தொழில் இழிவும் தீண்டாமையும்: பிறப்பால் மனிதர்களைப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் பிணம் எரிக்கும்/அடக்கம் செய்யும் வேலைக்குத் தள்ளி, அதை "இழிவான வேலை" என முத்திரை குத்தியது சாதியக் கட்டமைப்பு.

மொழியில் நிலவும் சாதிய ஆதிக்கம்

இன்றைய அன்றாடப் பேச்சில், ஒருவர் பயனற்ற காரியத்தைச் செய்தால் அல்லது சும்மா இருந்தால் அவரை "வெட்டிப் பயல்" என்றோ, அவர் செய்வதை "வெட்டி வேலை" என்றோ மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது.

மதிப்பீடற்ற உழைப்பு: சமூகத்தின் மிக முக்கியமான மற்றும் கடினமான ஒரு களப் பணியைச் செய்வோரின் தொழிலையும் உழைப்பையும் "பயனற்றது" அல்லது "மதிப்பற்றது" எனக் கொச்சைப்படுத்துவது இதன் பின்னால் உள்ள சாதிய மனோபாவம்.

தீண்டாமையின் வடிவம்: இச்சொல்லை ஏளனமாகவும் வசைச்சொல்லாகவும் பயன்படுத்தும்போது, அதில் அந்தத் தொழிலைச் சார்ந்த மக்கள் மீதான தீண்டாமையும், தொழிலை வைத்து மனிதனை மதிப்பிடும் வர்க்க/சாதிய இழிவும் இயல்பாகவே வெளிப்படுகிறது.

மொழித் தூய்மையும் முற்போக்குச் சிந்தனையும்

மார்க்சிய-பெரியார்-அம்பேத்கர் சிந்தனைப் பார்வையில், அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, மொழியும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

ஆணாதிக்கத்தையும் சாதி இழிவையும் கடத்தக்கூடிய "சண்டாளி", "சண்டாளன்", "புலையன்", "வெட்டியான்", "பரதேசி" போன்ற பல சொற்கள் வசைகளாக மாற்றப்பட்டதன் பின்னே ஆளும் வர்க்கத்தின் சாதிய மனோபாவமே உள்ளது.

இத்தகைய சொற்களின் பின்னுள்ள வர்க்க/சாதியச் சுரண்டலை உணர்ந்து, அவற்றை அன்றாடப் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்து புறக்கணிப்பதே ஒரு முற்போக்குச் சமூகத்தின் அடையாளமாகும்.

"வெட்டி" என்று ஒருவரைத் திட்டுவது வெறும் சொல்லாடல் அல்ல; அது தீண்டாமையையும் தொழில் இழிவையும் இயல்பானதாகக் கருதும் சாதியச் சிந்தனையின் எச்சமே! 

இத்தகைய மொழியியல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகநீதிக்கானப் பயணத்தில் மிக முக்கியமானது.

தமிழ்மணி

Friday, 4 September 2026

ஓய்வூதியம் பெறுபவர்கள் பிள்ளைகளிடம் இருந்து குடும்ப பராமரிப்புத் தொகை பெற முடியுமா?

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (Senior Citizens Act, 2007), “தமக்குத் தேவையான பராமரிப்புத் தொகையைப் பெற முடியாத அல்லது தங்களைத் தாமே பராமரித்துக் கொள்ள முடியாத” முதியவர்கள் மட்டுமே தங்களது பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புத் தொகை (Maintenance) கோரி தீர்ப்பாயத்தை அணுக முடியும் என்ற சட்டக்கூறு நடைமுறையில் உள்ளது.


மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய பீமராவ் எதிர் ஆஷிஷ் (Bhimrao v. Ashish, 2026) வழக்கின் தீர்ப்பில், "சொந்த ஓய்வூதியம் (Regular Pension) மற்றும் மறைந்த மனைவியின் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெறக்கூடிய ஒரு மூத்த குடிமகன், தன்னைத் தானே பராமரிக்க இயலாதவர் என்ற வரையறைக்குள் வரமாட்டார். எனவே, அவர் பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 5-இன் கீழ் பராமரிப்புத் தொகையோ அல்லது அதைச் சார்ந்த நிவாரணங்களையோ கோர முடியாது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தத் தீர்ப்புச் சுட்டிக்காட்டும் கொள்கை நடைமுறையில் பல கேள்விகளையும், முதியோரின் பொருளாதார யதார்த்தம் குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.


1. குறைந்தபட்சத் தொகை எது? சட்டத்தில் நிலவும் இடைவெளி

மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைத் தர்க்கம், "ஓய்வூதியம் பெறும் ஒருவர் சுயசார்புடையவர்" என்பதாகும். ஆனால், எவ்வளவு தொகை ஓய்வூதியமாகப் பெற்றால் அவர் சுயசார்புடையவராகக் கருதப்படுவார்? என்பதற்கான தெளிவான வரையறையோ அல்லது தொகையின் அளவுகோலோ (Quantum) சட்டத்திலோ அல்லது நீதிமன்ற வழிகாட்டுதல்களிலோ சுட்டிக்காட்டப்படவில்லை.

