முப்பத்தேழு வயதில் வழக்கறிஞருக்கு விண்ணப்பித்தேன். 'இதுவரை என்ன செய்தீர்?' என பார் கவுன்சில் வினவ, 'பெல்லிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன்' என்றபோது 'எடுத்து வா அதற்குண்டான ஆவணங்களை, என்றுரைத்து, 'அதில் இழி குணம் (moral turpitude) ஏதும் இருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக முடியாது' என்ற விதி உண்டு என்றார்கள்.
குற்ற அறிக்கை, விசாரணை முடிவுகள் அனைத்தையும் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். எனது வேலை நீக்கத்தில் இழி குணம் ஏதும் இல்லை என்றாலும் தாமதமானதால், பார் கவுன்சில் உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் வழிகாட்ட, சேர்மென் வேலூர் மார்க்கபந்து அவர்களுக்குத் தந்தி கொடுத்தேன். எல்லாம் இனிதே முடிந்தது. 1995 டிசம்பரில் இளம் வழக்கறிஞராய் நீதிமன்றப் படிக்கட்டுகளில்.
THE ADVOCATES ACT, 1961
வஞ்சிக்கப்படுவோருக்கு வஞ்சமின்றி உண்மையாய் வழக்காட வேண்டும் என்பதால், வழக்காடுதலை 'உன்னதத்' தொழில் என்பார்கள். பாலியல் பாவிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளும் இதற்கு இலாயக்கற்றவர்கள் என்பதால்தான் வழக்காடிகள் இழிகுணம் அற்றோராய் இருக்க வேண்டும் என விதி வைத்தார்கள் போலும். பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு இதுவும் சாலப் பொருந்தும்தானே?
'சேகருக்கென்ன, வக்கீலாயிட்டான்?' என உறவுகளும், 'தமிழ்மணிக்கென்ன வழக்கறிஞராகிவிட்டார்?' என சகத் தோழர்களும் எண்ணியிருக்கக்கூடும்.
'சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே? உபாத்தியாயர் தொழிலுக்குப் போய்விடலாமா?' என பாரிஸ்டர் காந்தியே திண்டாடிய போது, சேகருக்கு மட்டும் திருச்சியில் தேன் மழையா பொழிந்துவிடும்? இரவு 8 மணிக்கு மேல் யார் பார்க்கப் போகிறார்கள் என்று, ஐந்து ரூபாயைக் கூட கேட்கக் கூச்சப்பட்டு டைமண்ட் பஜாரிலிருந்து உறையூர் நெசவாளர் காலனி வரை சில சமயம் நடந்து சென்றதுண்டு.
அப்பாய் மளிகையிலும், சிந்தாமணியிலும் மாதச் சாமான் வாங்கியது போய், கையிலே காசு கிட்டும்போது மட்டும் கடைக்குச் செல்வதாயிற்று. குக்கரைத் திறக்கும் போது பிள்ளைகள் வெளியில் ஓடி விடுவர். முதிர்ந்த தோழர்களே ரேசன் அரிசிச் சோற்றின் வீச்சம் கண்டு மூக்கை பொத்திக் கொள்ளும் போது பாவம் பிஞ்சுகள் என்ன செய்யும்? போஜகுமார் குறிப்பறிந்து கொடுத்த காசில் வாடகைக்குப் போக எஞ்சியதில் காலம் ஓடியது. நீதிமன்ற வளாகத்தில் அவர் வாங்கிக் கொடுக்கும் முருக்கும் சீடையுமே என் பிள்ளைகளின் நொறுக்குத் தீனி.
முசிறி தொட்டியத்தில் ஒருமுறை முத்தரையர்களுக்கும் தலித்துகளுக்கும் ஏற்பட்ட முரண் மோதலில் முடிய, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஆதரவற்று நின்றபோது திருச்சியில் முதன் முறையாய் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டு மோதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அது முதல், 1994 ல் மதிசோழர், போஜகுமார், பொன்.சேகர் உள்ளிட்ட சிலரால் உருவாக்கப்பட்டதுதான் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு. (HRPC).
