Sunday 11 April 2021

திருமாவுக்குப் பின்னால் படித்தவர்கள் இல்லையா?

ட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அரக்கோணம் சோகனூரில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இரு இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சினரால் சாதி வெறியூட்டப்பட்ட ஒரு சில ‘வன்னியச் சாதி’ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 10.04.2021 அன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாஜக, பாமக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளைத் தவிர பிற அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் படுகொலைகளைக் கண்டித்ததோடு கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றனர். கடும் கண்டனங்களுக்குப் பிறகுதான் ஒரு சில கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் பின்தங்கிய வன்னிச் சாதி மக்களை அன்புமணி தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்பதை தமிழகமே உணரத் தொடங்கியதால் “படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை என அன்புமணி உளரத் தொடங்கி விட்டார்.

அன்புமணியின் இந்தக் உளரலைக் கண்டித்து திருமாவளவனுக்கு ஆதரவாக தற்போது #MyLeaderThiruma என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களில் உள்ள வன்னியர் உள்ளிட்ட இதர என்னற்ற சாதியினரும் தங்களது பட்டங்களைப் பட்டியலிட்டு “நாங்கள் திருமா பக்கம்” என சமூக வலைதளங்களைக் கலக்கி வருக்கின்றனர்.

 

என்னைப் பொருத்தவரையில் பட்டப் படிப்புகளைத் தாண்டி பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் உழைப்புச் சுரண்டல், வேலையின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, கல்வி, மருத்துவம், சுகாதராம், சுற்றுச்சூழல்கேடு, சாதி, தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்கின்ற அறிவைப் பெற்று களமாடுபவர்களையே படிப்பாளிகளாகப் பார்க்கிறேன். மருத்துவப் பட்டம் பெற்றவன் நோயாளிகளுக்கு வேண்டுமானால் மருத்துவம் பார்க்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையும் விடுவிக்கப் போராடுபவனையே சமூக மருத்துவன் என்கிறது உலகம்.  

 

திருமாவுக்குப் பின்னால் படித்தவர்கள் இல்லையா?

 

படித்தவர்களும் படிக்காதவர்களும் எல்லாக் கட்சிகளிலும்தான் இருக்கின்றனர். இலஞ்ச ஊழல், மணல் கொள்ளை,. கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் அனைத்து கட்சிகளிலும், அனைத்து சாதிகளிலும் உள்ள படித்தவன் படிக்காதவன் என பலரும்தான் ஈடுபடுகின்றனர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சிலர் தடம் புரளும் காலம் இது. தற்போதைய சொத்துடைமைச் சமூகத்தின் இழிந்த நிலை இதுதான். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் களை எடுப்பதோடு இருப்பவர்களையும் பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தினால் மட்டுமே சமூக விடுதலையை நோக்கி அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.


அரக்கோணம் படுகொலைகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக இராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியல் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டு 10.04.2021 அன்று காலை எனது இணையருடன் அங்கு சென்றேன். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரத்தில் அங்கே மேடை அமைக்கும் பணிகள் தொடங்கின. விசாரித்த போது காலையில் சென்னை ஆர்ப்பாட்டத்தில் திருமா கலந்து கொள்வதால் மாலையில்தான் இங்கு ஆர்ப்பாட்டம் என விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அவரிடம் உரையாடியபோது ”முன்பெல்லாம் குடித்துவிட்டு பிறர் சொன்னதைக் கேட்டு ஆட்டம் போட்டிருக்கிறோம், தகராறு செய்திருக்கிறோம் ஆனால் தற்போது அண்ணனின் பேச்சைக் கேட்ட பிறகு நிறையவே பாடம்  பயின்றிருக்கிறோம், அதற்கு ஏற்ப எங்களை எவ்வளவோ மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று பொறுப்போடு பதில் அளித்தார். உண்மையில் திருமாவின் பேச்சு சிறுத்தைகளை மாற்றுகிறதா என எண்ணியவாறு வீட்டிற்கு வந்து விட்டோம்.


மாலை ஐந்து மணிக்கெல்லாம் முத்துக்கடை சென்று விட்டேன். உடன் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் வந்திருந்தனர். தப்பாட்டக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பாடல்களோடு தொடங்கியது ஆர்ப்பாட்டம். விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர்களும், மனித நேய மக்கள் கட்சி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கண்டன உரையாற்றினர். போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாலை ஏழு மணிக்குப் பேசத் தொடங்கிய திருமா எட்டரை மணிக்குத் தனது உரையை முடித்தார்.

சோகனூர் படுகொலை மட்டுமன்றி, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகள், மணல் கொள்ளை, இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, சாதித் தீண்டாமை, பாஜகவின் சனாதனக் கோட்பாடு என சகல பிரச்சனைகளையும் தொட்டு நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். ‘பின் டிராப் சலைன்ஸ்’ என்று சொல்வார்களே அது போல ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த கூட்டம் ஆடாமல் அசைவின்றி அவரது உரைக்கு செவிமடுத்தது. ஐந்தரை மணிக்கு இருக்கையில் அமர்ந்த எவரும் எட்டரை மணிவரை எழவில்லை. குறிப்பாக ஒரு மணிநேரத்திற்கும் மேல் மொத்தக் கூட்டத்தையும் தனது பேச்சால் கட்டிப் போட்டிருந்தார். தனது உரையில் தனிப்பட்ட முறையில் எவர் மீதும் அவர் வன்மத்தைக் கக்கவில்லை. பக்குவப்பட்ட அரசியலை சிறுத்தைகளுக்கு அவர் ஊட்டிக் கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.


தான் யாருக்கும் எதிரானவன் இல்லை என்பதால் தனது பாதுகாப்பிற்கு ரவுடிகளையும் உடன் வைத்துக் கொள்வதில்லை, காவல் துறையும் தனக்குத் தேவையில்லை, மாறாக படிப்பாளிகளை மட்டுமே உடன் வைத்துக் கொண்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்ட போது ”அண்ணனின் பேச்சைக் கேட்ட பிறகு நிறையவே பாடம்  பயின்றிருக்கிறோம், அதற்கு ஏற்ப எங்களை எவ்வளவோ மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று காலையில் ஒரு சிறுத்தை சொன்னதை நெஞ்சில் அசைபோட்டவாறு இல்லம் திரும்பினேன்.


பட்டம் படித்தக் கூட்டம் மட்டுமல்ல, புத்தனையும், மகாத்மா ஜோதிராவ் புலேவையும், அம்பேத்கரையும், பெரியாரையும், மார்க்சையும் படிக்கும் பெருங்கூட்டமும் திருமாவுக்குப் பின்னால் நிற்கிறது. அன்புமணி அவர்களே! உங்களுக்குப் பின்னால் காடுவெட்டியை மட்டுமே படிக்கும் கூட்டம் மட்டுமே நிற்கிறது. மாவீரன்களுக்கு கொம்பு சீவுவதை விட்டுவிட்டு ‘பாட்டாளிகளை’ 'படிப்பாளிகளாக' மாற்ற முயலுங்கள். இல்லையேல் தைலாபுரத்தில் தனிமரமாய் நிற்பதை வரலாறு பதிவு செய்யும்.

 

தமிழ்மணி

No comments:

Post a Comment