• சொற்ப ஓய்வூதியம் பெறோரின் நிலை: சேமநல நிதி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதத்திற்கு ₹1,000 மட்டுமே ஓய்வூதியம் வாங்குபவர்களும் நாட்டில் உண்டு. பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ₹2,000 முதல் ₹3,000 வரை மட்டுமே சொற்ப ஓய்வூதியம் பெறும் முதியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்

• இன்றைய வாழ்க்கைச் செலவு: ஒரு முதிய தம்பதியர் மருத்துவச் செலவுகள், வாடகை, உணவு மற்றும் அன்றாடப் பராமரிப்புகளுக்கு மாதம் ₹2,000 அல்லது ₹5,000 ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி இன்றைய பணவீக்கச் சூழலில் கண்ணியமாக வாழ முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி.

"ஓய்வூதியம் பெறுகிறார்" என்ற ஒரே காரணத்திற்காக, அத்தொகை அவரது அத்தியாவசிய உயிர்வாழ்வுக்குப் போதுமானதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல், பராமரிப்புச் சட்டத்தின் கதவுகளை மூடுவது சமூக நலச் சட்டத்தின் நோக்கத்திற்கே முரணாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.


2. சட்டத்தின் நோக்கம்: "தேவை சார்ந்த பராமரிப்பு" (Need-based Maintenance)

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கம் "தேவை சார்ந்த பராமரிப்பு" (Need-based Maintenance) வழங்குவதுதான்.

• சட்டத்தின் பிரிவு 4(1)-இன் படி, ஒரு மூத்த குடிமகன் தன்னுடைய வருமானம் அல்லது சொத்துகளின் மூலம் தனது வாழ்க்கையைப் பேண முடியாத நிலையில் மட்டுமே பராமரிப்புத் தொகை கோர உரிமை பெறுகிறார்.

• உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில், சட்டப்பூர்வ நிவாரணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க "நிதிச் சுயசார்பு" ஒரு தகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த நிதிச் சுயசார்பு என்பது வெறும் "வருமானம் உள்ளது" என்பதைக் குறிக்கிறதா அல்லது "வாழத் தேவையான தகுந்த வருமானம் உள்ளது" என்பதைக் குறிக்கிறதா என்பதைப் பகுத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

3. தீர்க்கப்பட வேண்டிய அவசியக் கோரிக்கைகள்

ஒரு மூத்த குடிமகன் பராமரிப்புத் தொகை பெறத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க, நீதிமன்றங்களும் அரசுத் தீர்ப்பாயங்களும் பின்வரும் திருத்தங்களையும் அளவுகோல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்:

• குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு நிர்ணயம் (Minimum Subsistence Level): ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிப்படை உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான குறைந்தபட்சத் தொகை எது என்பதைத் தீர்ப்பாயங்கள் அளவிட வேண்டும். ஓய்வூதியம் அத்தொகையை விடக் குறைவாக இருந்தால், மீதித் தொகையைப் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பாகப் பெற அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

• மருத்துவச் செலவுகளைத் தனியாகக் கணக்கிடுதல்: முதியோரின் பெரும் பகுதி வருமானம் மருத்துவச் செலவுகளுக்கே போகிறது. எனவே, ஓய்வூதிய வருமானத்திலிருந்து மருத்துவப் பராமரிப்புச் செலவைக் கழித்துப் பார்த்தே அவர்களின் நிகர வருமானத்தைக் கணக்கிட வேண்டும்.

• சட்டத் திருத்தத்தின் தேவை: ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காகவே முழுமையாக மனுவைத் தள்ளுபடி செய்யாமல், பகுதியளவு பராமரிப்புத் தொகை (Partial Maintenance) வழங்கும் வகையில் சட்டப் பிரிவுகள் நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

முடிவுரை

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் என்பது முதியவர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக நலச் சட்டமாகும். "ஓய்வூதியம் பெறுகிறார்" என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் காட்டி, சொற்ப ஓய்வூதியம் பெறும் முதியவர்களைப் பராமரிப்புச் சட்டத்தின் நிழலிலிருந்து விலக்கி வைப்பது, அவர்களைப் பிள்ளைகளின் ஆதரவோ அல்லது சட்டத்தின் துணையோ இன்றி நடுத்தெருவில் நிறுத்துவதற்குச் சமமாகும்.

எனவே, நீதிமன்றங்களும் தீர்ப்பாய சபைகளும் வெறும் "ஓய்வூதியம் பெறுகிறாரா" என்று பார்க்காமல், "அந்த ஓய்வூதியம் அவர் கண்ணியமாக உயிர் வாழப் போதுமானதா" என்பதை முதன்மை அளவுகோலாக வைத்துத் தீர்ப்புகளை வழங்க முன்வர வேண்டும்!

பொன்.சேகர்

Wednesday, 2 September 2026

அச்சமே ஆன்மீகத்தின் ஊற்றுக் கண்!

