Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Tuesday, 11 November 2025

சனாதன (=பாசிச) எதிர்ப்பு பேசுவோர் ஏன் ஒன்றிணைய வேண்டும்?

அலுமினியம், செம்பு, தங்கம், இரும்பு, ஆக்சிஜன், குளோரின் போன்ற தனிமங்களின் தனித்தனியான பயன்பாடு ஒருபக்கம் இருந்த போதிலும், அவை பிற தனிமங்களோடு சேர்ந்து மூலக்கூறுகளாக மாறும்போது அவற்றின் பயன்பாடு மேலும் பரந்த அளவில் அதிகரிக்கின்றன.


11 புரோட்டான் மற்றும் 11 எலக்ட்ரான்களைக் கொண்ட சோடியம் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானும், அதேபோல 17 புரோட்டான் மற்றும் 17 எலக்ட்ரான்களைக் கொண்ட குளோரின் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 7 வேலன்ஸ் எலக்ட்ரான்களும் இணைந்து சோடியம் குளோரைடு (NaCl) எனும் மூலக்கூறு உருவாகும்போதுதான் நமக்கு சுவை சேர்க்கும் உப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டுக்கு நேட்ரம் மூரியாடிக்கம் (Natrum Muriaticum) என்று பெயர். 

NaCl

இந்த நேட்ரம் மூரியாடிக்கத்திலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்து, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவற்றை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

உயிரற்ற தனிமங்களே மனிதர்களுக்குப் பயன்படும் பொழுது, உயிருள்ள மனிதர்கள் பலரும் சோடியத்தில் உள்ள ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானைப் போல தனித்தோ, குளோரினில் உள்ள ஏழு வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல ஒரு சிறு கூட்டமாகவோ ஒன்று சேராமல் வனாந்தரத்தில் அனாதியாக எவருக்கும் பயனின்றி வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

சனாதனம் எனும் நச்சுக்கழிவு இந்த நாட்டின் மொத்த செயல்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த சனாதனக் கழிவுகளை வெளியேற்ற கரிப்புத் தன்மை கொண்ட நேட்ரம் மூரியாடிக்கம் எனும் உப்பு தேவைப்படுகிறது. அதற்கு, வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல தனித்தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், சிறுசிறு கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு சார்ந்த களப்போராளிகளும் இணைந்து நேட்ரம் மூரியாடிக்கம் எனும் மூலக்கூறாக மாறவில்லை என்றால் சனாதனம் எனும் நச்சுக் கழிவுகளால் இந்த நாடு அழுகிப் போவதைத் தடுக்க முடியாது.

மூன்று, ஐந்து உள்ளிட்ட சிறு சிறு எண்ணிக்கையில் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக சுற்றிக்கொண்டிருக்கும் இயக்கத்தாருக்கும் இது பொருந்தும். ஒரு தனிமத்தில் உள்ள மூன்று வேலன்ஸ் எலக்ட்ரான்களும், மற்றொரு தனிமத்தில் உள்ள ஐந்து வேலன்ஸ் எலக்ட்ரான்களும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே மூலக்கூறாக உருவாக முடியும்.

இந்த நிலையிலும், இன்னமும் நீங்கள் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக தனித்தனியே சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா அல்லது மூலக்கூறுகளாக ஒன்றிணைந்து மக்களுக்குப் பயன்படப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்!

தமிழ்மணி

Monday, 18 September 2023

"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?

வினைசெய் 2.0, Scientist, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல்,  என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,  

வினைசெய், Journalist, என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம், 

வினைசெய் 2.0, Friends, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல், என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,

என ஒரே பெயரில் மூன்று முகநூல் கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக உள்ள வினை செய் ஊடகம் வலைப்பூவாகவும் பதிவாகி உள்ளது. 


*****
கார்ப்பரேட் காவிப்  பாசிசம் வீழ்த்துவது பற்றிய சரியான திசை வழி என்ன? என்ற‌ தலைப்பில் பல்லாவரம் முகவரியைக் கொண்ட வினைசெய் 2.0, Scientist, என்ற முகநூல் கணக்கில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அது குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

*****
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை வழி எனவும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் வழி எனவும் தொடங்குகிறது இக்கட்டுரை.

கடந்த கால செயல்பாடு

1990 களில், "நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற சரியான செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியதாகவும், 2015 வாக்கில் "கட்டமைப்பு நெருக்கடி" என்கிற செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, அதை ஒரு சாகச நடவடிக்கையாக மாற்ற துணிந்ததாகவும், பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை உணராமல் செயல்பட்டதாகவும், அப்போது, பாசிச எதிர்ப்பு அரசியலை திணிப்பதாக அமைப்பில் இருந்த சில குட்டி முதலாளித்துவப் பிரிவினர் விமர்சனம் வைத்ததாகவும் கூறுகிறது இக்கட்டுரை.

எதிர்காலச் செயல்பாடு

2019 வாக்கில் "கார்ப்பரேட் காவிப் பாசம்" நாட்டின் பிரதான அபாயமாக மாறிவிட்டதால், பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியாக இருக்கும், 

ஆளு வர்க்கப் பிரிவினரின் ஒரு சாராரையும், இதர முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மேலிருந்து "பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளுக்கு எதிராகத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்தியும், 

விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மற்றும்  அறிவுத் துறையினரை உள்ளடக்கிய, "பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டும் என்கிற இருவழிப் பாதைதான் சரியானது எனவும், 

இதன் மூலம் மட்டும்தான் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவி, அதைத் தொடர்ந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்கிறது கட்டுரை.

தோழர் பாலன் உள்ளிட்ட சிலர் பாசிசத்தை அதன் தொடக்கக் காலத்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதை மறுப்பதாகவும், தரவுகள் எதுவும் இன்றி குறை கூறுகிறது இக்கட்டுரை.

தோழர் மருதையன் மீதான விமர்சனம்

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு முகாம், அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றொரு முகாம் என இரு முகாம்கள் மட்டுமே இருப்பதால், பாஜக முகாமை வீழ்த்த, திமுக முகாமை ஆதரிக்க வேண்டும் என அமைப்பிலிருந்து வெளியேறி திமுக-வை ஆதரிக்கும் மகஇக முன்னாள் பொதுச் செயலாளர் மருதையன் செயல்பட்டு வருவதாகவும், 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மருதையன் திட்டவட்டமாக முன்வைப்பதாகவும், இது பாசிசத்தை வீழ்த்தாது, மாறாக மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் வீழ்த்துகிற, தோற்றத்தில் முற்போக்கு தன்மை கொண்ட குட்டி முதலாளித்துவ தர்க்கம் இது; மேலும், இது போலி ஜனநாயக அமைப்பை நம்ப வைப்பதாகும் என்பதால் இதை நிராகரிக்க வேண்டும் என்கிறது இக்கட்டுரை.

