Wednesday 14 April 2021

இழி குணம்: கருத்து முரண்களும் பண்பாட்டுச் சீர்கேடுகளும்!....13

எளிமையானவர்கள், வெளிப்படையானவர்கள், கொண்ட கொள்கைக்காக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க துணிச்சல்காரர்கள், நேர்மையானவர்கள், விலை போகாதவர்கள், தீயொழுக்கம் இல்லாதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் பயணிப்பவர்கள், அதனால்தான் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாற்று இயக்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இவ்வியக்கத் தோழர்களை மதிக்கின்றனர்.

இத்தகைய இயக்கத்தைத் தோற்றுவிப்பவர்களோ அல்லது புதிதாக வருபவர்களோ யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அடித்தட்டு உழைப்பாளிகள் முதல் பணக்கார விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவோர், அரசு ஊழியர் உள்ளிட்ட சற்றே வசதிபடைத்த நடுத்தரப் பிரிவினர் என பலரும் பொதுவுடைமையின்பால் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வருகின்றனர். சாதி-மதப் பிணக்குகள் கொண்ட, சுயநலம், பொய், பித்தலாட்டம், பண மோசடி, ஊழல், போதை, பாலியல் அத்துமீறல், பெண்ணடிமை, ஆணாதிக்கக் குணங்கள் மலிந்த இச்சமூகத்திலிருந்துதான் இவர்களும் வருகின்றனர்.

பல்வேறு தரப்பட்ட வர்க்கப்பிரினர் இருப்பதால் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும், பலதரப்பட்ட குணமுடையவர்கள் இருப்பதால் பண்பாட்டுச் சீர்கேடுகளும் எந்த ஒரு இயக்கத்திலும் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதவைதான்.. கொள்கை அளவில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித்தீர்த்து, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் போதும், பண்பாட்டுச் சீர்கேடுகளைக் கண்டறிந்து அவற்றை நெறிப்படுத்தும் போதும் மட்டும்தான் ஒரு இயக்கம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். மாறாக ஆளாளுக்கு ஒரு கருத்தைப் பேசுவதும், இயக்கத்தில் செயல்படுவோரின் தீயொழுக்கப் பண்பாட்டுச் சீர்கேடுகளை ஒருவருக்கொருவர் கண்டும் காணாமல் இருப்பதும் ஒரு இயக்கத்தின் பின்னடைவுக்கே வழிவகுக்கும்.

பணமோசடி செய்ததற்காகவும், பாலியல் குற்றச்சாட்டிற்காகவும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்கூட கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றி அமைப்பிலிருந்து அவ்வப்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இத்தகைய நடவடிக்கைகள் அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

புதிய ஜனநாயகப் புரட்சி என்ற தொலைநோக்குத் திட்டத்தை கொள்கையாகக் கொண்டாலும் அதை அடைவதற்கு அவ்வப்பொழுது எழும் அரசியல் சூழ்நிலைமைகளைக் கணிப்பதில் கருத்து வேறுபாடுகள் எழலாம். தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற சரியான கருத்தை முன்வைப்பவர்களும், செயல்படுபவர்களுமே தலைவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். தவறான கருத்தை முன்வைப்பவர்களும் செயல்படாதவர்களும் எவ்வளவுதான் அறிவுசார்ந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும் போது நிராகரிக்கப்பட்ட ஒருவர், தான் வீழ்த்தப்பட்டதாகக் கருதி தனக்கு வேண்டிய ஒரு சிலரைத் தூண்டிவிட்டு தலைமையில் உள்ளவர்களுக்கு எதிராகச் சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவார். 2019 தொடக்கத்தில் அப்படி ஈடுபட்ட ஒருவரைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசியல் தலைமையாக இருந்தவர் முயன்றபோதுதான் அதனால் அதிருப்தியுற்ற இருவர் தலைமைக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.

இருவரது விலகலில் நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்ட பலரும் தலைமைக்கு எதிராகக் கேள்விக் கணைகளைத் தொடுத்த போது தார்மீகப் பொறுப்பேற்று தலைமையில் இருந்தவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமையைத் தேர்வு செய்வதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் ‘பெல் சிட்டி’ ஊழல் நக்கீரனில் வெளிவந்து, மொத்த அமைப்பையும் நிலைகுலைய வைத்தது.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்


No comments:

Post a Comment