தாயின் வயிற்றிலிருந்து இந்த உலகிற்கு வரும் எந்தக் குழந்தைக்கும் சமூகத்தைப் பற்றிய அச்சம் இருப்பதில்லை. அச்சம் என்பது பிறவிக் குணமன்று. ஆனால், குழந்தை வளர வளர அதன் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சத்தை விதைக்கிறது இச்சமூகம்.

"படிப்பு வரவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வசதி பெருகவில்லை என்றால், வாழ்க்கையில் தோற்றுவிட்டால், வயதான காலத்தில் யார் பார்ப்பார்கள்?" – இவ்வாறாக, வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சனைகள்  நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அச்சத்தை உருவாக்குகின்றன.


ஆன்மீகச் சந்தையும் 'அச்ச அறுவடையும்'

மனிதனுக்கு அச்சம் உருவானவுடன் அவனுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. இந்த உளவியல் தேவையைத்தான் ஆன்மீக நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்கின்றன.

மனிதனின் அச்சத்திற்குச் சமூக-அரசியல் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, ஆன்மீகம் 'பரிகாரத் தீர்வை' முன்வைக்கிறது:

• "நோய் தீர வேண்டுமா? பரிகாரம் செய்!"

• "வேலை வேண்டுமா? விரதம் இரு!"

• "துயரத்திற்கு காரணம் உன் கர்மா; துயரம் தீர‌வேண்டுமா?  வழிபாடு செய்!"

இங்கே ஆன்மீகத்தின் வாழ்வும்கூட மனிதனின் அச்சம் குறையாமல் இருப்பதில்தான் அடங்கியுள்ளது. அச்சம் நீடிக்க வேண்டும்; அதற்கான சமூகக் காரணம் தொடர வேண்டும். அதற்கான காரணம்கூட மக்களுக்குத் தெரியக்கூடாது. அப்போதுதான் ஆன்மீக 'சாமி'களுக்கான சந்தை நீடிக்கும்.

எது அச்சமற்ற சமூகம்?

அச்சத்திலிருந்து விடுபடுவதற்காக கடவுளை நம்பும் மனிதன் ஏன் கடைசிவரை அச்சத்தோடேயே வாழ்கிறான்? ஏனென்றால், அச்சம் போக்க அவன் மேற்கொள்ளும் பரிகாரங்கள் பூசைகள் எதுவும் அவனது அச்சத்தைப் போக்குவதில்லை.

அச்சமில்லாத வாழ்க்கை என்பது வெறும் கடவுள் மறுப்பு அல்ல; மாறாக:

1. நோய் வந்தால் தரமான இலவச மருத்துவம் கிடைக்கும் என்ற உறுதி.

2. குழந்தைகளுக்குத் தரமான பொதுக் கல்வி.

3. உழைப்புக்கேற்ற ஊதியமும், கண்ணியமான வேலைவாய்ப்பும்.

4. முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பு.

ஒரு தொழிலாளியின் அச்சத்தைப் போக்குவது 'பூஜை' அல்ல; உழைப்புக்கேற்ற ஊதியம்!

மருத்துவச் செலவால் நடுங்கும் குடும்பத்திற்குத் தேவை 'காணிக்கை' அல்ல; தரமான அரசு மருத்துவம்!

மாயையா? சமூகப் போராட்டமா?

அச்சத்தை மறைப்பதற்குக் கொடுக்கப்படும் மயக்க மருந்தே ஆன்மீகம். மாறாக, அச்சத்தை உருவாக்கும் சமூகக் காரணிகளை மாற்றுவது மட்டுமே உண்மையான விடுதலை!

தனியாக இருக்கும் ஒரு மனிதன் அச்சப்படலாம். ஆனால், அதே அச்சத்தை எதிர்கொள்ளும் நூறு பேர் கைகோர்த்து நிற்கும் போது, அந்த அச்சம் 'நம்பிக்கையாகவும்' 'போராட்டமாகவும்' மாறுகிறது. ஒற்றுமையும் வர்க்கப் போராட்டமும் மட்டுமே அச்சத்தை உடைக்கும் மாபெரும் சக்திகள்.

"எனக்கு ஏன் இந்தப் பிரச்சினை வந்தது?" என்ற கேள்வி தனிமனிதக் கேள்வி.

"என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது?" என்ற கேள்வி சமூகக் கேள்வி!

இந்தக் கேள்விதான் மனிதனைச் சமூக மனிதனாக மாற்றுகிறது; அச்சத்தைப் புரிதலாக மாற்றுகிறது.

அச்சத்தைப் போக்க சாமிகளைத் தேடுவதை விட்டுவிட்டு, அச்சத்தை உருவாக்கும் கட்டமைப்பை மாற்றுவதற்கான மனிதர்களைத் தேடுவோம்!

அச்சம் இருக்கும் வரை சாமிகளுக்குச் சந்தை இருக்கும். அச்சமற்ற சமூகத்தைப் படைத்துவிட்டால் சாமிகளின் சந்தையே மறைந்து போகும்!

