Saturday 2 January 2021

இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7

வைதீகவாதிகளுக்கு மதுரை மீனாட்சி, திருவரங்கம் அரங்கநாதன் போன்ற ஆலயங்கள் வழிபாட்டுக்குரியவையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற அவைதீக வாதிகளுக்கு பெல் போன்ற பொதுத் துறை ஆலைகளே போற்றுதலுக்குரியவை. எண்ணற்ற ஊழியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவையே வெளிச்சத்தில் வைத்திருக்கும் பெல் நிறுவனத்தில் சில புல்லுருவிகளும் இருக்கவே செய்கின்றனர். கோடிகள் புரளும் இடத்தில் கொஞ்சம் எடுத்தால் என்ன, என எண்ணுவோரைக் கண்டால் கடும் கோபம் கொள்பவன் நான்.

நிறுவனத்தின் இடைநிலை மேலாண்மையாகக் கருதப்படும் மேற்பார்வையாளர் பிரிவைச் சேர்ந்தவனாய் நான் இருந்த போதும் தொழிலாளர்களுக்கான, மகஇக பின்புலத்தைக் கொண்ட 'பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்' தொழிற்சங்கத்தில் (BPWU) என்னை பிணைத்துக் கொண்டு, அதன் நிர்வாகிகளில் ஒருவனாக ஆலை ஊழியர்களின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் வினையாற்றி வந்தேன்.

1990 ஆம் ஆண்டு உணவக நிர்வாகக்குழு தேர்தலில் போட்டியிட்டு கந்தசாமியோடு நானும் வெற்றி பெற்றேன். மளிகை-காய்கறிகள் வரும்போது அவற்றை 100% சோதித்துச் சான்றளிப்பதும், சந்தை விலையை விடக் கூடுதலாக விலை போட்டிருந்தால் விலையைக் குறைத்தும், எடை குறையுமாயின் அவற்றையும் சரி செய்து இரசீதுகளில் திருத்தம் செய்தோம். அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என அச்சுறுத்தப்பட்டோம். ஊடுருவிப் பார்த்தபோது, முறைகேடுகள் நடப்பதை உணர முடிந்தது.

சிந்தாமணியிலிருந்து வாங்கிய போதே இந்த நிலை. வரும் வழியில் ஒரு மூட்டை அரிசியை நிர்வாகி வீட்டில் இறக்கி விட்டால் சோதனை ஏதுமின்றி சரக்குகள் இறக்கப்படும் என்பது பழைய நடைமுறை. எமது பின்புலத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் இது குறித்து எண்ணிக் கூட பார்த்ததில்லை

கிராமப்புற ஏழை எளிய விவசாயிகளிடமிருந்து அவர்கள் பயனடையும் வகையில் காய்கறிகளை வாங்கிக் கொடுப்பதாகப் பொய்த்தகவல் கொடுத்து, காந்தி மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கிக் கொடுத்த ஒரு போலி ஒப்பந்ததாரரைக் கண்டறிந்து கையும் களவுமாக நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்து ஒப்பந்தத்தை இரத்து செய்தோம்.

உணவக நிர்வாகி என்ற முறையில் அசுத்தமானச் சாப்பாட்டுத் தட்டுகளை வெண்ணீரில் அலம்பக் குரல் கொடுத்ததற்காக எனக்கு ஓராண்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

உணவகக் கிடங்குக் காப்பாளர்கள் பலே கில்லாடிகள். அன்றையத் தேவைக்குக்  சமையலர்கள் சரக்குக் கேட்கும் போது, எடை எந்திரத்தை கண்ணுக்குத் தெரியாமல் வைத்துக்கொண்டு, 10 சதவீதம் எடை குறைத்துக் கொடுத்து சரக்கை மிச்சப் படுத்திக்கொள்வது காப்பாளர்கள் செய்யும் தந்திரம். ஒருபக்கம் சரக்கை வைத்துக் கொண்டே மறுபக்கம் சரக்கு தீர்ந்துவிட்டது எனக்கூறி ஒரு சில ஆலை வாயில் பாதுகாவலர்களின் துணையோடு சரக்கு வந்ததாக இரசீதுகளில் முத்திரை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் வித்தையைக் கற்றவர்கள் இவர்கள். ஊழலைக் கண்டு பிடிக்க ஒரு சில பாதுகாவலர்களின் உதவியை நாடினோம். நெரித்து அழுத்தினால் சீழ் வெளிவராமலா போய்விடும்? 

