Saturday 10 April 2021

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, ஆதரவாளர்களே,

செவ்வணக்கம்! 

கடந்த ஏப்ரல் 02 அன்று வினவு தளத்திலும், சிலரது முகநூல் பக்கங்களிலும் “வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க. உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள்” என்ற தலைப்பிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பெயரை உபயோகித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு பகுதிக்கிளைகள், மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு என்ற அமைப்புக் கட்டமைப்புடன் இயங்குகிறது.  கொரோனா ஊரடங்கிலும் ம.க.இ.க. கொள்கைக்கும், அமைப்பு விதிகளுக்கும் உட்பட்டு மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு முறையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ம.க.இ.க. கொள்கை விதிகளுக்கு எதிராக, 03 பேர் கொண்ட சிறுபான்மையினர், முன்னணியாளர் கூட்டம் கூட்டி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறி பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், "அமைப்பு விதிகளின் படி மாநாடு நடத்தாதது, கிளைகளை இயக்காததால் அவைகள் கலைந்து போனது, சதி செயலில் ஈடுபட்டது, போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற கொள்கைக்கு எதிராக செயல்பட்டது, பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பம் போல் பிரச்சாரம் செய்வது" என தங்களது மனம் போன போக்கில் குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் அடுக்கியுள்ளனர்.

எமது அமைப்பில் செயல்பட்டு வந்த மருதையன், நாதன் அமைப்பின் அரசியல் தலைமை மீது அதிகாரத்துவம் உள்ளிட்ட சில விமர்சனங்களைக் கூறி தங்களது விலகலை பொது வெளியில் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து அணிகளும் அரசியல் தலைமையின் அதிகாரத்துவத்திற்கு எதிராக கடுமையாகப் போராடினார்கள். இதனால், அரசியல் தலைமை மக்கள் திரள் அமைப்புக்களில் தங்களுக்கு சாதகமான சிறுபான்மையினரைக் கொண்டு பெரும்பான்மையாக உள்ள முன்னணியாளர்களை நீக்குவது, அமைப்புகளை பிளவுபடுத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் தற்போது ம.க.இ.க. பெயரில் இராமலிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறோம். 24 பேர் கொண்ட பொதுக்குழுவில் தங்களுக்கு சாதகமான 3 பேரை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா ஆகியோரை நீக்கியதாகவும் கூறுவது ஜனநாயக முறைக்கு எதிரான செயலாகும். எனவே, பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ம.க.இ.க. ஒருங்கிணைப்புக்குழு என்கிற பெயரில் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினரால் வெளியிடப்பட்ட பொய்யான, அவதூறு தகவல்களை கொண்ட அறிக்கையினை தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

எனினும், அவதூறுகள், பொய்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதால் அவர்களது அறிக்கை எவ்விதத்தில் பொய்யானது என விளக்கி, அதற்கான எமது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்பது எமது கடமை என்ற வகையில் இச்செய்தியை வெளியிடுகிறோம்.

மாநில மாநாடு நடத்தப்படவில்லை என்கின்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி: 

 ம.க.இ.க.-வின் கொள்கை விதிப்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு கூட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2014-க்குப் பிறகு 2016-ல் மாநாடு நடத்த திட்டமிட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைமை பல்வேறு காரணங்கள் கூறி மாநாட்டை தள்ளி வைத்தது. இதனால், எமது மாநில செயற்குழு சார்பாக அரசியல் தலைமை மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்ட பிறகே, 2019 இறுதிக்குள் மாநாடு நடத்துவது என 2018-ல் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் முடிவாக்கப்பட்டது.

இம்முடிவின் படி மாநாட்டு தயாரிப்பு வேலைகள் மற்றும் மாநாட்டு அறிக்கைகளை கதிரவன், சத்யா, கோவன் ஆகிய தோழர்கள் பொறுப்பேற்று தயாரித்தனர். இந்நிலையில், 2019-ல் அமைப்பின் மீது சீர்குலைவுவாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த அவதூறு செய்திகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மீண்டும் மாநாடு நடத்துவது தள்ளிப் போனது. இது தொடர்பாகவும் ம.க.இ.க.-வின் மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்பிறகு தான் 2020-ல் மருதையன் மற்றும் நாதன் விலகல், அதனையொட்டி அமைப்பின் அரசியல் தலைமையில் ஏற்பட்ட பிளவு மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகியவை காரணமாக மாநாடு நடத்துவது தள்ளிச் சென்றது. இவை அனைத்தும், கதிரவன் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பொதுக்குழுவில் பேசி விவாதிக்கப்பட்டுத் தான் முடிவாக்கப்பட்டது. மாநாட்டுத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த கதிரவன் மற்றும் இது தொடர்பாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்ட இராமலிங்கம் இருவரும் தற்போது மேற்கண்ட எல்லா உண்மைகளையும் மறைத்து மாநில செயற்குழு,  மாநாட்டை நடத்தவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில் விவாதித்தே முடிவு செய்யப்பட்டது. எனவே, அணிகளின் ஜனநாயக உரிமை பறிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