ஊரான்

Friday, 28 August 2026

தையூர்: சாதி ஆணவம் மட்டுமல்ல, வர்க்க ஆணவமும் படுகொலை செய்யும்!

தையூர்: பிரவீன்குமார் ஆணவப் படுகொலை

காதல் விவகாரங்களில் நடக்கும் படுகொலைகள் என்பவை வழக்கமாக இரு வேறு சாதிகளுக்கு இடையே நடக்கும் "சாதி ஆணவப் படுகொலைகளாகவே" அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பகுதியில் நடந்த படுகொலை, நமது சமூக ஆய்வை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

பறையர் சாதியைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரவீன்குமார் என்கிற ஒரு ஏழை இளைஞன், அதே பறையர் சாதியைச் சேர்ந்த வசதியான வீட்டுப் பெண்ணைக் காதலித்ததற்காகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.

கொலையுண்ட இளைஞரின் தாயார், "வசதி இல்லை, பணம் இல்லை; யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று இப்படிச் செய்துவிட்டார்கள்" என்று கூறியிருப்பது, இந்தக் கொலையின் பின்னால் செயல்பட்ட பொருளாதார அதிகார உறவை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, தையூரில் நடந்தது சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான ஆணவப் படுகொலை அல்ல; ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் நிகழ்ந்த வர்க்க ஆணவப் படுகொலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இது நம்மை ஒரு முக்கியமான கேள்வியை நோக்கி நகர்த்துகிறது: ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படை சாதி மட்டும்தானா? அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வும் வர்க்க ஆதிக்கமும் அவற்றில் செயல்படுகின்றனவா?

நகர வாழ்வும் கிராமப்புறச் சாதி–வர்க்க உறவுகளும்

நகர்ப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், இடப்பெயர்வு போன்ற காரணிகளால் குடும்பம் மற்றும் சாதி சார்ந்த நேரடி கட்டுப்பாடுகள் சில நேரங்களில் தளர்கின்றன. பொருளாதாரச் சுயாதீனம் அதிகரிக்கும்போது, தனிநபரின் காதல் மற்றும் திருமணத் தேர்வுகளும் ஓரளவு சுதந்திரம் பெறுகின்றன. ஆனால் இதனால் நகரங்களில் சாதி ஆதிக்கம் மறைந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது.

கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் சிக்கலானது. பல பகுதிகளில் நிலஉடைமை உறவுகள், சாதி ஆதிக்கம், குடும்ப அதிகாரம், சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றின் எச்சங்கள் இன்னும் வலுவாகச் செயல்படுகின்றன.

அதே நேரத்தில், தையூர் போன்ற சம்பவங்கள் இன்னொரு உண்மையையும் நமக்குக் காட்டுகின்றன: ஒரே சாதிக்குள் இருந்தாலும் பொருளாதார அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அந்த ஏற்றத்தாழ்வே மனித உறவுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாக மாற முடியும்.

சாதியும் வர்க்கமும்: இந்தியச் சூழலில்

சாதியும் வர்க்கமும் ஒரே தட்டில் வைத்து சமன்படுத்த முடியாது; இரண்டும் தன்மையில் வேறுபட்டவை.

சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து நிரந்தர சமூகப் படிநிலையில் நிறுத்தும் அமைப்பு — இதை வெறும் பொருளாதார வேறுபாட்டோடு ஒப்பிட முடியாது. வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களுடனான மனிதர்களின் உறவு, சொத்து உடைமை, உழைப்பு மற்றும் பொருளாதார அதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது.

ஆனால் இந்தியச் சமூகத்தின் தனித்துவம் என்னவென்றால், இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் பிரிந்து இயங்குவதில்லை. வரலாற்றில் நிலம், கல்வி, தொழில், அதிகாரம் ஆகியவை குறிப்பிட்ட சாதிக் குழுக்களிடம் குவிந்திருந்தன — சாதி ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் உறவுகளாக வளர்ந்துள்ளன.

இதன் பொருள் ஒரே சாதியைச் சேர்ந்த அனைவரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல. ஒரே சாதிக்குள்ளேயும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவாகிறது — அந்த வேறுபாடு ஒரு கட்டத்தில் குடும்ப அதிகாரமாக மாறும்போது, அது காதல் மற்றும் திருமணத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகவும் மாறுகிறது. தையூர் சம்பவம் இந்த இரட்டை இயங்கியல் ஐப்பசியில் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகிறது.

சட்டமா? சமூக மாற்றமா?

ஆணவப் படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் அவசியம் — குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் அது இன்றியமையாதது. ஆனால் சட்டம் மட்டும் சமூகத்தின் அடிப்படை உறவுகளை மாற்றிவிட முடியாது.

