Monday 3 July 2023

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம்!

சாவிலும் சாதிக்குச் சவக்குழி வெட்டிய 
தோழர் ரங்கநாதனுக்கு வீரவணக்கம் !

ஆம்! இன்று அந்தக் கம்யூனிச புரட்சியாளனின் 32 - வது நினைவு நாள்.

32 ஆண்டுகளுக்கு முன்பு 03.07.1991
அன்று அவரது இறுதி உரையில் மகஇக மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பேசினார்,

"ஒருவன் கம்யூனிஸ்டாக மாறிக் கொள்ளலாம். ஆனால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மடிவதுதான் வாழ்வில் யாரும் அடைய முடியாதது. அதைத் தோழர் ரங்கநாதன் சாதித்துக் காட்டியுள்ளார்"
என்று அவரது கல்லறையில் முழங்கினார்

இன்று அந்த மாபெரும் மக்கள் தலைவனின் நினைவு நாள். நக்சல்பாரி இயக்கங்கள் வலது இடது சந்தர்ப்பவாதங்களில் சறுக்கி விழுந்த பொழுது, மக்கள் திரள் பாதையை உயர்த்திப் பிடித்து, மக்கள் திரள் அமைப்புகளின் போராட்டங்களை வடிவமைத்து, புரட்சிகர இயக்கங்களுக்கு படை திரட்டிய போராளியின் நினைவு நாள்.

சுற்று வட்டார கிராமங்களில் சாதிய மோதல்கள் ஆனாலும், கிராமங்களுக்கு இடையிலான மோதல்கள் ஆனாலும் பணக்கார கூட்டத்தார் பண்ணையார்களின் நலன்களுக்காக, நிலப்பரப்புகளின் நலன்களுக்காக உழைக்கும் மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக் கூடாது
என்று தன்னந் தனியாய் தன் தோழர்களை உடன் இணைத்துக் கொண்டு தடுப்பு வேலியாய் நின்று  தடுத்திட்ட மாவீரனின் நினைவு நாள்.

இறுதியாக ஒன்று...
அன்றைய நக்சல்பாரி இயக்கங்கள் இடது தீவிரவாத ஆயுத சாகசவாத நடவடிக்கையில் இறங்கிய போது, அதன் எதிர்வினையாய் காக்கிச் சட்டைப் போலீசின் அடக்கு  முறைகளை நித்தம் நித்தம் எதிர்கொண்டு உயிரைத் துச்சமென நினைத்து, உழைக்கும் மக்களுக்காக தன் இறுதி மூச்சு வரை இருப்பேன் என்று போலீசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும், வர்க்க எதிரிகளுக்கும் அச்சமூட்டிய  அந்தக் காரப்பட்டு கிராமத்தின் வசந்தத்தின் இடி முழக்கம் தோழர் ரங்கநாதன்.

தான் விரைவில் இறந்து விடுவேன் என்று தெரிந்து, தனது உடலைத் தாழ்த்தப்பட்டோர் இடுகாட்டில்தான்  புதைக்க வேண்டும்  என்று உயில் எழுதி வைத்து சாதி வெறிக்கும் சனாதன வெறிக்கும் சவுக்கடி கொடுத்த
உத்தமரின் நினைவு நாள் இன்று.

நச்சல்வாரி புரட்சியாளர் காரப்பட்டு தோழர் ரங்கநாதன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 03.07.2023 அன்று விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டாரம், காரப்பட்டு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக தோழர் ரங்கநாதன் நினைவு அலுவலகத்தில் திருவெண்ணைநல்லூர் வட்டாரப் பொருளாளர் தோழர் ராவணன் அவர்கள் தலைமையில் கொடியேற்றினார்

மக்களுடன் எளிமையாகப் பேசிப் பழகி அரசியல் படுத்துகின்ற தோழர் ரங்கநாதன் அவர்களின் அழகிய நுட்பத்தைப் பற்றியும் அவருடைய அணுகு முறை பற்றியும் பேசினார்.

பிறகு, திருவெண்ணைநல்லூர் விவசாயிகள் விடுதலை முன்னணியினுடைய வட்டார இணைச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, இன்று காவிப் பாசிசம் எப்படி மக்களை அடக்கி ஒடுக்குகிறது என்பது குறித்து சிறிது நேரம் பேசினார்.

அதன் பிறகு, அனைவரும் பேரணியாக செங்கொடி உயர தோழர்களின் வீரவணக்கம் முழக்கத்தோடு கல்லறை நோக்கிச் சென்றனர்.

கல்லறை அருகில் இருக்கின்ற கொடிக் கம்பத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டாரச் செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை ஏற்று கொடியேற்றி வைத்தார்.

இறுதியில், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அம்பேத்கர், 
'சாதி தீண்டாமையை ஒழிப்பதிலும் மற்றும் கூலி ஏழை நடுத்தர விவசாயிகளுடைய உரிமைகளுக்காகவும் எப்படிப் போராடினார், இறுதி வரை சாதி ஒழிப்பில் சமரசம் இல்லாமல் எப்படிப் போராடினார் என்பதை நினைவு கூர்ந்ததோடு, இன்றைக்கு விவசாயம் அழிந்து வரும் சூழலில் விவசாயிகளுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படுவதும், குறிப்பாக மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தில் என்னென்ன பாதிப்பு என்பதைப் பற்றியும், தற்போது திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 எந்தெந்த வகையில் விவசாயிகளை, பொதுமக்களை பாதிக்கின்றது என்பதைப் பற்றியும், மேல்பாதியில் எப்படி அரசே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது என்பதைப் பற்றியும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் வழிபாட்டை மறுக்கும் தீட்சிதர் கும்பலை அம்பலப்படுத்தியும், இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்த இருக்கின்ற தஞ்சை மாநாட்டுக்கு அறைகூவல் விடுத்தும் உரையாற்றினார்.

இறுதியாக தோழர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி தோழர் ரங்கநாதனுக்கும், உழைக்கும் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த நக்சல்பாரி கம்யூனிஸ்ட் தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

தகவல்: 
விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்டம்