Thursday 27 January 2022

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி  விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.

சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.

விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.

எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ரகுவாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.கண்டேன் சீதையைஎன்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.

யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.

மக்கள் கலை இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அமுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.

என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!




 துயரத்துடன்

தமிழ்மணி

 

 

 

Wednesday 26 January 2022

குடியரசு: கொண்டாட்ட நாளை போராட்ட நாளாக மாற்றிய மோடி!

மரபுவழி மன்னராட்சிப் பிடியிலிருந்தோ அல்லது அன்னிய நாட்டுக் காலனி ஆட்சிப் பிடியிலிருந்தோ ஒரு நாடு விடுதலை பெற்ற பிறகு, அது தனக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியையே குடியாட்சி என்கிறோம்.

ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு மக்களுக்கான அரசாகவாச் செயல்பட்டு வருகிறது? பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை பார்ப்பன -பனியாக் கும்பலின் நலனுக்கான ஒரு அரசாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது குடியரசு நாள் கொண்டாட்டத்திலும் வெளிப்படுகிறது.

விடுதலைப் போரின் வீர மரபுகளை நினைவு கூறும் வகையில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ரோரைக் காட்சிப் படுத்திய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளில் வேல் பாய்ச்சி இருக்கிறது மோடி அரசு.

நாராயணகுரு அவர்களை காட்சிப்படுத்திய கேரள அரசின் ஊர்தியையும், சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் காட்சிப்படுத்திய மேற்கு வங்க அரசின் ஊர்தியையும் மோடி அரசு தடை செய்து, அம்மாநில மக்களின் உணர்வுகளை இழிவு படுத்தியிருக்கிறது.

இவை, சனாதனக் கும்பல் மேற்கொள்ளும் பண்பாட்டு வடிவிலான  தேசிய இன ஒடுக்கு முறையின் ஓர் அங்கமாகும்.

பொதுவாகவே விடுதலை நாளும், குடியரசு நாளும் ஒரு சடங்காகவே இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மோடியின் மேற்கண்ட நடவடிக்கையால், இந்த ஆண்டு குடியரசு நாள் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு போராட்ட நாளாகவே மாறியிருக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்திய மோடிக்கு எதிராக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வேலூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங்  அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  தோழர் சேட்டு, துணைத் தலைவர் பாபு, தலைவர் செல்வம், ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இறுதியாக சங்க செயற்குழு உறுப்பினர் தோழர் வேல் முருகன் நன்றி உரை கூறினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.









தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

Tuesday 25 January 2022

வேலூரில் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள்!

ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய நான்கு அம்சங்களும் ஒரு தேசிய இனத்தை வரையறுப்பதற்கான அடிப்படையான அம்சங்களாகும். இதில் எது ஒன்று குறைந்தாலும் அதை ஒரு தேசிய இனமாகக் கருத முடியாது.

நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவம் வளர்ந்து வந்த 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் தேசிய இன உருவாக்கங்கள் நடந்தேறின. அதே காலகட்டத்தில் நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்படாத, முதலாளித்துவ வளர்ச்சி பலவீனமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசாக உருவாகியது.

பொருளாதாரப் பரிவர்த்தனைத் தேவைகளுக்காக பெரும்பான்மையோரது மொழியைக் கற்றுக் கொள்ளும்படி ஆளும் வர்க்க முதலாளிகள் எப்போதும் பிற தேசிய இன மக்களை நிர்பந்தம் செய்வர். அதன்படி, 1939 ஆம் ஆண்டிலேயே இந்தியைத் திணிக்க அன்றைய ஆளும் வர்க்கம் முயற்சித்தது. அதன் பிறகு 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசுப்பணி மொழி சட்டம் மூலம் இந்தியைத் திணிக்க காங்கிரசு அரசு முயன்ற போது, 1965-ல் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மக்கள் தீவிரமாகப் போராடினர். நடராசன், தாளமுத்து உள்ளிட்ட எண்ணற்றோர் அப்போராட்டத்தில் களப் பலியாகினர். இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டம் என்பது தமிழ் மொழியை-தமிழ்த் தேசிய இனத்தைக் காப்பதற்கானதொரு போராட்டமாகும்.

தேசிய இன ஒடுக்குமுறை எந்த ஒரு வடிவத்தில் நிகழ்ந்தாலும் அதற்கெதிரானப் போராட்டங்கள் அன்றாடம், இடைவிடாது, நுட்பமான வழிகளில் நடத்தப்பட வேண்டும். 2014-ல் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது சந்தை விரிவாக்கம் உள்ளிட்டப் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், ஆர்எஸ்எஸ் காவிக் கும்பல் தங்களது பார்ப்பன சனாதனத் தேவைக்காவும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பிற தேசிய இனங்கள் மீது ஒடுக்கு முறையை ஏவி வரும் இன்றைய சூழலில், அதை முறியடிக்க வேண்டுமானால் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக நமது முன்னோர்கள் நடத்தியக் களப் போராட்டங்களை நினைவு கூர்வது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

அதன்படி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒருங்கிணைத்த மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள் 25.01.2022 அன்று வேலூரில் பெரியார் சிலை அருகில் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி, தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தோழர் குட்டி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் அழகொளி ஆகியோர் உரையாற்றினர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் நன்றி கூறினார். உரைகள், முழக்கங்கள் என சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.






தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்