சாதி ஆதிக்கத்தை உருவாக்கும் சமூகக் கட்டமைப்புகளையும், பொருளாதார ஆதிக்கத்தை உருவாக்கும் வர்க்க உறவுகளையும் மாற்றுவதற்கான போராட்டமும் அவசியம். சாதி முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை சாதி ஆணவப் படுகொலைகளும், வர்க்க வேறுபாடுகள் களையப்படும் வரை வர்க்க ஆணவப் படுகொலைகளும் தொடரும்.

சாதி இயக்கங்களின் மௌனமும் வர்க்கப் பார்வையும்

தையூர் படுகொலை குறித்து பேசும்போது, பட்டியல் சாதி இயக்கங்களும் அடையாள அரசியல் பேசுபவர்களும் ஏன் இந்த பொருளாதாரப் பரிமாணத்தைப் பேசுவதில்லை?

தையூரில் கொல்லப்பட்ட இளைஞனும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவன்தானே? அப்படியானால், ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வு எவ்வாறு அதிகாரமாக மாறுகிறது என்பதையும் நாம் பேச வேண்டாமா?

அடையாள அரசியலுக்கு அப்பாற்பட்ட மார்க்சிய–லெனினிய வர்க்கப் பார்வை இருந்தால்தான், தையூரில் நடந்தது சாதியைத் தாண்டி செயல்பட்ட வர்க்க ஆணவம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் இதன் பொருள் சாதி ஆணவப் படுகொலைகளைப் பின்னுக்குத் தள்ளுவது அல்ல. மாறாக, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும், வர்க்க ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அவை இரண்டும் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வெவ்வேறு தளங்கள்.

சாதியாலும் வர்க்கத்தாலும் ஒரே சமயத்தில் எதிரெதிர் திசைகளில் இழுக்கப்படும் தமிழக உழைக்கும் மக்களுக்கு, இரண்டையும் ஒருங்கே புரிந்துகொள்ளும் கண்ணோட்டம் இன்று முன்பைவிட அதிக அவசியமாகியுள்ளது.

தையூர் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான்: ஆதிக்கம் என்பது சாதியின் பெயரால் மட்டுமல்ல; பணத்தின் பெயராலும் செயல்படும். ஒரே சாதி என்ற அடையாளம் மட்டும் இருவரையும் சமமானவர்களாக்கிவிடாது. அந்த உண்மையை நாம் கண்டுகொள்ளும் வரை, தையூர் நமக்கு விடை கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஊரான்

Thursday, 27 August 2026

ஆற்றுப்படுகைகளும் நுகர்வுப் பயணங்களும்! நேபாளம் உணர்த்தும் பாடம் என்ன?

காற்றின் திசை, புயலின் வேகம், மழையின் அளவு, ஆற்றின் பாதை, பூகம்பத்தின் நொடிகள், சுனாமியின் ஆழம் அல்லது எரிமலையின் சீற்றம்... இவற்றை எந்த அறிவியல் தொழில்நுட்பத்தாலும் குறிப்பிட்ட தருணத்தில் துல்லியமாகக் கணித்துத் தடுத்துவிட முடியாது. ஆனால், மனிதன் எங்கே வாழ வேண்டும், எங்கே வாழக்கூடாது என்பதற்கான பல எச்சரிக்கைகளை இயற்கை தனது நில அமைப்புகளிலேயே பதிவு செய்து வைத்திருக்கிறது.


ஆற்றுப்படுகைகள்: இயற்கையின் வெள்ளப் பாதையை மதிப்போம்!

வேட்டையாடித் திரிந்த மனிதன் வேளாண்மையைக் கண்டறிந்த பிறகு ஆறுகளையும் நீர்நிலைகளையும் ஒட்டிய பகுதிகளில் நிலைத்து வாழத் தொடங்கினான். ஆற்றுப்படுகைகளும் அதை ஒட்டிய வளமான நிலங்களும் வேளாண்மைக்கு ஏற்றவையாக இருந்தன. அதேவேளையில், ஆற்றின் இயற்கையான வெள்ளப்பாதையை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைப்பது பேராபத்தை உருவாக்கக்கூடியது.

மேடான, பாதுகாப்பான நிலப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்து, தாழ்வான ஆற்றுப்பகுதிகளை வேளாண்மை மற்றும் நீரின் இயற்கையான ஓட்டத்திற்காக விட்டுவைத்திருந்த வாழ்க்கைமுறை, இயற்கையோடு இணைந்திருந்தது.

இன்றோ நிலத்தடி நீர், போக்குவரத்து வசதி, நகர விரிவாக்கம், நிலத்தின் விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆற்றுப்படுகைகள் மற்றும் வெள்ளப்பாதைகளில் வீடுகள், தங்கும் விடுதிகள், பள்ளி-கல்லூரிகள் என கட்டிடங்கள் பெருகுகின்றன.