சில தனி நபர்களும், சில சிறு குழுக்களும் பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், இது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்பி, பாட்டாளி வர்க்கத்தைக் கையேறு நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறது இக்கட்டுரை.

யார் இந்த வினைசெய்?

ஒன்றுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக, அதே பெயரில் செயல்படும் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்யினரை இந்தக் கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதைப் பார்க்கும் போது,  வினைசெய் ஆசிரியர் குழு, தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தாத போதும், இவர்கள் வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பை ஆதரிப்பவர்கள் என யூகிக்க முடிகிறது.

வினைசெய் ஆசிரியர் குழு முன்வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம் சரியானதா தவறானதா என்கிற விவாதம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஜனநாயக சக்திகளையும், தனி நபர்களாக உள்ள அறிவுத் துறையினரையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்; கையாள வேண்டும் என்கிற போதாமை வினைசெய் ஆசிரியர் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தோழர் மருதையன் என்ன செய்கிறார்?

சொந்தக் காரணங்களுக்காகவும், அரசியல் கருத்து வேறுபாடு காரணங்களுக்காகவும் ஒருவர் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவரது ஜனநாயக உரிமையாகும். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகத் தோழர் மருதையன் மகஇக-விலிருந்து வெளியேறவில்லை; மாறாக அரசியல் தலைமைக் குழுவில் இருந்த ஒரு சிலர் அவரை பார்ப்பனர் என்று முத்திரை குத்தி, சாதி ரீதியாக தனிமைப்படுத்தியதனால் வெறுப்புற்று வெளியேறியவர். 

அமைப்பை விட்டு வெளியேறினாலும், அவர் நாட்டு நடப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை எதிர்த்துக் கருத்துத் தளத்தில் முன் எப்போதையும்விட மிகத் தீவிரமாக தனது ஆழமான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வருகிறார். களத்திலும் சில போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், அவர் முன்வைக்கிற கருத்துகளை இலட்சக்கணக்கானோர் ஆதரிப்பதோடு, அரசியல் துறையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இன்று அவர் அறியப்படுகிறார். 

அறிவுத்துறையினரைக் கையாள்வது எப்படி?

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. என்பார் மாவோ.

ஆனால், இதற்கு மாறான பார்வையைக் கொண்டுள்ளது வினைசெய் கட்டுரை.  தோழர் மருதையன் குறித்தப் பார்வையில் அது வெளிப்படுகிறது. அவர் திமுக-வை ஆதரிப்பதாகக் குறை கூறும் வினைசெய், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு சிலரை ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்கள் தங்கள் மேடைகளில் ஏற்றி உரையாற்ற வைக்கிறார்களே? ஏன் காங்கிரஸ்காரர்களைக்கூட மேடை ஏற்றுகிறார்களே? இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? 

"பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்"

குட்டி முதலாளிகள், புரட்சியில் அவர்களின் பங்கு குறித்தும் வினைசெய் குழுவிற்கு போதியப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தோழர் மருதையனை குட்டிமுதலாளி என முத்திரை குத்துகின்றனர். குட்டி முதலாளிகளின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை மாவோவைப் படித்தால்தானே புரிந்து கொள்ள முடியும். தோழர் மருதையனை விமர்சிப்பதில் வெற்றிவேல் செழியன் கோஷ்டியும், வினைசெய் ஆசிரியர் குழுவும் ஒரே அலைவரிசையில்தான் சிந்திக்கின்றனர்.

பிற கட்சிகள், சிறு குழுக்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் பொழுது, தரவுகளோடு முன்வைக்க வேண்டும். மேலும், எது சரியானது என்று முன்வைக்கும் பொழுது, அதற்கான ஆதாரங்களை, சான்றோர்களின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும்.

கட்டுரையின் எழுத்து நடையும், கருத்துக் கோர்வையும் செரிவானதாக இல்லாமல், அள்ளி இறைத்தாற்போலுள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக,

தொகுப்பாக, வினைசெய்யில் வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை என்பது தரவுகள் ஏதுமில்லாமல், யூகத்தின் அடிப்படையில், அகநிலைவாத கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றுதான் முடிவு செய்ய முடிகிறது .இது குறித்து வினைசெய் ஆசிரியர் குழு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அது ஒன்றுதான், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு பரந்து விரிந்த அணியைக் கட்டவும், மக்களை அணி திரட்டவும் உதவும். மாறாக, இதே பாணியில் எழுதிக் கொண்டிருந்தால் ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளிடமிருந்தும், அறிவித்துறையினரிடமிருந்தும் தனிமைப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது.

நட்பு சக்திகளிடம் வினைசெய், வெனையாக மாறக்கூடாது என்பதே என் போன்ற வாசகர்களின் அவா.

தோழமையுடன்

தமிழ்மணி

*****

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

நீங்கள் குட்டி முதலாளியா?

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

*****
வினை செய் கட்டுரை
*****
கார்ப்பரேட் காவிப் பாசிசம் வீழ்த்துவதுப் பற்றிய சரியானத் திசை வழி என்ன?

புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளுக்கு அறை கூவல்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் அரசியல் நடத்தை வழி!

“குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும், மக்களையும், பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைச் சரியாக அவதானித்து, செயல்தந்திர அரசியல் வழியைத் தீர்மானிப்பது, அதற்கேற்பப் போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும், முழக்கத்தையும் தீர்மானிப்பது” என்பதையே எமது செயல்தந்திர அரசியல் வழியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் 90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதைச் சரியாக அவதானித்து “நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தைச் செயல்தந்திர அரசியலாகக் கொண்டுச் சென்றோம்.

2015 ஆம் ஆண்டில் எமது தலைமைக் குழு அவதானித்தபடி நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு கட்டமைப்பு நெருக்கடி என முன்வைத்துச் செயல்பட துவங்கினோம். இந்த அவதானிப்பில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய அமைப்பு இல்லாதச் சூழலில், புரட்சிகர அமைப்பின் அகநிலைச் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், புறநிலை எதார்த்தத்தை மதிப்பீடு செய்வதிலும் மிகையான பார்வையில், அகநிலைவாதக் கண்ணோட்டத்தில், மக்கள்திரள் வழியிலான அரசியலை நிராகரித்து, புரட்சிகர அரசியலைச் சாகச நடவடிக்கையாக மாற்றத் துணிந்து செயல்பட்டோம். 

