Tuesday 19 September 2023

உங்களுக்குக் கோபம் வராதா?

மார்க்சிய கோட்பாடு பேசக்கூடியவர்கள், பெரியார்-அம்பேத்கர் இருவரின் சிந்தனைகளைப் பேசக் கூடியவர்கள், தமிழ்த் தேசியம் பேசக் கூடியவர்கள், அனைவருமே இன்று சனாதனத்தை எதிர்த்துப் பேசுகின்றனர், முடிந்த அளவு போராடவும் செய்கின்றனர். 


ஆனால், இவர்கள் குட்டி குட்டியாய் பல நூறு அமைப்புகளாய் சிதருண்டுக் கிடக்கின்றனர். அற்பக் காரணங்களுக்காக இவர்கள் பிளவுபடுவது அன்றாட வாடிக்கையாக  மாறிவிட்டது. இத்தகையப் பிளவுகளின் போது, குட்டி குட்டி அமைப்புகளில் உள்ள கீழ்மட்டத் தொண்டர்களின் அரசியல் புரிதலின்மை காரணமாகவும், பழக்க தோசத்தாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் சாதியப் பாசத்தாலும், தங்களுக்கு ஏற்ற ஒரு அணியில் இவர்கள் ஐக்கியமாகி விடுகின்றனர். 

தங்களுடைய கோட்பாடும் நடைமுறையும்தான் ஆகச்சிறந்தது என்று இவர்கள் ஒவ்வொருவரும் கருதிக் கொள்கின்றனர். நாலு பேரைக் திரட்டி, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால், சமூக ஊடகங்களில் நாலு வரிக்கு ஒரு மீம்சை போட்டுவிட்டால், அதற்கு நாலு லைக்கும் வந்துவிட்டால், தமிழ்நாடே இவர்கள் பின்னால் இருப்பது போலக் கனவுலகில் மிதக்கின்றனர். 

ஆனால், பெரும்பாலான குட்டி குட்டி அமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் தமிழ்நாட்டுக் குடிகளில் சில நூறு பேருக்குக்கூட தெரியாது என்பதே எதார்த்தம். 

ஐம்பது அமைப்புகள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நூறுபேரைக்கூட திரட்ட முடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில் நாலு பேர்கூட இல்லாதவர்களுக்கெல்லாம் எதற்குத் தனி இயக்கம்? கட்சி? 

எனவே, ஏற்கனவே ஒன்றாய் இருந்து பிரிந்து போன குட்டி குட்டி இயக்கங்கள் தங்களை சுயபரிசீலனை செய்து, கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக முன்வைத்துப் பேசி, மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய அமைப்புகளில் உள்ள ஒரு சில பிழைப்புவாதிகள் இதற்கு முட்டுக் கட்டை போடக் கூடும். இவர்கள் இயக்கத் தலைமையாகக்கூட இருக்கலாம். அத்தகையோரை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றிணைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக,

மார்க்சியம் பேசக்கூடிய கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையவும்,

அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளைப் பேசக் கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், 

தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், வேண்டும். 

ஓராண்டு காலத்திற்குள் இது நடந்தால் நாட்டுக்கு நல்லது. அதற்கு அடுத்த கட்டமாக மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். 

இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இத்தகைய கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும், உடனடியாக உருவாக்கி வெளிப்படையான திறந்த விவாதங்களை கீழிருந்து முன்னெடுக்க வேண்டும்.

இது இன்றைய காலத்தின் கட்டாயம். மார்க்சை, பெரியாரை, அம்பேத்கரை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

கோபம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. மாறாக உங்களுடைய கோபம் சனாதனத்திற்கு எதிரானதாக, சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

இத்தகைய கோபக்காரர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது

தமிழ்மணி

Monday 18 September 2023

"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?

வினைசெய் 2.0, Scientist, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல்,  என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,  

வினைசெய், Journalist, என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம், 

வினைசெய் 2.0, Friends, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல், என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,

என ஒரே பெயரில் மூன்று முகநூல் கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக உள்ள வினை செய் ஊடகம் வலைப்பூவாகவும் பதிவாகி உள்ளது. 