விஷக்கடி வைத்தியர் இராமதாஸ் அவர்கள், தஞ்சை பள்ளி அக்ரகாரத்தில் ஞாயிறுதோறும் கொடுக்கும் இலவச பஸ்பம், எனைப் பிடித்தாட்டிய சொரியாசிஸை கட்டுக்குள் வைக்கும். ஆனாலும் மெல்ல மெல்ல மூட்டுக்கள் முடங்கத் தொடங்கின. திருச்சியில் அலோபதி-ஹோமியோபதியைக் கலந்து போட்ட போதும் மூட்டு வலியில் முன்னேற்றம் இல்லை. குமாரின் ஆலோசனையால் வேலூரில் ஜக்ரியாவைச் சந்தித்தேன். அவர் கொடுத்த ஒரு 'டோஸ்' என்னை முழுமையாய் வாலாஜாவில் முடக்கிப் போட்டது. என்னைப் பராமரிக்க என் இணையர் என்னிடம் சேர, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள இணையரின் அண்ணனும் அண்ணியும் திருச்சியில்.
நினைவு முழுமையாய் தப்பிவிட வில்லை என்றாலும் கிட்டத்தட்ட கோமா நிலை. இனி தேறுவேனா என்ற ஐயத்தோடு எண்பதைக் கடந்த எனது பாட்டி உட்பட உறவுகள் அனைவரும் பார்த்துச் சென்றனர். நண்பர்கள் கூட நாடி வந்தனர். தோழர்களும் ஓடிவந்தனர். ஹேமா சுமந்த மாதுளையும், தலையணை அடியில் மணியின் ஐநூறும் இன்றும் என் நினைவில். நாட்கள் ஓடின. மெல்ல மெல்ல நினைவு திரும்பிப் புதிதாய்ப் பிறந்தேன்.
புறத்தே இருந்த சொரியாசிசை பஸ்பம் உள்ளமுக்கி மூட்டுக்குள் தள்ளியிருக்குமோ என்கிற ஐயமும், சரியான ஹோமியோபதியை எடுத்துக்கொண்டால் பந்து எம்பி எம்பி இறங்குவதைப் போல நோயும் ஏறி ஏறி இறங்கிப் பின்னர் மறையும் என்பதையும் பின்னாளில் ஹோமியோபதியை ஆழமாகக் கற்றபோது அறிந்ததுண்டு.
ஓரளவுக்குத் தேறிய பிறகு திருச்சி திரும்பினேன். முடங்கிய மூட்டுகள் முழுதாய் மீள சில நாட்கள் ஆயிற்று. அதுவரை கையெழுத்துக்கே நடுக்கம் கண்டன எனது விரல்கள்.
வேலை நீக்கம் செய்யப்பட்ட இரு தோழர்கள் நிர்வாக இயக்குநரைச் சந்திக்கச் சென்றபோது 26.11.1992 அன்று ஏற்பட்ட தள்ளுமுள்ளையொட்டி, நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நாங்கள் தொடர்ந்த எதிர் வழக்கு, நேர்மையான ஒரு நீதிபதியால் எமக்குச் சாதகமாய் அமைய, நாங்கள் மீண்டும் பணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது பெல் நிர்வாகம். பேச்சு வார்த்தையும் தொடங்கியது.
மூட்டு வலியில் முடங்கிப் போன சேகரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தால் அவரால் என்ன செய்ய முடியும் என்று எதிர் தரப்பில் எள்ளி நகையாடியோரும் உண்டு.
போஜகுமார் கொடுத்த ஊக்கத்தால் உமா-உஷாவின் உதவியோடு, நான் முடங்கிப் போகவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம், மூத்த வழக்கறிஞர் நடராஜ் வல்லத்தரசு அவர்களின் அணிந்துரையோடு, வழக்கறிஞரான இரண்டு ஆண்டுகளில் எனது முதல் ஆக்கமாய், 1998 ஜனவரியில் "குற்ற இயல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி?" நூல் வெளியானது. ஏப்ரல் 15, 1998 இந்தியா டுடே ஏட்டிலும் இந்நூல் இடம் பிடித்தது.
தொடரும்தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழிகுணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
No comments:
Post a Comment