இவ்வாறு நாட்டின் மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கைத் தவறாக அவதானித்ததை நடைமுறை அனுபவத்தின் மூலமாக பாரிய அரசியல் தவறு என உணர்ந்து கொண்டோம். நாட்டை மறுகாலனியாக்குகின்ற சூழலில் அதற்குப் பொருத்தமாக பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசச் சக்திகளை ஏகாதிபத்தியங்களும் அவர்களின் தலைவனான அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஆதரிக்கத் துவங்கியது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலானப் பார்ப்பனப் பாசிஸ்டுகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதாவது பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தவறு என உணர்ந்தோம். 

கட்டமைப்பு நெருக்கடி எனும் அரசியல் நிகழ்ச்சிப் போக்கின்போதே, கார்ப்பரேட் காவிப் பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது என வரையறுத்து முன் வைத்தபோது எமது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த ஒரு தோழரும், அமைப்பு முறையின்றி அவருக்கு விசுவாசமாக இருந்த கீழைக்காற்று பதிப்பகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்ட துரை. சண்முகம் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர் சிலரும் கொல்லைப்புறமாகப் பாசிச எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர் என குதியாட்டம் போட்டனர்.

மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் செயல்தந்திர அரசியல் வழி!
90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்படத் துவங்கியபோது நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு என்பது மறுகாலனியாதிக்க அபாயமும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசச் சக்திகள் தலைதூக்குவதும்தான் என்பதை அனுமானித்து அதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். செயல்தந்திர அரசியல் வழியில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அரசியலைத் தயக்கமின்றி முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் கீழ் திரட்டி வந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடியானது உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு வடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே முன்னிறுத்தியது.  உலகில் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், மறு பங்கீடு செய்து கொள்வதற்கும் உரிய வழிமுறையாக மறுகாலனிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை காலனிய நாடுகளின் மீது திணித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது நாட்டின் பிரதான அபாயமாக மாறியது. இந்த நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி 2019 முதல் தீவிரமாக விவாதித்தாலும், 2021 ஆம் ஆண்டுதான் உரிய தரவுகளுடன் கார்ப்பரேட் காவிப் பாசிசமே நாட்டின் பிரதான அபாயம் எனவும், அது இந்தியாவின் வரலாற்றுத் தன்மைகளுக்கு பொருத்தமாக, கார்ப்பரேட் -காவிப் பாசிசம் எனும் இந்தியப் பாசிசமாக வெளிப்படுகிறது எனவும் வரையறைச் செய்து முன்வைத்தோம். 

அதனை வீழ்த்துவதற்கு புரட்சிகர ஜனநாயகச் சக்திகள், பாசிசத்தை எதிர்க்கின்ற அரசியல் இயக்கங்கள், ஆளும்வர்க்கத்தின் பாசிச எதிர்ப்புப் பிரிவு, தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியாகக் கொண்டு வந்து பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியமைப்பதும், அதற்கு இணையாகவே கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத் துறையினர் அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதும், அந்த முன்னணிகளின் மூலமாக தேர்தல் அரசியல் மற்றும் தேர்தலுக்கு வெளியில் போராடி, தற்காலிக இடைக்கால அரசாங்கமாக, ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் முன் வைக்கின்றோம்.  

சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு இடைக்கட்டமாக தோன்றியுள்ள ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதன் விளைவாக அரசியல், அமைப்பு, பண்பாட்டுத் துறைகளில் அமுல்படுத்தப்படும் பாசிசமயம், அரசு, அரசாங்கம் இரண்டுமே பாசிசமயமாவது போன்றவற்றை அவதானித்து அதனை வீழ்த்துவதற்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உடனடிக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். அப்படிப்பட்டக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை முறியடிக்கின்ற வகையில் செயல்தந்திரங்களை வகுத்து செயல்படும்போது, அவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் போர்தந்திர அரசியலுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அணுகுமுறையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைக்கின்றோம். இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். இவைதான் சர்வதேச ரீதியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடித்தக் கம்யூனிச இயக்கங்களின் அனுபவம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியேறியத் தோழர் பாலன் போன்ற சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் என முன்வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிநபர்கள், அமைப்பு பலம் இல்லாத வாய்ச்சவடால் பேர்வழிகள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என ஒன்றை நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்தை வீழ்த்துவதற்கு திட்ட வகைப்பட்ட செயல்பாடு அல்லது மாற்றுத் திட்டம் இல்லாத மானசீகவாதம் என்பதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு கொள்கையாக இருப்பதால் இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அடுத்து வெற்றிவேல் செழியன் என்பவருடன் எமது அமைப்பை விட்டு வெளியேறியச் சிலர் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் வரவில்லை, வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஐக்கிய முன்னணி கட்டுவோம். அதுவரை மக்கள் முன்னணியைக் கட்டி செயல்படுவோம் எனப் பாசிச எதிர்ப்பு பற்றி தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறிய வழிமுறையைத் திரித்துப் புரட்டி சந்தர்ப்பவாதமாகப் பேசி வருகின்றனர். பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை எமது அமைப்பு 90களில் இருந்து கடைப்பிடித்து வரும் செயல்தந்திர அரசியல் வழிமுறையில் செயல்பட தேவையில்லை, “செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து அதன் கீழ் மக்களை திரட்டுவது என்பதே அல்லேலூயா பஜனைப் போல பேசுவதுதான்” எனத் தனது அணிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, பொது வெளியில் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனப் பேசுகின்றனர். தேர்தலை எந்தக் காலத்திலும் பயன்படுத்தவே முடியாது எனும் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக செயல்படுகின்றனர். தேர்தல் பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தையோ அல்லது தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு போன்றவற்றைப் பற்றி தோழர் ஸ்டாலின், லெனின் போன்றவர்கள் முன்வைத்ததைப் பற்றியோ எதையும் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளத் திராணியின்றி உள்ளனர். எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு முடிவுகளைக் கூட இது நாள் வரை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளனர் என்பதும் உறுதியாகிறது. 