*****
கார்ப்பரேட் காவிப்  பாசிசம் வீழ்த்துவது பற்றிய சரியான திசை வழி என்ன? என்ற‌ தலைப்பில் பல்லாவரம் முகவரியைக் கொண்ட வினைசெய் 2.0, Scientist, என்ற முகநூல் கணக்கில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அது குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

*****
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை வழி எனவும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் வழி எனவும் தொடங்குகிறது இக்கட்டுரை.

கடந்த கால செயல்பாடு

1990 களில், "நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற சரியான செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியதாகவும், 2015 வாக்கில் "கட்டமைப்பு நெருக்கடி" என்கிற செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, அதை ஒரு சாகச நடவடிக்கையாக மாற்ற துணிந்ததாகவும், பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை உணராமல் செயல்பட்டதாகவும், அப்போது, பாசிச எதிர்ப்பு அரசியலை திணிப்பதாக அமைப்பில் இருந்த சில குட்டி முதலாளித்துவப் பிரிவினர் விமர்சனம் வைத்ததாகவும் கூறுகிறது இக்கட்டுரை.

எதிர்காலச் செயல்பாடு

2019 வாக்கில் "கார்ப்பரேட் காவிப் பாசம்" நாட்டின் பிரதான அபாயமாக மாறிவிட்டதால், பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியாக இருக்கும், 

ஆளு வர்க்கப் பிரிவினரின் ஒரு சாராரையும், இதர முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மேலிருந்து "பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளுக்கு எதிராகத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்தியும், 

விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மற்றும்  அறிவுத் துறையினரை உள்ளடக்கிய, "பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டும் என்கிற இருவழிப் பாதைதான் சரியானது எனவும், 

இதன் மூலம் மட்டும்தான் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவி, அதைத் தொடர்ந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்கிறது கட்டுரை.

தோழர் பாலன் உள்ளிட்ட சிலர் பாசிசத்தை அதன் தொடக்கக் காலத்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதை மறுப்பதாகவும், தரவுகள் எதுவும் இன்றி குறை கூறுகிறது இக்கட்டுரை.

தோழர் மருதையன் மீதான விமர்சனம்

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு முகாம், அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றொரு முகாம் என இரு முகாம்கள் மட்டுமே இருப்பதால், பாஜக முகாமை வீழ்த்த, திமுக முகாமை ஆதரிக்க வேண்டும் என அமைப்பிலிருந்து வெளியேறி திமுக-வை ஆதரிக்கும் மகஇக முன்னாள் பொதுச் செயலாளர் மருதையன் செயல்பட்டு வருவதாகவும், 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மருதையன் திட்டவட்டமாக முன்வைப்பதாகவும், இது பாசிசத்தை வீழ்த்தாது, மாறாக மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் வீழ்த்துகிற, தோற்றத்தில் முற்போக்கு தன்மை கொண்ட குட்டி முதலாளித்துவ தர்க்கம் இது; மேலும், இது போலி ஜனநாயக அமைப்பை நம்ப வைப்பதாகும் என்பதால் இதை நிராகரிக்க வேண்டும் என்கிறது இக்கட்டுரை.

சில தனி நபர்களும், சில சிறு குழுக்களும் பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், இது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்பி, பாட்டாளி வர்க்கத்தைக் கையேறு நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறது இக்கட்டுரை.

யார் இந்த வினைசெய்?

ஒன்றுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக, அதே பெயரில் செயல்படும் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்யினரை இந்தக் கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதைப் பார்க்கும் போது,  வினைசெய் ஆசிரியர் குழு, தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தாத போதும், இவர்கள் வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பை ஆதரிப்பவர்கள் என யூகிக்க முடிகிறது.

வினைசெய் ஆசிரியர் குழு முன்வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம் சரியானதா தவறானதா என்கிற விவாதம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஜனநாயக சக்திகளையும், தனி நபர்களாக உள்ள அறிவுத் துறையினரையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்; கையாள வேண்டும் என்கிற போதாமை வினைசெய் ஆசிரியர் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தோழர் மருதையன் என்ன செய்கிறார்?