ஆறு அகலமாகத் தெரிகிறது என்றால், அது வெறும் வெற்றிடமான நிலப்பரப்பு என்று பொருள் அல்ல. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஓடியிருக்கலாம் என்பதற்கான புவியியல் தடயமாகவும் அது இருக்கலாம். பல ஆண்டுகள் நீர்வரத்து குறைந்ததால் மரங்களும் செடிகளும் முளைத்திருக்கலாம். ஆனால், வெள்ளம் மீண்டும் வரும்போது அந்த இயற்கையான பாதையை ஆறு மீண்டும் எடுத்துக்கொள்ளும்.
இயற்கையின் பாதையை மறித்து நாம் கட்டிடங்களை எழுப்பினால், ஒருநாள் இயற்கையே அந்தக் கட்டிடங்களைத் தாண்டி தனது பாதையைத் தேடும்.

இதுதான் வெள்ளப் பேரிடர்கள் நமக்குக் கற்றுத்தரும் அடிப்படைப் பாடம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைவாசிகளுக்கு கூவமும் அடையாறும் இதை உணர்த்தியது. இன்று நேபாளம் உணர்த்தி இருக்கிறது.

நுகர்வுப் பண்பாடாக மாறிய சுற்றுலா!

இயற்கைப் பேரிடர்களில் அதிகம் சிக்கிக்கொண்டு தவிப்பவர்களில் சுற்றுலாப் பயணிகளும் முக்கியமானவர்கள். காரணம், இன்று 'சுற்றுலா' என்பது பல நேரங்களில் அறிவையும் அனுபவத்தையும் விரிவுபடுத்தும் பயணமாக இல்லாமல், ஒரு நுகர்வுப் பண்பாடாக (Consumer Culture) மாறிவிட்டது.

ஒரு இடத்திற்குச் செல்வது என்பது அங்கே சென்று புகைப்படம் எடுத்து, உணவு உண்டு, சில மணி நேரம் செலவிட்டு திரும்புவது மட்டுமல்ல.

உண்மையான பயணம் என்பது,
அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையைப் புரிந்துகொள்வது;

அங்குள்ள நில அமைப்பை அறிந்துகொள்வது;

அங்கு வாழும் மக்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வது;

அந்தப் பகுதியின் வரலாற்றை அறிந்துகொள்வது;

இயற்கையோடு அந்த மக்கள் கொண்டிருந்த உறவைப் புரிந்துகொள்வது
என்பதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிம்பேட்கா (Bhimbetka) குகைகள் மற்றும் பாறை ஓவியங்களை ஒரு வழக்கமான சுற்றுலாப் பயணியாகப் பார்த்துவிட்டு வருவதற்கும், கீழடி போன்ற தொல்லியல் தரவுகளின் பின்னணியில் ஆதிகால மனிதனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நோக்கில் பிம்பேட்காவை அணுகுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

ஒன்று காட்சியை நுகர்வது.
மற்றொன்று வரலாற்றைப் புரிந்துகொள்வது.

ஆனால் இன்றைய நுகர்வுப் பண்பாடு இயற்கையைக் காணச் செல்வதையும், ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதையும், பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பதையும் ஒரே சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது.

லாப நோக்கத்துடன் செயல்படும் சுற்றுலா நிறுவனங்களும், அந்தச் சந்தையின் விளம்பரங்களைப் பின்பற்றிச் செல்லும் நுகர்வுப் பயணிகளும் சந்திக்கும் இடத்தில், இயற்கையின் ஆபத்துகளைப் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.

இயற்கையை வெல்லப் போகிறோம் என்ற மனநிலையுடன் சுற்றுலா செல்ல முடியாது; இயற்கையைப் புரிந்துகொள்ளப் போகிறோம் என்ற மனநிலையுடன்தான் செல்ல வேண்டும்.

தொகுப்புரை

இயற்கை எப்போது, எப்படி தனது இயல்பான பாதைக்குத் திரும்பும் என்பதை மனிதனால் முழுமையாகக் கணிக்க முடியாது.

ஆனால் இயற்கை விட்டுச் சென்ற தடயங்களைப் படிக்க முடியும்.

ஆற்றின் பழைய பாதையைப் புரிந்துகொள்ள முடியும்.

வெள்ள அபாயப் பகுதிகளை அடையாளம் காண முடியும்.

நில அமைப்பை மதிக்க முடியும்.

சுற்றுலா செல்லும் இடத்தின் இயற்கையையும் வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும்.

எனவே,

ஆற்றின் பாதையை ஆக்கிரமிக்காதீர்கள்; இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாதீர்கள்!

சுற்றுலாவை வெறும் நுகர்வாகப் பார்க்காதீர்கள்; அது அறிவைப் பெறுவதற்கான பயணமாக இருக்கட்டும்!

இயற்கையின் வழிகாட்டுதலையும் அதன் பாதைகளையும் மதித்து வாழக் கற்றுக்கொள்ளாத வரை, பேரிடர்களின் பிடியிலிருந்து மனிதகுலம் முழுமையாகத் தப்பிக்க முடியாது.

இயற்கையை வெல்வதல்ல; இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்வதே உண்மையான நாகரிகம்!

ஊரான் 

Tuesday, 25 August 2026

'இயம்' என்றால் என்ன? பெரியார், அம்பேத்கர் கருத்துகள் கோட்பாடா? சிந்தனையா?