திடீரென்று இப்போது, “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என மொட்டையாக முழக்கத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகம் போலி ஜனநாயகமா அல்லது புதிய ஜனநாயகமா என்பதைக் கூட தெளிவாக முன் வவைக்கவில்லை. அவர்களின் மேடையில் பேசும் திருமுருகன் காந்தி, வேண்டாம் பிஜேபி என்றால் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்; அவர்கள் முட்டாள்கள் இல்லை என உளறிக் கொட்டினார். திருமுருகன் போன்றக் குட்டி முதலாளித்துவச் சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேணி, மார்க்சிய லெனினிய செயல்தந்திர அரசியல் வழியை நிராகரித்து செயல்படும் வெற்றித் தரப்பினர் முன்வைக்கின்ற இந்த வழிமுறையும், போகாத ஊருக்கு இல்லாத வழியை முன்வைக்கின்ற வழியாகும் என்பதால் அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

முத்துக்குமார் என்பவருடன் வெளியேறிச் சென்றுள்ள சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாம், ஆனால் முதலாளித்துவக் கட்சிகளான திமுக, காங்கிரஸ் பின்னால் நின்று கொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடாது என அகநிலைவாத அடிப்படையில் பேசித் திரிகின்றனர். இவர்களும் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறிக் கொண்டாலும் திட்டவட்டமாகப் புதிய ஜனநாயகப் புரட்சி என முன் வைப்பதில்லை. மாறாக ஜனநாயக குடியரசு என ஏதோ ஒன்றை இவர்கள் அகநிலைக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர். இந்த வரையறை எதிரிகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும், உத்திரவாதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளான இவர்கள், தனக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லை எனும் கண்ணோட்டத்தில் இருந்து தான்தோன்றித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதும் என இருப்பதால் இந்த வழிமுறையும் பாசிசத்தைத் துளி கூட அசைத்துப் பார்க்காது என்றே கருதுகிறோம்.
 
அதுமட்டுமின்றி பாசிசம் வரவில்லை, இந்தியா முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றெல்லாம் பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி வாய்வழி பிரச்சாரம் செய்வதன் மூலம், மார்க்சிய லெனினிய வழிமுறையைக் கைவிட்டு விலகி விட்டனர் என அவதானிக்கின்றோம்.

எமது அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அல்லது பிளவுபடுத்திக் கொண்டு வெளியேறிய வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு குழுக்களாக, தனிநபர்களாக இருந்துக் கொண்டு மேற்கண்டக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதன் மூலம் புரட்சிகர அரசியல் முன்னேறுவதற்கு தற்காலிகமாக சில தடைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றுள்ள தோழர்களையும் குழப்பியடித்து, விரக்தியிலும், எதுவும் நடக்காது எனும் சூனியவாதத்திலும் மூழ்கடிக்க எத்தனிக்கின்றனர். இதனால்தான் வெற்றிவேல் தரப்பின் செய்தித் தொடர்பாளர் மருது என்பவர் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என உளறிக் கொண்டுள்ளார்.

பாசிசம், பாசிச எதிர்ப்பு என்பதில் இரண்டே முகாம்கள்தான் உள்ளது. ஒன்று கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக முகாம்.. மற்றொன்று அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட முகாம். இந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ள தேர்தல் கட்சிகளில் ஒரு பிரிவைச் சார்ந்து, அதாவது திமுக, காங்கிரசைச் சார்ந்து நின்று ஆர் எஸ் எஸ் பாஜக பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என எமது அமைப்பிலிருந்து வெளியேறி, திமுகவை ஆதரித்து வரும் முன்னாள் மகஇக செயலர் மருதையன் செயல்பட்டு வருகிறார்.
 
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் எனத் திட்டவட்டமாக அவர் முன் வைக்கிறார். இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு முழுமையற்ற, மக்களை மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் ஆழ்த்துகின்ற எளிமையான, ஆனால் தோற்றத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட வழிமுறையாகும். இது பாசிச எதிர்ப்பு போர்வையில் உலவுகின்ற குட்டி முதலாளித்துவ தர்க்கம் ஆகும். 

அது மட்டுமல்ல, இது பாசிசத்தை வீழ்த்துவது எனும் முகாந்திரத்துடன் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயகத்தை நம்பி ஏமாறுவதாகும். பாசிசம் தோன்றுவதற்கு அடிப்படையான போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை நம்ப வைத்து மக்களை மீண்டும் பாசிச புதைகுழிக்குள் ஆழ்த்துவதற்கு செயல்படுகிறது என்பதால் இந்த வழிமுறையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.

நாட்டை சூழ்ந்திருக்கும் மிக முக்கியமான கொடூரமான அபாயமான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாங்களும் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு இத்தகையத் தவறானக் கண்ணோட்டத்தை, பாசிசத்தை சிறிதும் அசைத்துப் பார்க்காத வழிமுறைகளை முன் வைக்கின்ற தனி நபர்கள் மற்றும் சிறு சிறு குழுக்கள் போன்றவை பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்துத் தனக்குப் புரிந்த வகையில் எதிர்த்துப் போராடுவதற்கானத் தீர்வை முன்வைக்கின்றனர். இவை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழியைக் குழப்புவதிலும், பாட்டாளி வர்க்கத்தை கையறு நிலைக்கு தள்ளுவதிலும் உரிய பங்களிக்கின்றது என்பதால் இவற்றை நிராகரிக்க வேண்டும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்வைக்கின்றோம்.

நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவது எனும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மீது அன்றாடம் வன்முறைகளும், கொலை வெறியாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை பார்ப்பனக் கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்ற எத்தனிக்கும் சனாதனத் தர்மம் எனும் வர்ணாசிரமக் கொடுமை உயர்ந்தது எனத் துணிச்சலுடன் பேசப்படுகிறது. இன்று, நாட்டின் அரசியல், பொருளாதாரம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறுகாலனியாகி வருகிறது. 

இத்தகையக் கொடூரமானச் சூழ்நிலையில் நாட்டை ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்காலிகமான சில சமரசங்களுடன்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கின்றோம். இதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றோம். 

அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் அவர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி மூலம் நேரடியாக கீழிருந்து ஆர்எஸ்எஸ் பாஜகவை நேருக்கு நேர் நின்று வீழ்த்துவதற்குத் தயார்படுத்துவதும், அதற்கு இணையாக நாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கீழிருந்து   அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவதும் அவசியம் என்பதை முன் வைக்கின்றோம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இருவழிப் போராட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என முன்வைப்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றான காங்கிரசுடன் எந்த காலத்திலும் உறவு கூடாது. கடந்த காலத்தில் அப்படித்தானே இருந்தோம் என அனுபவவாதம் பேசுவதுடன், தேர்தல் அரசியல் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக் கூடாது எனப் பிதற்றுவதன் மூலம் சுயம்பிரகாசவாதிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அகநிலை சக்திகளின் பலம், பலவீனம் பற்றி புரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக்கொள்ள விரும்பாத இத்தகைய வறட்டுக் கோட்பாட்டுவாதமும், குறுங்குழுவாத கண்ணோட்டமும் பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தாது என்பது மட்டுமல்ல. ஒரு துளி அளவிற்குக் கூடப்  பாசிஸ்டுகளை பின்வாங்கச் செய்யாது என்பது மட்டும் நிச்சயமாகும். 

