Thursday, 15 October 2020

இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

மலையடிவாரத்தில் புதையுண்டு கிடக்கும் நகரம் மலைபடுகடாம் கண்ட செங்கண் மாநகராக இருக்கக்கூடுமோ என்பது இங்குள்ள ஒரு சில முன்னோர்களின் நம்பிக்கை. இங்கேயும் ஒரு கீழடியோ என நம்பும் வகையில் மேலடியிலேயே சில ஆதாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன; கேட்பாரற்று!

பருவ மழை பொய்த்தாலன்றி நிலத்தடி நீருக்குப் பஞ்சமில்லை. நிரம்பி வழியும் ஏரி நீரும் சிற்றோடைகளின் ஊற்று நீரும் ஒருங்கே சேர்ந்தால் முப்போகத்திற்குப் பஞ்சமில்லை. ஆடை தவிர வேறெதற்கும் அயலாரை நாட வேண்டிய அவசியம் இன்றி சுயசார்பு வாழ்வு வாழும் உழவர் குடி பெருமக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொஞ்சம் நிலம், கூட்டுழைப்பு,  ஒருவருக்கொருவர் உதவிக்கரம் என வாழ்ந்ததால் பொறாமைக்கு வழி இல்லை; நேர்மைக்குப் பஞ்சமில்லை. சில சமயம் வானம் பொய்த்துப் பஞ்சம் வந்தாலும் பட்டினியால் யாரும் மாண்டதில்லை. 

உலக அளவில் நச்சு ஆலைகளின் பெருக்கம், சுற்றுச்சூழல் கேடு, ஓசோன் சிதைவு, எல்நினோ லாநினோ விளைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள் மொத்த இயற்கையையும் சீர்குலைத்து விட்டதால் முன்பு போல மழைப்பொழிவு இல்லை, நீர் வளம் இல்லை, விளைச்சல் இல்லை, வருவாய் இல்லை.


அன்று எல்லாம் இருந்தும் கல்வி மட்டும் எட்டாக் கனி; ஒற்றையடிப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் நடந்தால்தான் அ-னா, ஆ-வன்னா. ஐந்தைத் தாண்டினால் மூன்று கிலோ மீட்டரும், எட்டைத் தாண்டில் ஏழு கிலோ மீட்டரும் பள்ளிக் கல்விக்கு ஓட வேண்டும். ஓடுவதற்கு உயரம் போதவில்லை என்றால் வளர்வதற்காகவே ஐந்திலே மேலும் ஓராண்டு உட்கார வைத்து விடுவார்கள் பாசக்கார ஆசிரியர்கள். 

கொட்டாவாசிகள் என எங்களை விளித்த ஊர்க்காரர்களின் ஏளனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இத்தனையையும் தாண்டி மிட்டா மிராசுகள் கூட எட்ட முடியாத பட்டத்தை எழுபதுகளுக்கு முன்பாகவே தொட்டவர் எங்கள் அண்ணன் கண்ணன். அவரது பட்டமே நான் பட்டயம் பெற பட்டணத்திற்கு வழிகாட்டியது.

வாரிசுகள் பெருகின; உடைமைகள் சிதறின; போட்டியும் பொறாமையும் நேர்மையின்மையும் சொத்துடைமையின் தவிர்க்க முடியாத குணங்களாய் இன்று மாறிவிட்டன; இங்கு மட்டுமல்ல எங்கும்.

தொடரும்

தமிழ்மணி

2 comments:

  1. தோழர்!நூல் வடிவில் கிடைக்குமா?அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ள இயலுமா?மிகவும் நேர்த்தியான மொழி கையாடல்!அழகிய வழிகாட்டல்!ரோஜா இதழ்களின் மீது முள் பாதங்களை பதித்து நடைபோடும் மேன்மை!ஒழுகத்தின் வெளிச்ச விதைகள்!

    ReplyDelete
    Replies
    1. இதுவரை பனிரெண்டு தொடர்கள் எழுதியுள்ளேன். இன்னும் சில தொடர்கள் எழுத வேண்டியுள்ளது. முழுமையாக முடித்த பிறகு நூல்வடிவில் தொகுப்பாகத் தருகிறேன். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி. உடனடியாகப் பதில் தர இயலவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.

      Delete