சொந்தக் காரணங்களுக்காகவும், அரசியல் கருத்து வேறுபாடு காரணங்களுக்காகவும் ஒருவர் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவரது ஜனநாயக உரிமையாகும். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகத் தோழர் மருதையன் மகஇக-விலிருந்து வெளியேறவில்லை; மாறாக அரசியல் தலைமைக் குழுவில் இருந்த ஒரு சிலர் அவரை பார்ப்பனர் என்று முத்திரை குத்தி, சாதி ரீதியாக தனிமைப்படுத்தியதனால் வெறுப்புற்று வெளியேறியவர். 

அமைப்பை விட்டு வெளியேறினாலும், அவர் நாட்டு நடப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை எதிர்த்துக் கருத்துத் தளத்தில் முன் எப்போதையும்விட மிகத் தீவிரமாக தனது ஆழமான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வருகிறார். களத்திலும் சில போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், அவர் முன்வைக்கிற கருத்துகளை இலட்சக்கணக்கானோர் ஆதரிப்பதோடு, அரசியல் துறையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இன்று அவர் அறியப்படுகிறார். 

அறிவுத்துறையினரைக் கையாள்வது எப்படி?

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. என்பார் மாவோ.

ஆனால், இதற்கு மாறான பார்வையைக் கொண்டுள்ளது வினைசெய் கட்டுரை.  தோழர் மருதையன் குறித்தப் பார்வையில் அது வெளிப்படுகிறது. அவர் திமுக-வை ஆதரிப்பதாகக் குறை கூறும் வினைசெய், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு சிலரை ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்கள் தங்கள் மேடைகளில் ஏற்றி உரையாற்ற வைக்கிறார்களே? ஏன் காங்கிரஸ்காரர்களைக்கூட மேடை ஏற்றுகிறார்களே? இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? 

"பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்"

குட்டி முதலாளிகள், புரட்சியில் அவர்களின் பங்கு குறித்தும் வினைசெய் குழுவிற்கு போதியப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தோழர் மருதையனை குட்டிமுதலாளி என முத்திரை குத்துகின்றனர். குட்டி முதலாளிகளின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை மாவோவைப் படித்தால்தானே புரிந்து கொள்ள முடியும். தோழர் மருதையனை விமர்சிப்பதில் வெற்றிவேல் செழியன் கோஷ்டியும், வினைசெய் ஆசிரியர் குழுவும் ஒரே அலைவரிசையில்தான் சிந்திக்கின்றனர்.

பிற கட்சிகள், சிறு குழுக்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் பொழுது, தரவுகளோடு முன்வைக்க வேண்டும். மேலும், எது சரியானது என்று முன்வைக்கும் பொழுது, அதற்கான ஆதாரங்களை, சான்றோர்களின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும்.

கட்டுரையின் எழுத்து நடையும், கருத்துக் கோர்வையும் செரிவானதாக இல்லாமல், அள்ளி இறைத்தாற்போலுள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக,

தொகுப்பாக, வினைசெய்யில் வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை என்பது தரவுகள் ஏதுமில்லாமல், யூகத்தின் அடிப்படையில், அகநிலைவாத கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றுதான் முடிவு செய்ய முடிகிறது .இது குறித்து வினைசெய் ஆசிரியர் குழு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அது ஒன்றுதான், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு பரந்து விரிந்த அணியைக் கட்டவும், மக்களை அணி திரட்டவும் உதவும். மாறாக, இதே பாணியில் எழுதிக் கொண்டிருந்தால் ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளிடமிருந்தும், அறிவித்துறையினரிடமிருந்தும் தனிமைப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது.

நட்பு சக்திகளிடம் வினைசெய், வெனையாக மாறக்கூடாது என்பதே என் போன்ற வாசகர்களின் அவா.

தோழமையுடன்

தமிழ்மணி

*****

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

நீங்கள் குட்டி முதலாளியா?

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

*****
வினை செய் கட்டுரை
*****
கார்ப்பரேட் காவிப் பாசிசம் வீழ்த்துவதுப் பற்றிய சரியானத் திசை வழி என்ன?

புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளுக்கு அறை கூவல்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் அரசியல் நடத்தை வழி!

“குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும், மக்களையும், பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைச் சரியாக அவதானித்து, செயல்தந்திர அரசியல் வழியைத் தீர்மானிப்பது, அதற்கேற்பப் போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும், முழக்கத்தையும் தீர்மானிப்பது” என்பதையே எமது செயல்தந்திர அரசியல் வழியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் 90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதைச் சரியாக அவதானித்து “நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தைச் செயல்தந்திர அரசியலாகக் கொண்டுச் சென்றோம்.

2015 ஆம் ஆண்டில் எமது தலைமைக் குழு அவதானித்தபடி நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு கட்டமைப்பு நெருக்கடி என முன்வைத்துச் செயல்பட துவங்கினோம். இந்த அவதானிப்பில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய அமைப்பு இல்லாதச் சூழலில், புரட்சிகர அமைப்பின் அகநிலைச் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், புறநிலை எதார்த்தத்தை மதிப்பீடு செய்வதிலும் மிகையான பார்வையில், அகநிலைவாதக் கண்ணோட்டத்தில், மக்கள்திரள் வழியிலான அரசியலை நிராகரித்து, புரட்சிகர அரசியலைச் சாகச நடவடிக்கையாக மாற்றத் துணிந்து செயல்பட்டோம். 

இவ்வாறு நாட்டின் மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கைத் தவறாக அவதானித்ததை நடைமுறை அனுபவத்தின் மூலமாக பாரிய அரசியல் தவறு என உணர்ந்து கொண்டோம். நாட்டை மறுகாலனியாக்குகின்ற சூழலில் அதற்குப் பொருத்தமாக பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசச் சக்திகளை ஏகாதிபத்தியங்களும் அவர்களின் தலைவனான அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஆதரிக்கத் துவங்கியது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலானப் பார்ப்பனப் பாசிஸ்டுகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதாவது பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தவறு என உணர்ந்தோம். 

கட்டமைப்பு நெருக்கடி எனும் அரசியல் நிகழ்ச்சிப் போக்கின்போதே, கார்ப்பரேட் காவிப் பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது என வரையறுத்து முன் வைத்தபோது எமது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த ஒரு தோழரும், அமைப்பு முறையின்றி அவருக்கு விசுவாசமாக இருந்த கீழைக்காற்று பதிப்பகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்ட துரை. சண்முகம் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர் சிலரும் கொல்லைப்புறமாகப் பாசிச எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர் என குதியாட்டம் போட்டனர்.

மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் செயல்தந்திர அரசியல் வழி!
90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்படத் துவங்கியபோது நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு என்பது மறுகாலனியாதிக்க அபாயமும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசச் சக்திகள் தலைதூக்குவதும்தான் என்பதை அனுமானித்து அதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். செயல்தந்திர அரசியல் வழியில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அரசியலைத் தயக்கமின்றி முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் கீழ் திரட்டி வந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடியானது உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு வடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே முன்னிறுத்தியது.  உலகில் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், மறு பங்கீடு செய்து கொள்வதற்கும் உரிய வழிமுறையாக மறுகாலனிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை காலனிய நாடுகளின் மீது திணித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது நாட்டின் பிரதான அபாயமாக மாறியது. இந்த நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி 2019 முதல் தீவிரமாக விவாதித்தாலும், 2021 ஆம் ஆண்டுதான் உரிய தரவுகளுடன் கார்ப்பரேட் காவிப் பாசிசமே நாட்டின் பிரதான அபாயம் எனவும், அது இந்தியாவின் வரலாற்றுத் தன்மைகளுக்கு பொருத்தமாக, கார்ப்பரேட் -காவிப் பாசிசம் எனும் இந்தியப் பாசிசமாக வெளிப்படுகிறது எனவும் வரையறைச் செய்து முன்வைத்தோம். 

அதனை வீழ்த்துவதற்கு புரட்சிகர ஜனநாயகச் சக்திகள், பாசிசத்தை எதிர்க்கின்ற அரசியல் இயக்கங்கள், ஆளும்வர்க்கத்தின் பாசிச எதிர்ப்புப் பிரிவு, தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியாகக் கொண்டு வந்து பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியமைப்பதும், அதற்கு இணையாகவே கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத் துறையினர் அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதும், அந்த முன்னணிகளின் மூலமாக தேர்தல் அரசியல் மற்றும் தேர்தலுக்கு வெளியில் போராடி, தற்காலிக இடைக்கால அரசாங்கமாக, ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் முன் வைக்கின்றோம்.  

சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு இடைக்கட்டமாக தோன்றியுள்ள ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதன் விளைவாக அரசியல், அமைப்பு, பண்பாட்டுத் துறைகளில் அமுல்படுத்தப்படும் பாசிசமயம், அரசு, அரசாங்கம் இரண்டுமே பாசிசமயமாவது போன்றவற்றை அவதானித்து அதனை வீழ்த்துவதற்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உடனடிக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். அப்படிப்பட்டக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை முறியடிக்கின்ற வகையில் செயல்தந்திரங்களை வகுத்து செயல்படும்போது, அவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் போர்தந்திர அரசியலுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அணுகுமுறையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைக்கின்றோம். இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். இவைதான் சர்வதேச ரீதியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடித்தக் கம்யூனிச இயக்கங்களின் அனுபவம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியேறியத் தோழர் பாலன் போன்ற சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் என முன்வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிநபர்கள், அமைப்பு பலம் இல்லாத வாய்ச்சவடால் பேர்வழிகள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என ஒன்றை நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்தை வீழ்த்துவதற்கு திட்ட வகைப்பட்ட செயல்பாடு அல்லது மாற்றுத் திட்டம் இல்லாத மானசீகவாதம் என்பதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு கொள்கையாக இருப்பதால் இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அடுத்து வெற்றிவேல் செழியன் என்பவருடன் எமது அமைப்பை விட்டு வெளியேறியச் சிலர் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் வரவில்லை, வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஐக்கிய முன்னணி கட்டுவோம். அதுவரை மக்கள் முன்னணியைக் கட்டி செயல்படுவோம் எனப் பாசிச எதிர்ப்பு பற்றி தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறிய வழிமுறையைத் திரித்துப் புரட்டி சந்தர்ப்பவாதமாகப் பேசி வருகின்றனர். பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை எமது அமைப்பு 90களில் இருந்து கடைப்பிடித்து வரும் செயல்தந்திர அரசியல் வழிமுறையில் செயல்பட தேவையில்லை, “செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து அதன் கீழ் மக்களை திரட்டுவது என்பதே அல்லேலூயா பஜனைப் போல பேசுவதுதான்” எனத் தனது அணிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, பொது வெளியில் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனப் பேசுகின்றனர். தேர்தலை எந்தக் காலத்திலும் பயன்படுத்தவே முடியாது எனும் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக செயல்படுகின்றனர். தேர்தல் பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தையோ அல்லது தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு போன்றவற்றைப் பற்றி தோழர் ஸ்டாலின், லெனின் போன்றவர்கள் முன்வைத்ததைப் பற்றியோ எதையும் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளத் திராணியின்றி உள்ளனர். எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு முடிவுகளைக் கூட இது நாள் வரை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளனர் என்பதும் உறுதியாகிறது. 

திடீரென்று இப்போது, “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என மொட்டையாக முழக்கத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகம் போலி ஜனநாயகமா அல்லது புதிய ஜனநாயகமா என்பதைக் கூட தெளிவாக முன் வவைக்கவில்லை. அவர்களின் மேடையில் பேசும் திருமுருகன் காந்தி, வேண்டாம் பிஜேபி என்றால் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்; அவர்கள் முட்டாள்கள் இல்லை என உளறிக் கொட்டினார். திருமுருகன் போன்றக் குட்டி முதலாளித்துவச் சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேணி, மார்க்சிய லெனினிய செயல்தந்திர அரசியல் வழியை நிராகரித்து செயல்படும் வெற்றித் தரப்பினர் முன்வைக்கின்ற இந்த வழிமுறையும், போகாத ஊருக்கு இல்லாத வழியை முன்வைக்கின்ற வழியாகும் என்பதால் அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