இத்தகைய வறட்டு கோட்பாட்டுவாதிகளை பொறுத்தவரை அவர்களின் நோக்கம், கட்சியை நடத்திக் கொண்டிருப்பது அல்லது தன்னை முற்போக்கு சக்திகளாகக் காட்டிக் கொள்வது என்பதுதானே ஒழிய வேறில்லை. ஆனால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் தற்காலிக இடைக்கால அரசாங்கத்தை, ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து எமது செயல்பாடுகளில் தங்களின் துணையுடன் முன்னேறுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
*****

Tuesday, 27 June 2023

பாம்பு படமெடுத்து சீறுகிறது! என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது பாஜக-ஆர் எஸ் எஸ் அபாயம். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக - வை விரட்டியடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் புதை குழிக்குத் தள்ளப்படுவோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பாஜகவுக்கு எதிரானக் கருத்துக்களை கூர்மைப்படுத்தி அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பாஜகவை எதிர்க்கின்ற அனைவருக்கும் உண்டு. பாஜகவுக்கு எதிராக திராவிட இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் என பலரும் களமாடி வருகின்றனர். இதுகுறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய போராட்டச் செய்திகள் மற்றும் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

ஆனால், இத்தகையக் செய்திகளை/கருத்துக்களை, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் பகிர வேண்டும்; பரப்ப வேண்டும். அதற்கு மாறாக, தங்களுடைய இயக்கம் சார்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை மட்டும் பகிர்வது, மாற்று இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என்பது பாஜகவுக்கு மட்டுமே வலு சேர்க்கும் என்பதை பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிற அனைவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தங்களுடைய கட்சிகளை/இயக்கங்களை மட்டுமே வளர்ப்பது என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, பிஜேபி-யை வீழ்த்துவதற்காக செயலாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தொடர அனுமதிப்போமேயானால், வரும் காலத்தில் பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளுமே காணாமல் ஆக்கப்பட்டுவிடும். குறைந்தபட்சம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது மேற்கண்ட ஆலோசனையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவா.

உங்களைக் கொத்திக் கொல்ல கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து நிற்கிறது. மக்கள் படைக்கட்டி, களத்தில் முட்டி மோதி படமெடுத்து நிற்கும் பாம்பை வீழ்த்துவோம் என வீரவசனம் பேசிக்கொண்டு அதற்கான வியூகங்களை நீங்கள் வகுப்பதற்குள் அது உங்களைப் போட்டுத் தள்ளிவிடும். கால் செருப்போ, தோளில் உள்ள  கைத்துண்டோ எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு, படை எடுத்து நிற்கும் பாம்பைத் தட்டி விட்டு, பிறகு அதை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தடிகளை எடுப்பதே அறிவுடைமை. 

தமிழ்மணி

Monday, 12 June 2023

எதிர்க் கட்சிகள் திமுக-வை எதிர்ப்பதன் நோக்கம் என்ன?

தேர்தல் அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவதும் போராடுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடுவதில் இவர்களுக்குக் கொள்கை கோட்பாடு நீதி நியாயம் என்று எந்த வெங்காயமும் கிடையாது. மாறாக ஆளுங்கட்சியைப் பலவீனப்படுத்தி அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே இவர்களுக்கு இலக்கு.

அதே வேளையில் தேர்தல் அரசியலுக்கு வெளியே உள்ள சில இயக்கங்கள், கட்சிகள் ஆளுங்கட்சியை மட்டுமே குறிவைத்து எதிர்த்து போராடுவதன் பின்னணியையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் மக்களிடையே மிக எளிதாக பிரபலமடைய முடியும். அதே நேரத்தில் தங்கள் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதைத் தவிர ஆளும் கட்சியை எதிர்ப்பதில் கொள்கை அடிப்படையில் இவர்களுக்கு வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

இந்தக் கும்பிடு எதற்காக?

இவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கோரிக்கைகள் சாத்தியப்படுமா சாத்தியப்படாதா என்பது பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களது பேச்சை பிரபலப்படுத்தச் சங்கிகளின் ஊடகங்கள் இவர்களைத் தேடி ஓடி வருவார்கள். திமுக அரசை எதிர்த்து இவர்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தினில் நிதி இல்லையே என்று இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சங்கிகளிடமிருந்து நிதி தானாகவே வந்து சேரும்.

இப்படி நான் சொல்வதன் மூலம், ஆகா திமுகவுக்கு ஜால்ரா போடுகிறார் என்று முடிச்சுப் போட்டு கம்பு சுற்ற வேண்டாம். மேற்கண்டவாறு சில இயக்கங்கள் தற்போது கிளம்பி இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. மாறாக திமுகவின் மக்கள் விரோதச் செயல்கள் எதுவாயினும் உள்நோக்கம் ஏதுமின்றி அதை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களின் கடமை என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழ்மணி

Saturday, 20 May 2023

தமிழ் நாட்டிற்கு மாற்று நாம் தமிழரா? கம்யூனிசமா?

தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு ஒன்றை தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கம்சார்பில் முகநூலில் பதிவு செய்திருந்தார்கள். அதை அப்படியே கீழே தருகிறேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து  கொண்டிருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன்.

மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது.

விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை....

ஒரு சொட்டு மது இல்லை....

எவரும் குடித்து விட்டு வரவில்லை....

அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர் கூட எக்ஸ்ட்ரா விற்பனை ஆகவில்லை....

யார் வாயில் இருந்தும் ஒரு கெட்ட வார்த்தை இல்லை....

இதனால் காவல் துறையினருக்கு எந்த டென்சனும் இல்லை....

ரிலாக்சாக அமர்ந்திருந்தனர்.....

வந்து இறங்கிய கூட்டத்தில் பாதிக்குப் பாதி பெண்கள்....

இது எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் இதுவரை நான் பார்க்காத காட்சி...

வருகின்றவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டரகளாக தம்பிமார்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள்...

அவர்கள் கையில் வாக்கி டாக்கி....

அவர்கள் 200 ரூபா சம்பளத்திற்கு வந்தவர்கள் அல்ல...

படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள்...

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலரும் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியது மிகச்சிறப்பு....

கூட்டத்திற்கு வர யாருக்கும் பணம் கொடுக்கவில்லை....

தனியாக கார், வேன், பேருந்து அமர்த்தி குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களே அதிகம்....

காரில் வந்து இறங்கிய ஒரு தம்பதியினரின் கையில் 3 வயது பெண் குழந்தை....