அரசியல் தத்துவத்திலும் சமூக இயக்கவியலிலும் 'இயம்' (Ism) மற்றும் 'சிந்தனை' (Thought) ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படும் முறை குறித்து தத்துவார்த்த ரீதியான தெளிவு பெறுவது மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.

குறிப்பாக, மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளையும், பெரியார்-அம்பேத்கரின் பங்களிப்புகளையும் ஒப்பீட்டு நோக்கில் அணுகும்போது, கோட்பாட்டிற்கும் சிந்தனைக்கும் இடையிலான எல்லைக்கோட்டைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது தத்துவக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.


1. 'இயல் / இயம்' (Ism) மற்றும் 'சிந்தனை' (Thought) - தத்துவார்த்த வேறுபாடு

அரசியல் தத்துவத்தில் 'இயம்' மற்றும் 'சிந்தனை' என்பவை வெவ்வேறு தளங்களைக் குறிப்பவை:

கோட்பாடு / இயம் (Ism): ஒரு குறிப்பிட்ட கொள்கை அகில உலக அளவிலும் (Universal), அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அறிவியல் விதிகளைக் (General Scientific Laws) கொண்டு, ஒரு முழுமையான தத்துவக் கட்டமைப்பாக உருவாக்கப்படும்போது அது 'இயல்' அல்லது 'இயம்' (Ism) எனப்படுகிறது.

o எடுத்துக்காட்டு: மார்க்சியம் (Marxism) – மனித சமூக வரலாற்றின் இயக்கம், முதலாளித்துவ உற்பத்தி முறை, உபரி மதிப்பு (Surplus Value), வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் கட்டுப்படாமல் உலகளாவிய விதியாக வரையறுத்தது.

சிந்தனை (Thought): அந்தப் பொதுவான கோட்பாட்டை (Theory), ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது சமூகத்தின் தனித்துவமான பொருளாதார, பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் முறை (Specific Application) 'சிந்தனை' எனப்படுகிறது.

o எடுத்துக்காட்டு: மாவோ சிந்தனை (Mao Zedong Thought) – மார்க்சிய-லெனினிய அகில உலகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சீனா என்ற அரை-நிலப்பிரபுத்துவ நாட்டின் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தி "நீண்ட கால மக்கள் போர்" மற்றும் "புதிய ஜனநாயகப் புரட்சி" என்ற நடைமுறைகளை வகுத்ததால் அது 'மாவோ சிந்தனை' எனப்பட்டது.

2. பெரியார், அம்பேத்கர்: 'இயமா'? அல்லது 'சிந்தனையா'?

தமிழ்ச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் 'பெரியாரியம்', 'அம்பேத்கரியம்' என்று அழைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால், தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால் இவர்களைக் 'கோட்பாட்டாளர்கள்' (Theoreticians) என்று சொல்வதை விட 'சமூகப் புரட்சியாளர்கள்' (Social Revolutionaries) என்றும், இவர்களது பங்களிப்பை 'பெரியார் சிந்தனைகள்', 'அம்பேத்கர் சிந்தனைகள்' என்று அழைப்பதே மிகச் சரியானது.

இதற்கான முக்கியக் காரணங்கள்:

1. களப் போராளிகள்: இவர்கள் இருவரும் மார்க்ஸ் அல்லது லெனின் போல உலகளாவிய புதிய பொருளாதார இயங்கியல் விதிகளையோ அல்லது ஒரு முழுமையான தத்துவ அமைப்பையோ (Comprehensive Worldview) உருவாக்க முனையவில்லை. மாறாக, இந்திய/தமிழ் சமூகத்தின் தனித்துவமான நஞ்சான சாதி அமைப்பு, தீண்டாமை, பிராமனிய ஆதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடிய களப் போராளிகள்.

2. நடைமுறைத் தீர்வுகள்: பெரியாரின் பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, சுயமரியாதை மற்றும் பெண் விடுதலைப் பிரச்சாரங்களும்; அம்பேத்கரின் சாதி ஒழிப்பு (Annihilation of Caste), சமூக நீதி, அரசியலமைப்பு வழியிலான உரிமைகளும் இந்தியச் சமூக நோய்களுக்கான நடைமுறைச் சிந்தனைகளும் தீர்வுகளுமே ஆகும்.

3. வளரும்  சிந்தனைகள்: பெரியாரே பல இடங்களில் "நான் இன்றைக்குச் சொல்வதை நாளைக்கு வேறு ஒரு தரவு கிடைத்தால் மாற்றிக் கொள்வேன்; என் வார்த்தைகளை வேதமாகப் பார்க்காதீர்கள், உங்கள் பகுத்தறிவுக்குச் சரியெனப் படுவதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றுதான் கூறியிருக்கிறார். இது ஒரு 'இயம்' அல்லது 'மூடிய கோட்பாட்டிற்கு' (Closed Dogma) உரிய பண்பல்ல; மாறாக, இது விடுதலைக்கான வளரும் சிந்தனைக்கே (Dynamic Thought) உரிய அடையாளம்.

