முதலில் வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள், பிறகு பேச்சுவார்த்தை என இழுத்தடித்தது நிர்வாகம். இறுதியில் இரு தரப்பும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, புதிய ஊழியர் எண்ணோடு புதிதாய்ப் பணிக்குச் சேர்ந்தோம்.
மூவர் ஹைதராபாத்திலும், ஒருவர் இராணிப்பேட்டையிலும் சேர்ந்துவிட, பெங்களூர் EDN எனை எடுக்கத் தயங்க, என்றோ நான் கேட்ட இராணிப்பேட்டை என்னைத் தேடி வந்தது. 'தமக்கெதுவும் தகவல் இல்லை' என அங்கும் மறுக்க, பிறகு தாய்ச் சொல்லை தட்டாமல், மூன்று நாள் கழித்து 26.03.1998 முன் தேதியிட்டு என்னை ஏற்றுக் கொண்டது இராணிப்பேட்டை.
திருச்சியில் என்னை இடைநீக்கம் செய்த பாபுதான் இங்கு தலைமை அதிகாரி. மூட்டு வலியிலிருந்து மீண்டவன் எனத் தெரிந்தும், பணி நிமித்தமாய் அடிக்கடி வெளியூர் செல்லும் நிர்மாணச் சேவைத் துறையில் இணைக்கப்பட்டேன். சில ஆண்டுகள் தமிழகத்தின் நரிமணம், நரிப்பையூர், ஒடிசாவின் அங்குல், டால்ச்சர் என மன நிறைவாய் பணி செய்தும், சில சமயம் முடியாத வேலைகளுக்கு, அவை பின்னால் முடிக்கப்படும் என்றாலும்கூட, முன்கூட்டியே முடிந்ததாய் கணக்கெழுத என் மனம் இடம் கொடாததால் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் உள்ள அளவீட்டியல் (metrology) பிரிவில் என்னைப் பிணைத்துக் கொண்டேன்.
மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளாய் பதவி உயர்வு பெறுவதற்கான நேர்காணலைச் சந்தித்தேன். தகுதி உடையோரில் நான் ஒருவன்தான் பட்டதாரி எனத் தெரிந்தும், திருச்சியை நினைவில் கொண்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. எத்தனை முறைதான் ஒரு மாட்டைத் தோலுரிக்க முடியும்? தவிர்க்க முடியா நபராய் நான் நிலை பெற்றதால், மேற்கொண்டு என்னை முடக்க முடியவில்லை.
அளவீட்டியல் பிரிவின் தலைமையாய், தரக் கட்டுப்பாட்டுத் துறை-விசிறிகள் பிரிவின் தலைமையாப் பொறுப்பேற்று, பழனிச்சாமி-ஏகாம்பரத்தின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, முர்மு-சுகன்யாவின் கடின உழைப்போடு
பதினைந்து ஆண்டுகளாய் அளவீட்டியல் கூடத்திற்கு இல்லாதிருந்த NABL அங்கீகாரத்தை 2017-ல் பெற்றுத் தந்து 24.06.2018-ல் பணி நிறைவு பெற்றேன். பணி நிறைவு விழாவின் போது கூட, எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அவை 'புரோட்டாக்காலாய்' இருந்தும் கூட, மாலையையும் பொன்னாடையையும் புறக்கணித்தேன்.
பழைய ஊதியம் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதம் புதிய ஆணையில் குறிப்பிட்டிருந்த போதும், முறையீடுகளோடு அது முடிந்து போனது. அரை ஊதியத்தில் பாதி பணிக்காலம் முடிந்து, ஓய்வூதியமும் பாதிதான் என்பதால் முறையீடுகளும் தொடர்கின்றன. கிட்ட வில்லை என்பதற்காக விலங்குகள் கூட சோர்ந்து விடுவதில்லை.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
No comments:
Post a Comment