அந்த குழந்தை காரில் இருந்து இறங்கியதும் கழுத்தில் அணியும் இயக்கத்தின் கழுத்து பட்டையை அம்மாவிடம் கேட்டு வாங்கி ஆசையாக அணிந்து கொண்டு கம்பீரமாக மைதானத்தில் நுழைந்தது.....

நுழைவு வாயிலில் புத்தக கடை போட்டிருந்தவர் அக்குழந்தையை பார்த்ததும் இயக்கத்தினர் வழக்கப்படி கை முஷ்டியை உயர்த்தி அக்குழந்தைக்கு வணக்கம் வைத்தார்.

அக்குழந்தை அவரை விட அழகாக அதேபோல் அவருக்கு பதில் வணக்கம் வைத்தது....

நன்றாக பயிற்சி அளித்திருக்கின்றனர் அப்பெற்றோர்....

கடைக்காரர் ஓடிச்சென்று அக்குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சி விட்டு கீழே இறக்கினார்....

மீண்டும் பதில் வணக்கம் அப்படியே வைத்து விட்டு அக்குழந்தை சென்றது இதுவரை நான் எந்த இயக்கத்திலும் பார்க்காதது... வியந்து போனேன்......

இதைப் பார்த்ததும் இது கட்சி கூட்டம் அல்ல....

குடும்ப விழா என உணர்வே எனக்கு மேலோங்கியது...

நான்கு வழிச்சாலையில் கூட்டம்.

ஆனால் சாலையில் செல்லும் ஒரு வாகனத்திற்கு கூட சிறிய இடைஞ்சல் கூட இல்லை....

ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் திரண்டிருந்த இக்கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு கூட இல்லை....

பறை இசை, எழுச்சிப் பாடல்கள், சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் என கூட்ட ஏற்பாடுகள் பிரம்மாதம்....

நன்கொடைகள் வசூலித்தார்கள் தம்பிமார்கள்....

தேடிச்சென்று தம்பிமாரை அழைத்துத்தான் நன்கொடை கொடுத்தேன்....

அநேகர் அவ்வாறே தந்து உதவியதாக பெருமையாக தம்பிகள் சொன்னார்கள்....

ஒலி, ஒளி அமைப்பும் பிரம்மாதம்.....

மேடையின் பின்புறம் இதுவரை பிளெக்ஸ் போர்டுதான் வைப்பார்கள்....

இப்போது அதை டிஜிட்டல் ஸ்க்ரீன் முறையில் ராட்சத அளவில் அருமையாக அமைத்திருந்தார்கள்....

அதுவும் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் தெளிவாக இயங்கியது....

4 மணிக்கு கூட்டம் தொடங்கும் என தெரிவித்திருந்தார்கள்....

4 மணிக்கே பத்தாயிரம் பேர் வரை திரண்டு விட்டார்கள்....

4.30 மணிக்கு பறை இசை துவங்கியதும் சீமான் வந்து முன்வரிசையில் தம்பிமாரோடு அமர்ந்து விட்டார்.....

நுழைவு வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையில் வழங்கப்பட்டது...

அதன் அருகில் 2 ஆம்புலன்சில் குருதிக்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

அநேகர் அங்கும் குருதிக்கொடை வழங்கினார்கள்.....

ராவணன் குடிலில் புகைப்பட கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது....

தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள்,

ஆங்காங்கே குளிர்ந்த குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது....

மைதானத்தை சுற்றிலும் ஈழ விடுதலை போராட்டத்தில் தங்களின் இன்னுயிர் நீத்த மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அனைவருக்கும் வணக்கம் என சொல்லி விட்டு உரை வீச்சை துவங்குவதுதான் நாம் தமிழரின் சிறப்பு....

அவர்களே, இவர்களே என அம்பது பேர் பேரை அரை மணி நேரம் சொல்லி விட்டு அப்புறம் பேச தொடங்கும்போது ஏற்படும் சலிப்பு இவர்கள் மேடையில் இல்லை...

பிரபாகரன் ஒழுக்கத்துடன் கட்டி எழுப்பிய அதே போர்ப்படை போன்றே எனது அருமைத் தம்பி சீமானும் கட்டி எழுப்பி இருப்பது கண்கூடாக தெரிய வந்தது...

தூத்துக்குடி நாம் தமிழர் இயக்க தம்பிமார்கள், தங்கைமார்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...

உங்களின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது...

எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது...

திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான மிகப்பெரிய போர் ஒன்று இருக்கிறது...

இப்படையை அழித்து விட ஆட்சியாளர்கள் நினைப்பார்கள்....

அப்படி நினைத்தால் அதற்காக மிகப்பெரிய விலையை அவர்கள் தர வேண்டியிருக்கும்...

மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்....

அன்பு மக்களே, நீங்கள் எந்த கட்சியிலும் இருந்து விட்டுப் போங்கள்....

ஒருமுறையாவது நாம் தமிழர் இயக்கம் நடத்தும் இப்படிப்பட்ட மாநாட்டை ஒருமுறை சுற்றி வந்து அனைத்தையும் கவனித்துப் பாருங்கள்.

இப்படி விலாவாரியாக நாம் தமிழர் கட்சி குறித்தும், சீமான் குறித்தும் சிலாகித்திருந்தார் பத்திரிகையாளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஜோசப் ராஜன் அவர்கள். இந்தப் பதிவு குறித்த மதிப்பீட்டை பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் அதைத் தொடர்ந்து எனக்கும் தினேஷ் ராஜன் என்கிற வழக்குரைஞருக்கும் இடையில் நடைபெற்ற விவாதத்தை அப்படியே கீழே தருகிறேன். வாசகர்கள் இது குறித்துத் தங்களுடையக் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஊரான்:

மிகை மதிப்பீடு. ஓவர் பில்டப். ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் இளைஞர்கள் ஏதோ ஒன்றுக்குப் பலியாகிக் கொண்டுதானிருக்கிருக்கிறார்கள் இப்போது சீமானிடம். அவ்வளவுதான்.

தினேஷ் ராவணன் வழக்கறிஞர்:

நான் சரியான மதிப்பீடாகவே பார்க்கின்றேன்.இன்றைய தமிழ் தேசிய அரசியலில் யார் முன்னின்று களமாடிக் கொண்டிருப்பது??? மற்ற எல்லா தலைவர்களையும் விட ஓட்டு அரசியலில் இந்தக் கட்சிதான் முன்னிலையில் உள்ளது! சீமான் கரத்தை வலு சேர்க்க வேண்டி உள்ளதே”.