ஒரு முறை 50 கிலோ காபித் தூளுக்குப் பதிலாக கல் உப்பு வந்த போதும், சரக்கே இல்லாமல் பத்து மூட்டை சர்க்கரைக்கு இரசீதில் முத்திரை கேட்டபோதும் நேர்மையான பாதுகாவலர்களால் கையும் களவுமாக பிடிபட்டு, அதன்பிறகு உணவக ஊழல் நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிடங்குக் காப்பாளர்கள் அனைவரும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி பெல் நிறுவனத்தின் நாலரை கோடி உணவக ஊழல் அன்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஊழல் வெளிவரக் காரணமாக இருந்ததால் எல்லோர் கவனமும் எம் பக்கம் திரும்பியது; மகஇக மீதான நன் மதிப்பும் உயர்ந்தது. அன்று சேகர்-கந்தசாமியை அறியாதோர் யாருமில்லை.

உணவக நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த போதும், ஒருநாளும் உணவகத்தின் உள்ளறையில் உணவு உட்கொண்டதில்லை. ஊழியர்களோடு ஊழியராக வரிசையில் நின்றுதான் உட்கொள்வது வழக்கம்.

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஏடுகள், பிரசுரங்கள் விநியோகம் கையொட்டி ஓட்டுதல், நிதி வசூல் என ஆலைக்குள்ளும் இயக்கப் பணிகளை தீவிரமாய் மேற்கொண்டேன். இவை அனைத்தையுமே நிறுவன நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்பதனால் தடயமின்றி லாவகமாய்ச் செய்ய வேண்டும். கையொட்டியில் பசை தடவி காயவைத்து, குளியலறைக் குழாயில் நனைத்து ஓரிழுப்பில் ஒட்டிவிட்டு, நொடியில் அவ்விடத்தை விட்டகலும் வித்தை கற்றதனால் பலமுறை சிக்காமல் தப்பி உள்ளேன். 

ஆனால், பங்காரப்பா ஆட்சிக் காலத்தில், கர்நாடக காவிரி நீர் பிரச்சினையையொட்டி ஒரு முறை பயிற்சி வளாகம் 'கை' அருகில் நடைபெற்ற மகஇக ஆர்ப்பாட்டம் குறித்து உணவக வாயிற் கதவில் கையொட்டி ஒட்டியதற்காகக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை திறமையாய்க் கையாண்டு முறியடித்தேன். குற்றப்பத்திரிகை கொடுத்துவிட்டால் தண்டனையிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை என்பதால் நிரூபிக்கப்படாத குற்றத்திற்கும் கண்டித்துக் (censure) கடிதம் கொடுத்தனர்.

ஆலை வாயில் கூட்டங்களில் என் உரை கேட்க அணி திறளும் தொழிலாளர்கள், உள் சென்ற பிறகும் அது பற்றிய உரையாடல்கள் ஊழியர்களிடையே தொடர்ந்ததால் வாயிற் கூட்டங்களுக்கும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டது.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள் 

இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6

இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 





2 comments:

  1. அனுபவக் கட்டுரை -அருமை!

    தொழிலாளர்கள் நலனுக்காக செயல்பட்டது-பெருமை !!

    சுகாதார உணவுக்காக கேள்விக்கேட்டது
    அறுசுவை - புதுமை!!!

    வாழ்த்துக்கள் தோழர்!!

    ReplyDelete