தொகுப்பாக...

பேச்சுவழக்கில் 'பெரியாரியம்', 'அம்பேத்கரியம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும், தத்துவார்த்த ரீதியாக அவர்களை மார்க்ஸ்-லெனின் வரிசையில் கோட்பாட்டாளர்களாக ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.

• மார்க்சியம் - லெனினியம் என்பது உலகத்தையும் சமூகத்தையும் மாற்றப் பயன்படும் அடிப்படை அறிவியல் திசைகாட்டி (Universal Scientific Ism)!

• பெரியார் சிந்தனைகளும் அம்பேத்கர் சிந்தனைகளும் இந்தியச் சமூகத்தில் சாதியையும் பார்ப்பனியத்தையும் தகர்க்கப் பயன்படும் கூரிய செயல்பாட்டு ஆயுதங்கள் (Practical Social Thoughts)!

கோட்பாட்டையும் சிந்தனையையும் குழப்பிக் கொள்ளாமல், தத்துவார்த்தத் தெளிவோடு அணுகுவதே சரியான வர்க்கப் பார்வையாகும்.

தமிழ்மணி

Friday, 14 August 2026

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கக் கலந்துரையாடல் கூட்டம் – இராணிப்பேட்டை

மனோ தங்கராஜ் மற்றும் மகஇக தோழர்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆதி மனித இனம்தான் உலகம் முழுவதும் பரவி, பல்வேறு இனங்களாக, வேறுபட்ட மொழிகளைப் பேசுபவர்களாக, வெவ்வேறு உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தோற்றப் பொலிவு கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறது. மனிதர்கள் வாழும் சூழலும், அவர்கள் யாருடன் உறவாடுகிறார்கள் என்பதுமே அவர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. அதனால்தான் நமது சிந்தனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

இதன் விளைவாகவே மக்களிடையே இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று—குறிப்பாக இந்தியாவில் சாதிப்பற்று (சாதிவெறி)—கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்கு எதன் மீது பற்று இருக்கிறதோ, அதேபோன்ற பற்று கொண்டவர்களைத் தங்களவர்களாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதன் காரணமாகத் 'தங்கள் ஆட்களுக்கு'ச் சாதகமாகவும், மற்றவர்களுக்குப் பாதகமாகவும் நடந்து கொள்ளும் போக்கு உருவாகிறது.

இவ்வாறு தங்களைச் சார்ந்தவர்களுக்குச் சாதகம் செய்ய வேண்டுமானால், அதற்கு அதிகாரமே முதன்மை அடிப்படையாக அமைகிறது. அதிகாரத்தில் அமர்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதால்தான், சமூகத்தில் ஒருசிலர் மட்டுமே பாதுகாப்பாக வாழ முடிவதும், பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதும் நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ள பார்ப்பனர்களே நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு, தங்களுக்கானவர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கின்றனர்; சலுகைகளை வாரி வழங்குகின்றனர். மற்றவர்களுக்குச் சலுகைகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாதகமாவது செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தொடர்ந்து மற்ற சமூகங்களுக்குப் பாதகங்களையே செய்து வருகின்றனர்.

அதற்கு எடுப்பான உதாரணங்கள்: வடக்கே பாபர் மசூதி இடிப்பு முதல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை! இவை மட்டுமன்றி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அணுகுமுறையை அவர்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சனாதன நடவடிக்கைகள் சிலவற்றிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருப்பதால், அந்தச் சட்டத்தையே மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்குத் தோதாக நீதித்துறையிலும் தங்களுடைய ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், பார்ப்பன சனாதன சக்திகளை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஊடாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கின்ற விழிப்புணர்வையும் நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இந்த நோக்கத்தைக் கொண்டு, முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் உள்ளிட்ட சிலரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ‘அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கம்’ சார்பாகக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2026 அன்று இராணிப்பேட்டை, நாவல்பூரில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இவ்வமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களும் பங்கேற்று,  சென்னையில் இவ்வமைப்பு சார்பாக நடைபெறவிருக்கும் மாநாட்டின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.

அசேன்

வாஞ்சிநாதன்

மனோ தங்கராஜ்

பாதிரியார் ஞானசேகரன் மற்றும் மகஇக தோழர்கள்

அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடும் அதே வேளையில், அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் சனாதன சக்திகள், கீழடி போன்ற தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூடிமறைத்துத் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதையும், இந்த நாட்டின் நாகரிகமே வேத நாகரிகம்தான் என்று நிறுவ முயல்வதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (மகஇக) "தமிழ் மக்கள் இசை விழா" குறித்த பிரசுரம், வேலூர் மகஇக சார்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மகஇக தோழர்கள் இராவணன், அகிலன், வாணி மற்றும் தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சனாதன சக்திகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால், நாம் கருத்தால் மட்டுமல்ல; களத்திலும் கைகோர்த்துப் போராட வேண்டும்!

- ஊரான்