Thursday, 14 January 2021

இழி குணம்: போராளிகள் தடம் புரளும் தருணங்கள்!.....12

போராளியாய் வாழ்க்கையைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வதுதான் கடினம். 

திருமண வாழ்க்கைப் பலரைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. குழந்தைகள் வந்த பிறகு குடும்ப வாழ்க்கையில் மூழ்கிப் போவோரும் உண்டு. இருப்பதை இழக்கத் தயங்கி, பின்சென்றோரும் உண்டு. 

சட்டச் சிக்கலை எதிர் கொள்வதற்காக பெரும்பாலும் புனைப் பெயரில்தான் பொதுமக்களிடையே அறிமுகமாவோம். கார்மேகம், குயிலன், மாடன், முகிலன், குறிஞ்சி, இசையரசன், கோவலன், அருணன், கபிலன், முத்து, கோவன், தமிழ்மணி என மொத்தத் தமிழும் திருச்சி மகஇக விற்குள் அடக்கம். சில சமயம் புனைப் பெயர்கள் எமக்குக் கேடயமாய்ப் பயன்பட்டதும் உண்டு. ஆனால் இன்று, மொத்த தமிழில் சில மட்டுமே எஞ்சி இருந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. தொடக்க காலத்தில் இடர்களை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல.

திருச்சி, தில்லை நகர், 5-வது குறுக்கு உதயசூரியன் தேநீர் விடுதி அறியாதோர் உண்டோ? மகஇக-வின் உலக முகவரி அதுதான். பக்கத்திலேயே தில்லை நகர் காவல் நிலையம். பெருந்தலைகள் திருச்சி வருகை என்றால் போலீசின் முதல் வேலை, தேநீர் விடுதி முற்றுகைதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முதல் நபரே கபிலன்தான். எண்ணற்ற வழக்குகள். யார்தான் பொறுத்துக் கொள்வர்? இத்தகையப் போராளிகள் கூட சில சமயம் தடம் புரள்வதுண்டு.

செய்கிற வேலையில், தொழிலில் நேர்மை இருக்கவேண்டும், ஏமாற்று பித்தலாட்டம் இருந்தால் கைவிட வேண்டும். இலஞ்ச ஊழலில் உழலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேலையா? அல்லது அமைப்பா? என்ற கேள்வி எழுந்தபோது ஒருவர் அமைப்பைக் கைவிட்டுச் சென்ற வரலாறும் உண்டு.

People not talk about the world, but talk about their perception" என்பார் கிரேக்க நாட்டு பிரபல ஹோமியோபதியர் வித்தல் காஸ். "மக்கள் உண்மையைப் பேசுவதில்லை; அவரவர் உணர்ந்ததைத்தான் பேசுகின்றனர்". எனவே உண்மையைப் பேசாத வரை மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

பொதுவுடமைச் சமூகம் என்ற தொலைநோக்கு இலட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். இந்தப் பயணத்தின் ஊடே சிலருக்குச் சாதி-மதம் சார்ந்த, இனம்-மொழி சார்ந்த, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த, தேர்தல் அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்து முரண் ஏற்பட்டு சிலர் வெளியேறுவதுண்டு. காரணம் ஏதுமின்றி சும்மா ஒதுங்கினால் மதிப்பு மட்டுப்பட்டு விடும் என்பதால், ஏதோ ஒரு கருத்து முரணைக் காரணம் காட்டிச் செல்வோரும் உண்டு.

பாலியல் உணர்வு ஒரு உயிரியல் தேவைதான் என்றாலும் அதை ஒரு கட்டுக்குள் வைத்தால் மட்டுமே குமுக வாழ்வில் குந்தகம் வராது. வேட்கைக்கு வேலியிடாத போது, சிலர் தடம் புரள்வதும் உண்டு. இதற்காக ஓரங்கட்டப்பட்டோரும் உண்டு. எத்தனை திறமைகள் இருந்தாலும் சிரழிவில் வீழ்ந்து விட்டால், தொண்டனாய் இருந்தாலும், தலைவராய் இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அளவுகோல் ஒன்றுதான்.

"மக்களுக்குத்தானே மாடாய் உழைக்கிறோம்; கொஞ்சம் எடுத்தால் என்ன?" என உண்டியலில் கை வைப்போரும் உண்டு. சில சமயம் பாக்கெட்டில் பதுக்குவோரும் உண்டு. இவர்கள் மிகச் சொற்பமானவர்களே என்றாலும்  சிக்காதவரை காலம் தள்ளுவர். மிகச் சமீபத்தில் கூட வேலூரில் இத்தகைய நபர் ஒருவர் சிக்கியதுண்டு..

பாலியலும், பண மோசடியும் இழி குணத்தின் அங்கம் அன்றோ? யார்தான் இதை ஏற்பர்? அதுவும் பொது வாழ்வில்? இவர்கள் பல்துறை வித்தகர்கள் என்றாலும் விதிவிலக்கு ஏதும் தருவதில்லை. உரிய நேரத்தில் இடித்துரைத்தால் மீள்வோரும் உண்டு. மீள முடியாதோர் விலக்கப்படுவதும் உண்டு. 

தான் மட்டுமல்ல, தனது இணையர் உள்ளிட்ட குடும்பத்தாரும் இழி குணம் அற்றோராய் இருக்க வேண்டும். இல்லையேல் அதற்கும் நடவடிக்கை உண்டு.

பொது வாழ்க்கையில், கொள்கைக்காகக் கூட்டு சேர்ந்து பயணிப்பதைத் தவிர, சொந்தத் தேவைக்காகக் கூட்டு சேர்வது  ஆபத்தானது. இதைத்தான் கொள்கையற்ற உறவு என்பார்கள். இத்தகைய கொள்கையற்ற அணி சேர்க்கை தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று வகை பிரித்துப் பழக வைக்கும். பின்னாளில் அது பிணக்குகளை உருவாக்கி இயக்கப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாய் மாறிவிடும். 

சொந்த பணத் தேவைக்கு சிலர் பிணை கேட்பர். தோழர்தானே என்று நம்பி கைச்சாத்து வைத்து ஏமாந்தோர் பலர். கடனைப் பெற்றவர் கம்பி நீட்ட, முட்டி மோதி கசந்து போவோரும் உண்டு. இதற்கும் வேலூர்தான் முன்னோடி. 

தடம் புரள்வோரைத் தள்ளிவிட்டு விட்டு பயணிப்பதால்தான் நக்சல்பாரிகளுக்கு நற்பெயர் உண்டு. இல்லையேல் என்னவாகும்.....?

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: ஓய்வறியாப் போராளிகள்!.....11


இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10

இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8


இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7


இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6


இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 


இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3

No comments:

Post a Comment