மாநில செயற்குழு தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனில், பொதுக்குழுவைக் கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு பொதுக்குழு கூட்டப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் எவருக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம், தோழர்கள் காளியப்பன், கோவன், சத்தியா ஆகியோர் மீது இவர்கள் வைக்கும் பொய்க் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயகத்தைக் கூட கடைபிடிக்கவில்லை. இவர்கள் தான் அணிகளின் ஜனநாயகம் பறிக்கப்பட்டிருப்பதாகப் பேசுகிறார்கள். மேலும், பொதுக்குழு கூட்டாமல் 3 பேர் சேர்ந்து பேசி முடிவெடுத்து முன்னணியாளர்கள் கூட்டம் என அறிவித்துக் கொண்டனர். இது போன்ற. முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னணியாளர் கூட்டம் கூட்டி முடிவெடுப்பது ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளுக்கு எதிரானதாகும். எனவே, தோழர்கள் மீதான குற்றச்சாட்டு அவதூறு என்பதாலும், அமைப்பு விதிகளுக்கு எதிராக 3 பேர் கொண்ட சிறுபான்மையினரால் கூட்டப்பட்ட கூட்டம் என்பதாலும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அக்கூட்டமும் செல்லாததாகும்.

மருதையன், நாதனுடன் இணைந்து கொண்டு சதி செயல்களில் ஈடுபட்டதாக கூறும் அவதூறு பற்றி:

தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ம.க.இ.க.-வில் எந்தவித சதி செயல்களிலும் ஈடுபடவில்லை. இவர்கள் கூறும் சதி என்னவென்பதும்  விளக்கப்படவில்லை. மேலும், சதி தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு சார்பாக எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.  இப்படி எந்தவிதத்திலும் சதி பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்காமல், போகிற போக்கில் சதி செய்வதாக அவதூறு செய்வது கண்டனத்துக்குரியதாகும். மேலும், கதிரவன் மற்றும் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினர் தான் தற்போது, ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளை வெளியிட்டு அமைப்புக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பது அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது.

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! என்ற ம.க.இ.க.-வின் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் – சமூக நிலைமை, அப்போது இருந்த அரசு வடிவம் – அதன் தன்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அதனடிப்படையிலேயே கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு என்ற அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நாங்கள் இந்த தமிழக தேர்தல் பிரத்யேகமானது. குறிப்பாக பாசிசத்திற்கு  தேர்தல்வழியே சட்ட அங்கீகாரம் கோருவது என்பதால் "பாசிச பா.ஜ.கவையும் அதன் அடிமை அ.தி.முகவையும் தோற்கடிப்பீர்!" என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் பாதை மூலம் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நாங்கள் எப்போதும், எங்கும் கூறவில்லை. மாறாக, பாசிசத்திற்கு எதிராக  தேர்தலையும் ஒரு  கருவியாக பயன்படுத்துகிறோம் என்பதே எமது நிலையாகும். அதேபோல தோழர்கள் மருதையனும், நாதனும் தி.மு.க.விற்கு வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதற்கும்  எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. பார்ப்பன பாசிசம் ஏறிதாக்கி வரும் சூழலில், பாராளுமன்ற - சட்டமன்ற வடிவங்களை தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு உகந்ததாகவும் மக்களின் நம்பிக்கையாக உள்ள தேர்தல் ஜனநாயகத்தை ஒரு வழிமுறையாகவும் பாசிஸ்டுகள் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஒரு புதிய நிகழ்ச்சிப் போக்காக மாறியுள்ளது. இவற்றை அவதானித்து குறிப்பான சூழலில் தேர்தலில் பிற கட்சிகளை போல அல்லாமல் பாசிசத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாஜக மற்றும் அதன் அடிமை அதிமுக கூட்டணியை புறக்கணிப்பீர்! தோற்கடிப்பீர்! என்று சொல்வதைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலை கணக்கில் கொள்ளாத இவர்களின் அரசியல் தற்குறித்தனத்தையும், தேர்தல் என்பதுதான் ஜனநாயகம் என்று கருதும் பெரும்பான்மை மக்களின் உளவியல் பற்றி அறியாத ’அறைவாசிகள்’ என்பதும் மக்களுடன் கிஞ்சித்தும் தொடர்பற்ற கம்யூனிச மேட்டுக்குடிகள் என்பதும் இவர்களின் அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.