முத்துக்குமார் என்பவருடன் வெளியேறிச் சென்றுள்ள சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாம், ஆனால் முதலாளித்துவக் கட்சிகளான திமுக, காங்கிரஸ் பின்னால் நின்று கொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடாது என அகநிலைவாத அடிப்படையில் பேசித் திரிகின்றனர். இவர்களும் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறிக் கொண்டாலும் திட்டவட்டமாகப் புதிய ஜனநாயகப் புரட்சி என முன் வைப்பதில்லை. மாறாக ஜனநாயக குடியரசு என ஏதோ ஒன்றை இவர்கள் அகநிலைக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர். இந்த வரையறை எதிரிகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும், உத்திரவாதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளான இவர்கள், தனக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லை எனும் கண்ணோட்டத்தில் இருந்து தான்தோன்றித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதும் என இருப்பதால் இந்த வழிமுறையும் பாசிசத்தைத் துளி கூட அசைத்துப் பார்க்காது என்றே கருதுகிறோம்.
 
அதுமட்டுமின்றி பாசிசம் வரவில்லை, இந்தியா முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றெல்லாம் பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி வாய்வழி பிரச்சாரம் செய்வதன் மூலம், மார்க்சிய லெனினிய வழிமுறையைக் கைவிட்டு விலகி விட்டனர் என அவதானிக்கின்றோம்.

எமது அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அல்லது பிளவுபடுத்திக் கொண்டு வெளியேறிய வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு குழுக்களாக, தனிநபர்களாக இருந்துக் கொண்டு மேற்கண்டக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதன் மூலம் புரட்சிகர அரசியல் முன்னேறுவதற்கு தற்காலிகமாக சில தடைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றுள்ள தோழர்களையும் குழப்பியடித்து, விரக்தியிலும், எதுவும் நடக்காது எனும் சூனியவாதத்திலும் மூழ்கடிக்க எத்தனிக்கின்றனர். இதனால்தான் வெற்றிவேல் தரப்பின் செய்தித் தொடர்பாளர் மருது என்பவர் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என உளறிக் கொண்டுள்ளார்.

பாசிசம், பாசிச எதிர்ப்பு என்பதில் இரண்டே முகாம்கள்தான் உள்ளது. ஒன்று கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக முகாம்.. மற்றொன்று அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட முகாம். இந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ள தேர்தல் கட்சிகளில் ஒரு பிரிவைச் சார்ந்து, அதாவது திமுக, காங்கிரசைச் சார்ந்து நின்று ஆர் எஸ் எஸ் பாஜக பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என எமது அமைப்பிலிருந்து வெளியேறி, திமுகவை ஆதரித்து வரும் முன்னாள் மகஇக செயலர் மருதையன் செயல்பட்டு வருகிறார்.
 
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் எனத் திட்டவட்டமாக அவர் முன் வைக்கிறார். இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு முழுமையற்ற, மக்களை மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் ஆழ்த்துகின்ற எளிமையான, ஆனால் தோற்றத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட வழிமுறையாகும். இது பாசிச எதிர்ப்பு போர்வையில் உலவுகின்ற குட்டி முதலாளித்துவ தர்க்கம் ஆகும். 

அது மட்டுமல்ல, இது பாசிசத்தை வீழ்த்துவது எனும் முகாந்திரத்துடன் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயகத்தை நம்பி ஏமாறுவதாகும். பாசிசம் தோன்றுவதற்கு அடிப்படையான போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை நம்ப வைத்து மக்களை மீண்டும் பாசிச புதைகுழிக்குள் ஆழ்த்துவதற்கு செயல்படுகிறது என்பதால் இந்த வழிமுறையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.

நாட்டை சூழ்ந்திருக்கும் மிக முக்கியமான கொடூரமான அபாயமான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாங்களும் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு இத்தகையத் தவறானக் கண்ணோட்டத்தை, பாசிசத்தை சிறிதும் அசைத்துப் பார்க்காத வழிமுறைகளை முன் வைக்கின்ற தனி நபர்கள் மற்றும் சிறு சிறு குழுக்கள் போன்றவை பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்துத் தனக்குப் புரிந்த வகையில் எதிர்த்துப் போராடுவதற்கானத் தீர்வை முன்வைக்கின்றனர். இவை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழியைக் குழப்புவதிலும், பாட்டாளி வர்க்கத்தை கையறு நிலைக்கு தள்ளுவதிலும் உரிய பங்களிக்கின்றது என்பதால் இவற்றை நிராகரிக்க வேண்டும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்வைக்கின்றோம்.

நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவது எனும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மீது அன்றாடம் வன்முறைகளும், கொலை வெறியாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை பார்ப்பனக் கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்ற எத்தனிக்கும் சனாதனத் தர்மம் எனும் வர்ணாசிரமக் கொடுமை உயர்ந்தது எனத் துணிச்சலுடன் பேசப்படுகிறது. இன்று, நாட்டின் அரசியல், பொருளாதாரம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறுகாலனியாகி வருகிறது. 

இத்தகையக் கொடூரமானச் சூழ்நிலையில் நாட்டை ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்காலிகமான சில சமரசங்களுடன்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கின்றோம். இதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றோம். 

அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் அவர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி மூலம் நேரடியாக கீழிருந்து ஆர்எஸ்எஸ் பாஜகவை நேருக்கு நேர் நின்று வீழ்த்துவதற்குத் தயார்படுத்துவதும், அதற்கு இணையாக நாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கீழிருந்து   அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவதும் அவசியம் என்பதை முன் வைக்கின்றோம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இருவழிப் போராட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என முன்வைப்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றான காங்கிரசுடன் எந்த காலத்திலும் உறவு கூடாது. கடந்த காலத்தில் அப்படித்தானே இருந்தோம் என அனுபவவாதம் பேசுவதுடன், தேர்தல் அரசியல் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக் கூடாது எனப் பிதற்றுவதன் மூலம் சுயம்பிரகாசவாதிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அகநிலை சக்திகளின் பலம், பலவீனம் பற்றி புரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக்கொள்ள விரும்பாத இத்தகைய வறட்டுக் கோட்பாட்டுவாதமும், குறுங்குழுவாத கண்ணோட்டமும் பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தாது என்பது மட்டுமல்ல. ஒரு துளி அளவிற்குக் கூடப்  பாசிஸ்டுகளை பின்வாங்கச் செய்யாது என்பது மட்டும் நிச்சயமாகும். 

இத்தகைய வறட்டு கோட்பாட்டுவாதிகளை பொறுத்தவரை அவர்களின் நோக்கம், கட்சியை நடத்திக் கொண்டிருப்பது அல்லது தன்னை முற்போக்கு சக்திகளாகக் காட்டிக் கொள்வது என்பதுதானே ஒழிய வேறில்லை. ஆனால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் தற்காலிக இடைக்கால அரசாங்கத்தை, ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து எமது செயல்பாடுகளில் தங்களின் துணையுடன் முன்னேறுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
*****

Friday 1 September 2023

தோழர் தமிழரசன் நினைவு நாள்!

தோழர் தமிழரசனின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய சில தமிழ்த் தேசியர்கள், தோழர் தமிழரசன் அவர்கள் மேற்கொண்ட பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, திருச்சி நேரு சிலை குண்டு வெடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா? அத்தகைய நடவடிக்கைகள் இன்றைக்கும் பொருந்துமா? பொருந்தும் என்றால் அத்தகைய நடவடிக்கைகள் இனி இவர்கள் தொடருவார்களா? இல்லை தமிழரசனை துதிபாடிக் கொண்டே வெறும் வாய்ச் சவடாலோடு நிறுத்திக் கொள்வார்களா?

திருச்சி நேருசிலை குண்டு வெடிப்பில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, பல்வேறு மிரட்டல்கள், சித்திரவதைகளுக்கு உள்ளானது பற்றி இன்று தமிழரசனைப் போற்றி புகழுவோருக்கு ஏதேனும் தெரியுமா?
 
மக்கள் விடுதலைக்காகப் போராடித் தியாகிகளான தோழர்கள் குறித்த நேர்மறை அம்சங்களோடு அவர்களின் எதிர்மறை அம்சங்களையும் பரிசீலிப்பதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 
இத்தகைய பரிசீலனைகளினூடேதான் தோழர் தமிழரசன் அவர்களை நினைவுகூற வேண்டும்.

தமிழ்மணி