ஊரான்:

தினேஷ் இராவணன் வழக்கறிஞர் உங்களின் மதிப்பீடு தவறானது. சித்தாந்த ரீதியாக அவருடைய செயல்பாடுகளை நாம் பரிசீலிக்க வேண்டும். அவருடைய நடைமுறை முழுக்க முழுக்க சனாதனத்திற்கு வலு சேர்க்கக் கூடியவை.  மேலும் அவரது அரசியல் தமிழ் தேசிய விடுதலைக்கு எந்த வகையிலும் உதவாது. சித்தாந்த ரீதியாக அவரைப் புரிந்து கொள்ள கீழ்கண்ட கட்டுரையின் தொடர் முழுவதையும் படிக்கவும்.

https://ethirthunil.blogspot.com/2022/01/1.html?m=1

மேற்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரை:

தமிழ்த் தேசியம் என்றால் அது சீமான்தான் என்கிற கருத்து இன்று இளைஞர்கள் மத்தியில் மிகத் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. தமிழரை உய்விக்க வந்த மாயோனாக, சீயோனாக சீமானை சில இளைஞர்கள் பார்க்கின்றனர். முப்பாட்டன் முருகன் தொடங்கி பெரும்பாட்டி ஔவை, ஓபிஎஸ்–இபிஎஸ் சித்தப்பாக்கள், சித்தி சசிகலா, வழி காட்டி திருவரங்கம் சங்கர் அப்பா என இவருக்குச் சொந்த பந்தம் ஏராளம் என்பதாலும், அண்ணனின் ஆமைக்கறியால் இவரது தசைகள் முறுக்கேறியதாலும், கிரீன் பெல்ட்-பிளாக் பெல்ட் என விளாசிக் கொண்டிருக்கிறார். இவரது விளாசலில் திராவிடமே திக்குமுக்காடுவதாகத் தம்பிகள் வேறு சாட்டையைச் சுழற்றுகின்றனர். தமிழ் மண்ணையே ஆளத் துடிக்கும் இவருக்கு, பாவம் சொந்தமாக ஒரு வீடு இல்லை என்கிற ‘பெருந் துயரத்தைத்’ தவிர இவரது உல்லாசத்திற்குக் குறை ஒன்றுமில்லை.

நாம் தமிழர்’ சீமானின் தமிழ்த் தேசியம்!

தமிழின மீட்சி, தமிழீழத் தனியரசு, மாநிலங்களின் தன்னுரிமை, இறையாண்மைக் குடியரசுகளின் கூட்டு இணையாட்சி-அதற்கேற்ப அரசியல் சட்டத் திருத்தம், ஆட்சி மொழி-வழிபாட்டு மொழி-வழக்காடு மொழி-தமிழில் படித்தவருக்கே வேலை வாய்ப்பு என எங்கும் தமிழ், சமதர்மப் பாதையமைக்கக் கூட்டுறவு முறை, நிலமற்றோருக்கு நிலமும் மனையும், அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி, உலகத் தமிழர் ஒன்றிணைப்பு, சமனியத் தமிழரசு, வருண–சனாதன அழிப்பு, சாதி-சமய ஆதிக்கம் ஒழிப்பு, சமயம் சாரா அரசு, தனியார் மயம்–கள்ளப் பணம் ஒழிப்பு, மருத்துவம் அடிப்படை உரிமை, ஆண்-பெண் சுயஉதவிக் குழுக்கள், தேசிய இன நட்புறவுக் கழகம் (எ.கா:தமிழர்-வங்காளி) என ஒரு குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வது போல நீள்கிறது இவரது கொள்கைப் பிரகடனங்கள்.

யாரிடமிருந்து தமிழின மீட்சி? திமுக அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் ‘திருட்டு’ திராவிட திமுக-விடமிருந்து என்பார் சீமான். ஆனால் (திராவிடத்தால் துளிர்த்த) இலை மலர்ந்தால் இவர் ஆமைக் கறியோடு இளைப்பாறி விடுவார்.

தமிழீழ தனியரசு–புலம்பெயர்  தமிழரிடமிருந்து பணம் கரப்பதைத் தவிர வேறு ஒரு வெங்காயத்தையும் இவரால் உரிக்க முடியாது. 

சாதி ஆணவப் படுகொலையை “குடிப்பெருமை   கொலை” என பெருமை பேசும் இவர், சாதி ஆதிக்கத்தையும் வருண-சாதியையும் ஒழிக்கப் போகிறாராம்? கிருஸ்தவமும் இஸ்லாமும் ஐரோப்பிய–அரேபிய சமயங்கள்; சைவமும்–மாலியமும் மட்டும்தான் தமிழர் சமயங்கள் என கதை அளந்து கொண்டே, சமயம் சாரா அரசு அமைக்கப் போவதாகச் சரடு விடுகிறார். 

பன்னெடுங்காலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொண்டே தேசிய இன நட்புறவுக் கழகம் பற்றி நரித்தனம் பேசுகிறார்.

திரைப்படங்களில் கச்சைக் கட்டி குத்தாட்டம் போட்டு கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கும், இடுப்பில் பச்சைத் துண்டு கட்டிக் கொண்டு ‘தமிழர்  முன்னணி’ ஆட்டம் போடும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை; இரண்டிலும் இளைஞர்கள் சீரழிவதைத் தவிர!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் இங்கோ, குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாய்கிற கதையாகி விட்டது, ஐயா மணியரசனின் கதை. சீமானாவது  இந்து மதம் தமிழர் மதமே இல்லை என்கிறார். ஆனால் மணியரசனோ, தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று  சொல்லி சைவத்தை மீட்டெடுக்கும் திருநாஞானசம்பந்தராய் அவதாரம்  எடுத்து வச்சிரநந்தியைக் கழுவிலேற்றுகிறார்.

இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தால், வேத-எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கருத்தியலை, தமிழர் நெஞ்சங்களிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறொரு பயனும் கிட்டப் போவதில்லை.

தோழர் ஸ்டாலினின் சொற்களில் சொல்லவேண்டுமானால், இவர்கள் இருவரும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய சமூக முறைக்குத் திரும்பச் செல்வதற்கு முயற்சி செய்பவர்கள்; அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் கூட இந்த முடிவை கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்க முடியாது. இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் பிழையானது என்பதற்கு, பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது, பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர் குலைப்பது என வேறு பல காரணங்கள் இருந்தாலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய முறைக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரே காரணத்திற்காக இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

பார்ப்பனரல்லாதோர் இயக்கம்-நீதிக்கட்சி தொடங்கி, பெரியார்-அண்ணா-கலைஞர்-ஸ்டாலின் காலம் வரை திராவிடக் கருத்தியலை, பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக எதிர்ப்பது ஏன்? இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிடக் கருத்தியலின் சமூக நீதிக் கோட்பாடுகளால், சூத்திரர்கள் இருந்த இடத்தில் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் சூத்திரர்களையும் வைத்ததால்தான் பார்ப்பனர்கள் பெரியார் மீது கடும்கோபம் கொள்ளக் காரணம். அனைத்து சாதி அர்ச்சகர் இதற்கு சமீபத்திய எடுப்பான உதாரணம். 

