Sunday, 11 April 2021

தஞ்சையில் "தமிழக உழவர் இயக்கம்" தொடக்கம்.

"அனைத்து விவசாய அமைப்புகள் , இயக்கங்களை ஒன்றிணைக்கும் பொது மேடையாகவும், உழவர் படையாகவும் 'தமிழக உழவர் இயக்கம்' செயல்படும்" என்றார் தமிழக உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு.

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் 10-04-2021 மாலை 6 மணிக்கு  தமிழக உழவர் இயக்கம்  துவக்கப்பட்டது. 

தலைமை உரையாற்றிய திருநாவுக்கரசு தமது உரையில் "தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டு வழிச் சாலை உள்ளிட்ட விவசாயிகளின் போராட்டங்களும்  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் தீர்க்கப்பட முடியாத ஆதார விலை உள்ளிட்ட பிரச்சனைகளளுடன்  விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அனைத்து மக்கள் கோரிக்கைகளுக்காகவும் "தமிழக உழவர் இயக்கம்"  குரல்கொடுக்கும்.   அனைத்து விவசாய அமைப்புகள், இயக்கங்களை ஒன்றி ணைக்கும் பொது மேடையாகவும், உழவர் படையாகவும் " தமிழக உழவர் இயக்கம் செயல்படும்" என்றார்  திருநாவுக்கரசு.  

வேளாண் சட்டங்களை நீக்குவதற்கு பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டவேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையையும், அரசாங்க கொள்முதலையும், சட்ட ரீதியான உரிமையாக்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வுக்கு ஏற்ப  குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கொள்முதல் அமைப்புகள் முன்பிருந்தபடி நீடிக்கவேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயத்திற்காக டீசல் விலையில் 50% மானியம் அளிக்க வேண்டும், மின்சார சட்டம் 2020, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் 2020 ரத்து செய்யப் பட வேண்டும்.

மத்திய அரசு மாநிலத்திற்கான துறைகளில் தலையிடக்கூடாது , டெல்லியிலே போராடி வருகின்ற  மற்றும் தமிழ்நாட்டில் போராடி வருகின்ற விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தோழர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்ட விவசாய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் விவசாயிகளுக்கும்  விவசாயத்துக்கும் எதிரான மோடி அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களின்   தமிழ்  மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

சிபிஐ(எம்எல்) (மக்கள் விடுதலை) தலைவர் தோழர். ஜெ.சிதம்பரநாதன் வெளியிட மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர். காளியப்பன் பெற்றுக்கொண்டார். 

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்  தோழர். க.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். சு.பழனிராஜன், சிபிஐ எம்எல் (மக்கள் விடுதலை) மாவட்டச் செயலாளர் தோழர்.  இரா. அருணாச்சலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர். அருண்ஷோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதாரண்யம் தோழர். பி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தோழர். துரை. மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.   மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் தோழர்.ராவணன் நன்றி கூறினார். இறுதியாக டில்லி விவசாயிகள் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

11-04-2021









No comments:

Post a Comment