இவர்களின் அரசியல் அறியாமையை பாசிச எதிர்ப்பு போராளி தோழர், டிமிட்ரோவ் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

“ஆனால், பாசிஸ்டுகள் தலைதூக்கத் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதே பழைய நிலையை நீடித்து அனுசரிக்க முடியுமா? உதாரணமாக 1932-ல் ஜெர்மனியில் பாசிஸ்டுகள் லட்சக்கணக்கான தங்கள் அதிர்ச்சிப் படைகளை தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக உருவாக்கி ஆயுதபாணிகளாக்கி கொண்டிருந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் பழைய நிலையை கைக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. பல நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் தவறு, குறிப்பாக, ஜெர்மனியின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்க அவர்கள் தவறிவிட்டார்கள். பழைய கோஷங்களையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருந்த அதே உபாயங்களையே கையாண்டார்கள். குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டம் உடனடி பிரச்சினையாக இருந்த போது 1918 – 20 ஆம் ஆண்டுகளில் போல ஜெர்மனியின் எதிர்ப்புரட்சி சக்திகள் அனைத்தும் வெய்மர் குடியரசின் பதாகையின் கீழ் திரண்டிருந்த காலத்தில் கையாண்ட அதே உபாயங்களையே இப்போதும் நீடித்துக் கையாண்டார்கள். (ஐக்கிய முன்னணி தந்திரம் – தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ்)

மேற்கண்ட மேற்கோள் இவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

பிழைப்புவாத ஓட்டுபொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பின் அரசியல் தலைமை குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலைக் கணித்து எடுத்த முடிவின் படியே பாசிச பாஜக-வையும், அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என முழக்கம் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டோம். இம்முடிவு தொடர்பாக தோழமை அமைப்புக்கள் மற்றும் எமது அமைப்பு செயல்படும் பகுதிகளில் உள்ள முன்னணியாளர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு அங்கு விளக்கி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்பது தவறாகும். மேற்கண்ட கூட்டத்திற்கு இராமலிங்கம் மற்றும் கதிரவன் செயல்படும் பகுதிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள்  இருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், புரட்சிர பாடகர் கோவன் மீதும், தோழர் காளியப்பன் மீதும் தேசதுரோக வழக்கு போடப்பட்டவுடன் ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் போய்ப்பார்த்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடியினை தீர்க்க ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் பார்த்து ஆதரவு திரட்டுவது, அவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு கட்டி இயங்குவது போன்ற வேலைகளைச் செய்யச் சொல்லி அப்போதைய அரசியல் தலைமை வழிகாட்டியது. தற்போது பிளவு ஏற்பட்ட பிறகு பிரிந்து சென்ற அதே அரசியல் தலைமை, மக்கள் மீதான பாசிச தாக்குதலை சட்டபூர்வமாக்க பாசிச பாஜக ஆட்சியதிகாரத்திற்கு வருவதை தடுக்க பாசிச பாஜகவையும் அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என்று பிரச்சாரம் செய்தால் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி அரசியல் என "இது வேற வாயி" என்பதுபோல அவதூறு செய்கின்றனர். இது தான் அவர்களின் அரசியல் நேர்மை.

கிளைகளை முறையாக கூட்டி இயக்காததால், கலைந்து போனது என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு செயல்படும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் கிளைகள் முறையாக கூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எந்த கிளைகளும் கலையவில்லை. குறிப்பாக, கொரோனா ஊரடங்கிலும் மாநில செயற்குழு, பொதுக்குழு மற்றும் கிளைகளின் கூட்டங்கள் கூட்டப்பட்டன. தோழர் கதிரவன் 15 நாட்கள் முன்பு வரை, எங்களோடு தொடர்பில் இருந்ததுடன் கடைசியாக நடைபெற்ற மாநில செயற்குழுவிலும் கலந்து கொண்டார். அக்கூட்டத்திலேயே தனக்கு அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ம.க.இ.க.-வில் இருக்கவே விரும்புகிறேன் என செயற்குழுவில் தெரிவித்தார். உண்மை நிலை இவ்வாறு இருக்க, தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்பதால் கிளைகள் கலைந்து விட்டது என பொய்யான தகவல் கூறி தாங்கள் தான் ம.க.இ.க. என நிறுவ முயற்சித்துள்ளனர்  இந்த சிறுபான்மையினர்.

