ஆட்சிகள் மாறினாலும் மாறாத அவலங்கள்
"மாற்றம்... மாற்றம்..." என்ற முழக்கங்களோடு இங்கு ஆட்சிக் கட்டில்கள் மாறுகின்றன; சிம்மாசனங்களில் அமரும் முகங்கள் மாறுகின்றன. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வில் அரங்கேறும் அவலங்களின் காட்சிகள் மட்டும் ஏன் மாறுவதே இல்லை?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், பூந்தமல்லி உட்பட ஒரே ஒரு நாளில் 12 பாலியல் குற்றங்கள் பதிவாகின. அதில் திருவள்ளூரில் வெறும் மூன்று வயது நிரம்பாத சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். பூந்தமல்லியில் 7 வயது சிறுமியும், தாம்பரத்தில் 10 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். மாங்காடு, போரூர், கோயம்பேடு, அண்ணாசாலை ஆகிய இடங்களிலும் பெண்களும் மாற்றுத்திறனாளி பெண்ணும் பாதிக்கப்பட்டனர்.
இத்தகைய கொடூரம் நடந்த பிறகு, இந்நேரம் ஒட்டுமொத்த தமிழ்நாடே எரிமலையாய் வெடித்துக் கொந்தளித்திருக்க வேண்டாமா? நம் தெருக்களில் நீதிக்கான போராட்ட நெருப்பு சுடர்விட்டிருக்க வேண்டாமா? ஏன் இந்த மயான அமைதி?
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கா பஞ்சம்? வீதிக்கு வீதி பெயர்ப் பலகைகளும், கொடிக்கம்பங்களும் முளைத்து நிற்கின்றனவே! உலகத் தமிழர்களைக் காப்பதாக முழங்கும் இயக்கங்கள் எங்கே போயின?
மேலவளவு படுகொலை, வாச்சாத்தி வன்முறை, ஹூண்டாய் தொழிலாளர் மீதான அடக்குமுறை என கடந்த காலங்களில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களம் கண்ட இடதுசாரிகள்கூட, இன்று ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?
ஆளும் திமுக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளோ, தங்களின் கடமை முடிந்தது என்ற தொனியில் வெறும் 'கண்டன அறிக்கைகளோடு' தங்களைச் சுருக்கிக் கொண்டது ஏன்?
சாதியப் பின்புலம் கொண்ட கட்சிகளும், பகுத்தறிவை மட்டுமே கையில் ஏந்தியிருக்கும் இயக்கங்களும் இந்த அநீதியைக் கண்டும் காணாமல் கடந்து போவது ஏன்?
ஓட்டுப் பொறுக்கி அரசியலும் சிதறிக் கிடக்கும் மாற்றுச் சக்திகளும்
காரணம் மிகத் தெளிவானது. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஏதோ ஒரு சுயநல அரசியல் தேவைக்காகவும், ஓட்டுப் பொறுக்கும் உத்திகளுக்காகவும் மட்டுமே களம் காண்பவை. மக்களின் கண்ணீரைத் தங்களின் லாபமாக மாற்றத் துடிக்கும் இந்த வியாபாரச் சூழலில், எஞ்சியிருப்பது மாற்று அரசியலை முன்வைக்கும் மார்க்சிய-லெனினிய புரட்சிகர இயக்கங்கள் மட்டும்தான்.
குறிப்பாக, அநீதிக்கு எதிராக உடனடியாகக் களம் காணும் ஆற்றல் கொண்ட மார்க்சிய-லெனினிய புரட்சிகர இயக்கங்கள், இன்று அற்பமான கருத்து வேறுபாடுகளுக்காகவும், தத்துவார்த்தப் பிடிவாதங்களுக்காகவும் தங்களுக்குள் பிளவுபட்டு, சிதறிக் கிடக்கின்றன.
புரட்சிகர சக்திகளின் இந்த ஒற்றுமையின்மையின் விளைவாகத்தான், இன்று அநீதிக்கு எதிராகக் களம் காண வேண்டிய அவர்களின் குரல் வறண்டு, மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அற்றுப் போன ஜனநாயகப் பண்பு: சகதியில் மூழ்கும் சமூகம்
ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டு போன்ற உரிமைகளுக்காகத் தன்னிச்சையாகத் திரண்ட தமிழக மக்கள், இன்று பிஞ்சுக் குழந்தைகளின் மரணத்தைக் கண்டும் மௌனமாய் இருப்பது எதைக் காட்டுகிறது? மக்களிடம் 'ஜனநாயகப் பண்பு' முற்றிலும் அற்றுப் போய்விட்டது என்பதையே இது பறைசாற்றுகிறது.
ஜனநாயகப் பண்பு என்பது வெறும் வாக்குச் சாவடியில் ஓட்டுப் போடுவது அல்ல. அது சாதி மத இன மாச்சரியங்களைக் கடந்து அடுத்தவர்களின் துயரத்தைத் தனது துயரமாக உணர வைக்கும் ஒரு உயரிய பண்பு.
அடுத்தவருக்கு ஒரு துன்பம் என்றால், எந்தப் பயனும் எதிர்பாராமல் ஓடோடி வந்து உதவும் உயரிய குணமே உண்மையான ஜனநாயகப் பண்பு.
இத்தகைய பண்புகளை மக்கள் போராட்டக் களங்களில் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். கெடுவாய்ப்பாக, அந்த ஜனநாயகப் பண்புகளை இன்று நமது சமூகம் இழந்து நிற்கிறது. இந்தப் பண்பை இழந்த எந்தவொரு சமூகமும் சமூக அவலம் எனும் சாக்கடைச் சகதியில்தான் மூழ்கிக் கிடக்குமே ஒழிய, ஒருபோதும் சுயமரியாதையோடு மீண்டெழ முடியாது.
காலத்தின் கட்டாயமும் மாற்றுப் பாதையும்
இந்த அவலச் சூழலை, இந்த மழுங்கடிக்கப்பட்ட சமூகப் பொதுப்புத்தியை மாற்றி அமைக்கும் ஆற்றல், சமூக நீதியையும் மக்கள் விடுதலையையும் நோக்கிய தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு.
எனவே, இந்த இக்கட்டான சூழலிலாவது தமிழ்நாட்டு மக்களைக் காக்கவும், இழந்த ஜனநாயகப் பண்புகளை மீட்டெடுக்கவும் — மாற்றுச் சக்திகள் குறிப்பாக மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, நிபந்தனையற்று ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இன்று திரையுலக நுகர்வுப் போதையை மூலதனமாக்கி அதிகாரத்துக்கு வந்துள்ளவர்களின் போலி பிம்பங்கள் பலவும் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு வருகின்றன. ஒரு நடிகனுக்கு வாக்களித்தது ஏமாந்து விட்டோமோ என்று மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில், தமிழ்நாட்டிற்கான மாற்று அரசியலின் பாதை அகலத் திறந்தே கிடக்கிறது.
சுயநல அரசியலின் வேடங்களைக் கலைப்போம்! சிதறிக் கிடக்கும் புரட்சிகர சக்திகளை ஒன்றிணைப்போம்! இழந்த ஜனநாயகப் பண்புகளைப் போராட்டக் களங்களின் வழியே மீட்டெடுத்து, சமத்துவத் தமிழ்நாட்டை நோக்கிப் பயணப்படுவோம்!
ஊரான் @ பொன்.சேகர்
.jpeg)
No comments:
Post a Comment