Sunday 3 January 2021

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8

இராணிப்பேட்டையில் 1980 ல் தொடங்கப்பட்ட பெல் ஆலைக்கு ஆட்கள் தேவைப்பட்ட காலம் அது. அங்குச் செல்வோருக்கு இரண்டு 'இன்கிரிமெண்ட்' கூடுதல் என்பதால் திருச்சியில் இருந்து பலர் முண்டியடித்தனர். ஊர், பக்கம் என்பதால் 1982 ல் நானும் முயன்றேன்; முடியவில்லை.

தம்பி, தங்கை, அக்கா மகன் ஆகியோர் படிப்புக்காக திருச்சி வர, குடும்பம் விரிந்தது. 

பதவி உயர்வுக்குப் பயன்படுமே என எல்லோரையும் போல REC (NIT) ல் நானும் பொறியியல் பட்டம் பெற்றேன். இதிலும் கூட சிபாரிசு கொடிகட்டிப் பறந்ததால், 'மெக்கானிக்கலுக்குப்' பதிலாக, ET எழுத பெருமளவில் உதவாது என்றாலும், ஒரு பட்டம் இருக்கட்டுமே என 'மெட்டலர்ஜி' படித்தேன். இதுவே பின்னாளில் சட்டம் பயில உதவியது.

வேலூரிலும் மகஇக செயல்பட்டதால், இயக்க வேலைகள் தடைபடாது என்பதால் இராணிப்பேட்டைக்கு மாற்றலாகும் முயற்சியைக் கைவிடவில்லை. ஃபெலிக்சோடு 'மியூட்சுவல்' போட்டேன். தங்கை மற்றும் அக்கா மகன் இருவரின் படிப்பை வாலாசாப்பேட்டைக்கு நம்பிக்கையோடு மாற்றினேன். அவர்களைக் காக்க அத்திமூரான் கொட்டாயிலிருந்து தாய் தந்தையரும் வாலாஜா சென்றனர். எனக்கோ இரட்டிப்புச் செலவு.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் 1991 நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையின் நேரடி விளைவு, 1992 ஆம் ஆண்டு பெல் நிறுவனத்தில் முதன் முறையாக போனஸ் மறுக்கப்பட்டது. இது அநீதி என தன்னெழுச்சியாய் ஆர்ப்பரித்தனர் தொழிலாளர்கள். செல்வாக்குள்ள தொழிற்சங்கங்களாலேயே மட்டுப் படுத்த முடியாமல் போராட்டம் இரவு வரை நீடித்தது. காரணம் மகஇக தான் என நிர்வாகத்தோடு மாற்றுத் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர், கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் மூன்று தொழிலாளர்கள் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதில் இருவர் மகஇக தோழர்கள். தொழிற்சங்கங்களில் கருங்காலிகள், உணரவைத்தப் போராட்டம் அது.

வேலை நீக்கத்தைக் கண்டஞ்சிய எமது செயலாளர் உள்ளிட்ட சங்க முன்னோடிகள் சிலர் நோட்டீஸ் அடித்துக் கொடுத்துவிட்டு கொத்தாய் ஓடிவிட, சிங்கமாய் நின்ற தலைவர் சிங்கராயராரும், விவேகமாய் வினையாற்றிய தோழர் நாராயணசாமியும், மற்ற சில தோழர்களும் சங்கத்தைக் கட்டிக் காக்கத் தூணாய் நின்றவர்கள். நினைவில் வாழும் அவர்கள் இருவரும் அன்று துவண்டிருந்தால் இன்று திருச்சியில் 'பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்' ஏது?

வேலை நீக்க உத்தரவுக்கு, நீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடை ஆணையை எடுத்துக் கொண்டு 25.11.1992 அன்று இரு மகஇக தோழர்களும் ஆலைக்குள் சென்றபோது ஏற்பட்ட சம்பவத்தில், நான் அவ்விடத்தில் இல்லாத போதும், நானும் கந்தசாமியும், 'ED ஒழிக!' என கத்திக் கொண்டு செக்யூரிட்டிகளைத் தள்ளிவிட்டு, அவ்விருவரையும் மெயின் கேட் வழியாக ஆலைக்குள் அழைத்துச் சென்றதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டோம். 

பொய்சாட்சிச் சொல்ல செக்யூரிட்டிகளே முன்வராததால், அன்று SSTP ஆலையில் வேலை பார்த்த ஒரு பாதுகாவல் அதிகாரியையும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு ஊழியரையும் சாட்சிகளாக 'செட் அப்' செய்தனர். புலனாய்வு ஊழியர் பிறழ் சாட்சியாய் ஆன போதும், அவ்விடத்திலேயே வேலை பார்க்காத பாதுகாப்பு அதிகாரியின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் துறை விசாரணைக்குப் பிறகு 1994, அக்டோபர் 14 அன்று இருவரும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டோம். அன்று சிசிடிவி கேமராக்கள் இருந்திருந்தால் ஒரு வேளை குற்றச்சாட்டுகளை முறியடித்திருக்க முடியுமோ?

வேலைநீக்கம் ஈவிரக்கமின்றி கழுத்தருக்கும் கொடும் பலி. தருணம் பார்த்துக் காத்திருந்து என்னைத் தீர்த்துக் கட்டி உள்ளனர் என்பதை, 'சேகருக்குப் பதிலாக வேறு ஆளைப் பாருங்கள்!' என நிர்வாகத் தரப்பில் சொன்னதாக என்னோடு இராணிப்பேட்டைக்கு 'மியூச்சுவல்' போட்ட ஃபெலிக்ஸ் மூலம் பின்னாளில் தெரிந்து கொண்டேன். 

தற்காலிகப் பணிநீக்கக் காலத்தில் கிடைத்த பாதி ஊதியத்தில் காலத்தை தள்ளியாச்சு. இனி வருவாய்க்கு என்ன செய்ய? பெல் ஊழியர்கள் பரிவோடு கொடுத்த நன்கொடையால் சிறிது காலம் ஓடியது. பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு தோழர்கள் மகஇக-வினர். கூட்டாக ஏதேனும் சிறு தொழில் செய்ய முயற்சி செய்தும், எதுவும் கைகூடவில்லை. ஒருவர் கூட்டுக் குடும்பத்தோடு ஐய்க்கியமாக, ஒருவர் செங்கல் சூளையில் ஈடுபட, ஒருவர் பெட்டிக் கடையில் சங்கமிக்க, நானோ பார் கவுன்சில் நோக்கிப் பயணமானேன்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7


இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6







No comments:

Post a Comment