Monday 11 January 2021

இழி குணம்: ஓய்வறியாப் போராளிகள்!.....11

இதுவரை நான் எடுத்துச் சொன்னவை ஒரு வகை மாதிரிதான். இப்படி எண்ணற்றத் தோழர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் கடும் உழைப்பால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்படும் அமைப்புகள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்.

திருச்சி பெல் நிறுவன ஊழியர்களைக் கொண்டுதான் 1982 ல் மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி கிளை தொடங்கப்பட்டது. இராணிப்பேட்டை பெல் ஊழியர்களைக் கொண்டுதான் வேலூர் கிளையும் செயல்பட்டு வந்தது. திருச்சி, வேலூர் மட்டுமன்றி மதுரை, கோவை, கடலூர், சென்னை, சிவகங்கை ஆகிய கிளைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள்தான். ஒரு சில தோழர்கள் தங்களது அலுவலக வேலையை விட்டுவிட்டு இயக்கப் பணிகளையே நிரந்தர வேலையாக மேற்கொண்டனர். 


நிரந்தரமான வேலை, அதுவும் அரசு வேலை, கை நிறைய ஊதியம் என சொகுசாக வாழ முடியும் - அதாவது 'மார்க்சியர்கள்' வார்த்தையில் குட்டி முதலாளித்துவ வாழ்க்கை வாழ முடியும்-என்ற போதிலும் கூட, தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து‌க் கொண்டு செயல்பட முன்வந்ததற்கான அடிப்படைக் காரணம் மார்க்சியத்தின்பால் இவர்கள் கொண்ட காதல்தான். முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிலிருந்து மக்களை மீட்பதற்கு மார்க்சியம்தானே இன்றும் ஒரே மாமருந்தாக உள்ளது.


மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி என அந்தந்தப் பிரிவு மக்களுக்கான அமைப்புகள் தொடங்கப்பட்டன. மிகச் சாதாரண மக்களையும் இந்த அமைப்புகள் தன்வசம் ஈர்த்தன. 2015 ல் மக்கள் அதிகாரம் தொடங்கப்பட்டு, அது முன்னெடுத்த போராட்டங்களால், பெருவாரியான மக்களை ஈர்த்ததோடு, அது ஒரு அரசியல் சக்தியாக பிறரால் அங்கீகரிக்கும் அளவுக்குப் பிரபலமடைந்தது. அரசு மற்றும் ஆலை ஊழியர்கள் மட்டுமன்றி, சிறு வியாபாரிகள், நடுத்தர விவசாயிகள் உள்ளிட்ட சகல பிரிவு மக்களையும் இந்த அமைப்புகள் தம்பக்கம் ஈர்க்கத் தொடங்கின.


மற்ற கட்சிகளில், கட்சி வேலைகள்-களப்பணி என்பது வேறாகவும், வாழ்க்கை முறை என்பது வேறாகவும் இருக்கும். பொதுவுடைமை இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள் மட்டும் இதில் விதிவிலக்காக இருப்பர். தங்களது வாழ்க்கை முறையையும் இயக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். சாதி-மத-சடங்கு- சம்பிரதாயங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து பகுத்தறிவு வாழ்க்கை முறையை கைக்கொள்கின்றனர் பெரியாரிய சிந்தனையாளர்கள். மேற்கண்ட அம்சங்களுடன் கூடுதலாக சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களைப் போல எளிமையான வாழ்க்கை முறையையும் மேற்கொள்கின்றனர் பொதுஉடைமை சிந்தனையாளர்கள். 


உழைப்பை மட்டுமே விற்று வாழக்கூடிய ஏழை எளிய மக்கள்தானே பாட்டாளிகள். புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், பொதுவுடமை இயக்கத்தில் செயல்பட முன் வருகின்ற படித்த, வசதி படைத்த பிரிவில் இருந்து வருபவர்கள் தங்களது சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையை பாட்டாளிகள் நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் உணர்த்துகிறது. 

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது "நக்சலைட்" என்று முத்திரை குத்தி அச்சுறுத்த ஒரு சிலர் முயற்சி செய்தாலும், அதையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து செயல்பட பலர் முன் வருகின்றனர். அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டே, மாலை நேரம், விடுமுறை நாட்களை இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர். மிக முக்கியமான வேலை என்றால் சம்பள இழப்பைக் கூட பொருட்படுத்தாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். தங்களுடைய வருவாயில் ஒரு பகுதியை இயக்கத்திற்கு மாதந்தோரும் நன்கொடையாக அளிக்கின்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் தடைசெய்யப்பட்ட அமைப்பும் அல்ல; ஒரு கலை இலக்கிய அமைப்பில் ஒரு அரசு ஊழியரோ, ஆலைத் தொழிலாளியோ செயல்படுவது சட்டப்படி தவறான நடத்தையும் அல்ல என்பதையும் இவர்கள் தெரிந்தே வைத்துள்ளனர்.


தமிழகத்தின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும், நீண்ட தூரப் பயணத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். தங்களுடைய சேமிப்பின் பெரும் பகுதியை இயக்க வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். கைது-வழக்கு-சிறை  எதுவரினும் துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் தம்முடைய வாழ்க்கையில் கணிசமான நேரத்தையும், தங்களது வருவாயில் கணிசமானத் தொகையையும் இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர்.


இவர்களில் சிலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றினாலும், கையூட்டுப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், இவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் மதுபோதைக்கு ஆட்படுவதில்லை; ஆணாதிக்கத் திமிரோடு பெண்களை இழிவாக நடத்துவதில்லை. ஆதிக்கச் சாதி பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களை மிக இயல்பாக மேற்கொள்கின்றனர். பாதிக்கப்படுகிற மக்களுக்குத் தங்களால் இயன்றவரை ஓடோடி உதவிகள் செய்கின்றனர். இவர்களிடம் இழி குணம் ஏதும் இல்லை என்பதால் இவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகின்றனர். மொத்தத்தில் இவர்கள் ஓய்வறியாப் போராளிகள்.


தொடரும்


தமிழ்மணி


தொடர்புடைய பதிவுகள்


இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10

இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8


இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7


இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6


இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 





No comments:

Post a Comment