ஓட்டுச் சீட்டு அரசியல் நடவடிக்கையாலும் பிழைப்புவாத நடவடிக்கையாலும் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு தோழர்களில் பெரும்பான்மையினர் இன்னும் அமைப்பில் தான் எங்களுடன் பயணிக்கின்றனர். எவரும் அதிருப்தியடையவில்லை. எனவே தான் 07.04.2021 அன்று நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெரும்பான்மைத் தோழர்கள் கலந்து கொண்டதுடன் எமது அரசியல் நடவடிக்கை சரியே என ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அரசியல் தலைமையில் பிளவு ஏற்படுத்தி சென்றுவிட்ட சிறுபான்மைக் கும்பல், டிசம்பர் 2020-ல் தங்களது அணிகளுக்கு அனுப்பிய அறிக்கைகளின் 5-வது பகுதியில் 307-ஆம் பக்கத்தில் 32-வது வரியில் "ம.க.இ.க. அமைப்பை கலைப்பதாக" அறிவித்து விட்டனர். டிசம்பர் மாதம் கலைப்பதாக தங்களது அணிகளுக்கு அறிவித்து விட்டு, தற்போது இராமலிங்கம் மூலம் ம.க.இ.க.-வை முறைப்படுத்தி இயக்கப் போவதாக பொது வெளியில் அறிவிப்பதும், ஏற்கனவே அவர்கள் கலைத்ததாக அறிவித்த அமைப்பில் தற்போது சிலரை நீக்குவதாக அறிவிப்பதும் நகைப்புக்குரியதாகும். இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ‘புரட்டுவாதிகள்’ என்பதை நிரூபித்து விட்டனர்.

ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளின் படி, அமைப்பை முறையாக பராமரித்து நடத்தி வருகிறோம். மேற்படி சிறுபான்மையினர் வெளியிட்ட பொய்யான மற்றும் அவதூறு செய்தி தொடர்பாக விவாதிப்பதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ம.க.இ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழுக் கூட்டம் 07.04.2021 அன்று முறையாகக் கூட்டப்பட்டது. கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) 07.04.2021 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவிற்கு தோழர் கதிரவனுக்கும், மாநில பொதுக்குழுவிற்கு தோழர் இராமலிங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அழைப்பை குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தோழர்கள் கதிரவன் மற்றும் இராமலிங்கம் ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு தோழர்கள் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளைப் பொதுவெளியில் வெளியிட்டு அமைப்பை பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அமைப்பு சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும், ம.க.இ.க. அமைப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) மாநில செயற்குழுவில் புதிதாக வேலூர் கிளையில் செயல்பட்டு வரும் தோழர் வாணி அவர்களை இணைப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) அமைப்புக் கொள்கைக்கு உட்பட்டு வருகின்ற ஆகஸ்டு மாதத்தில் அமைப்பின் 9-வது மாநில மாநாடு மற்றும் பார்ப்பனிய இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு மாநாடு நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

4) கார்ப்பரேட் – காவி பாசிசம் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஏற்படுத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்து நின்று முறியடிக்கும் வகையில் நீண்ட நெடிய போராட்டத்திற்குத் தயாராகும் வகையில் அமைப்பின் செயல்பாடுகளைக் கட்டியமைப்போம்!

****

இன்று பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், அதை வீழ்த்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் அமைப்பு ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்காகப் புறப்பட்டு விட்ட, இராமலிங்கம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிறுபான்மையினரது அறிக்கை என்பது, மிகவும் கேடான வகையில் பொய்களாலும், அவதூறுகளாலும் நிரம்பி உள்ளது. எனவே, இந்தப் பொய்யான அறிக்கையை நிராகரிக்கிறோம். பெரும்பான்மைத் தோழர்களுடன் அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எமது அமைப்புக்கு இதுவரை அளித்துவந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தோழர். காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

தொடர்புக்கு: 94431 88285



No comments:

Post a Comment