வட இந்தியாவில் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய- மாநில அமைச்சர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் பார்ப்பனர்களால் வரமுடிகிறது. ஆனால் தமிழகத்திலோ ஒரு வார்டு உறுப்பினராக வருவதற்கே திண்டாட வேண்டியிருக்கிறது. வடக்கும், தெற்கு போல ஆகிவிடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களை அச்சுறுத்தியதால்தான், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து அதிகாரத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் போலும். 

பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளால் ஆதிக்கத்தை இழந்தவர்கள் அலருவதில் அர்த்தம் உண்டு. ஆனால் பெரியாரால் ஆதாயமடைந்தவர்கள் அலருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

தொடரும்

தமிழ்மணி

தினேஷ் ராவணன் வழக்கறிஞர்:

இவருடைய கொள்கை எந்த விதத்தில் சனாதனத்திற்கு வழி வகுக்கின்றது என்று எனக்குத்  தெரியவில்லை ஐயா ! சனாதனைத்தை முழு மூச்சாக எதிர்க்கன்றோம் என்று கூறும் திமுக பிஜேபி யிடம் சரணாகதி அடைந்துவிட்டது. அதிமுக சொல்லவே வேண்டியதில்லை., அடுத்து இருக்கும் பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் திராவிடக் கட்சிகளில்தான் மாறி மாறி சங்கமிக்கின்றன. வேறு யாரை நம்பி களமாடுவது!

அரசியல் பேசும் கட்சிகளுக்கு இடையே இவர்தான் உயிர்மெய் நேயம் பேசுகின்றான், காடு வளம், கனிம வளம், நீர் வளம், நில வளம் குறித்து பேசி வருகின்றான்..

எனக்கு ஒன்றுதான் ஐயா

என்னுடைய வளங்கள் காக்கப்பட வேண்டும், என் மண்ணை மற்ற மாநிலத்தை போன்றே மண்ணின் மைந்தன் ஆள வேண்டும்!

ஊரான்:

கனிம வளம், நீர் வளம், நில வளம் குறித்து பேசுவதோடு சரி. அதிமுக ஆட்சியிலும் சரி, திமுக ஆட்சியிலும் சரி இந்த வளங்கள் கொள்ளை போவது தொடரத்தான் செய்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு பெரிய தொடர் போராட்டங்கள் எதையாவது சீமான் நடத்தி இருக்கிறாரா? அடையாளப் போராட்டங்கள் கதைக்கு உதவாது.

சனாதனம் என்றால் என்னவென்று தெரிந்தால்தான் இவர் சனாதனத்துக்கு வக்காலத்து வாங்குகிறாரா இல்லையா என்பது புரியும். தயவு கூர்ந்து வேதங்களையும், உபநிடதங்களையும், மனுசாஸ்திர தர்மத்தையும் இன்ன பிற இந்து மத இதிகாசங்களையும், பகவத் கீதையையும் படியுங்கள், சனாதனத்தைப் புரிந்து கொள்வதற்கு. சைவத்தையும் மாலியத்தையும் சிவனையும் விஷ்ணுவையும் தூக்கிப் பிடிப்பவர் எப்படி சனாதனத்துக்கு எதிரானவராக இருக்க முடியும்? சனாதானத்தை அடிநாதக் கொள்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு மும்பை சென்று வாக்கு சேகரித்தது எந்த அடிப்படையில்? 2000 ஆண்டுகளுக்கு முன்பு சனாதனத்தை எதிர்த்துப் போராடிய திராவிடக் கருத்தியலை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துபவர் சனாதனியாக மட்டுமே இருக்க முடியும். இன்றைய திமுக மற்றும் திராவிடச் கட்சிகளை வைத்துக்கொண்டு திராவிடக் கருத்தியலை கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது அடி முட்டாள் தனம்.

இப்படி ஏராளம் இருக்கு. ஆனால் இதற்கு மாற்று யார் என்று கேள்வி எழுப்புகிறீர்கள். பொதுவுடமை சித்தாந்தம் மட்டுமே இதற்கு மாற்று. இதை இன்றைய தேர்தல் அரசியல் கம்யூனிஸ்களிடமிருந்து கற்க முடியாது. மாறாக கம்யூனிச ஆசான்களின் நூல்களில் இருந்து மட்டுமே கற்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

சித்தாந்த அடிப்படை எதுவுமில்லாத சீமானை ஒருக்காலும் மாற்றாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை அப்படித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டால் அது சமூகத்தை சில பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லவே உதவும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

சனாதனக் கருத்தியலுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டுவதற்காகவே சங்கிக் கூட்டங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்தான் சீமான் என்பது இன்று சிலருக்குப் புரிந்தாலும் அது பலருக்கு விரைவில் தெரிய வரும்.

எனக்கு தற்போது வயது 65. கிட்டத்தட்ட 45 கால ஆண்டு கால அரசியல் வாழ்க்கையிலிருந்து சொல்லுகிறேன். தயவு செய்து சீமானுக்குப் பின்னால் செல்லாதீர்கள். மக்களுக்குத் துரோகம் இழைக்காதீர்கள். கம்யூனிசம் ஒன்றே மாற்று. அதை நோக்கிப் பயணிக்க வாருங்கள்.

தினேஷ் இராவணன் வழக்கறிஞர்:

ஐயா, நான் தர்க்கம் செய்வதாக என்ன வேண்டாம். என் வயது 37 தான் ஆகின்றது! உங்கள் அனுபவம் எங்கள் வழிகாட்டிதான்! உங்கள் கால சித்தாந்தம் இப்போது இல்லை என்பது என் எண்ணம்! எப்படி இருக்க வேண்டிய கம்யூனிச தோழர்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள்! தமிழகத்தில் உள்ள தோழர்கள் இனத்தை கொன்று ஒழித்த காங்கிரசுக்கு தோள் கொடுக்கின்றார்கள், கேரளாவில் உள்ள தோழர்கள் எதிர்க்கின்றார்கள்! என்ன சித்தாந்தம் இது? தமிழகத்திற்கு எதிராக  மேக தாதுவில் ஆட்சிக்கு வந்தால் அணை கட்டுவோம் என்கிறது கர்நாடக காங்கிரசு. இதைப் பற்றி தோழர்கள் ஏதாவது பேசுகின்றார்களா? அவர்களுடன் நிற்பதோடு அவர்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள்

தேர்தலில் காசு கொடுக்காமல் வெல்ல முடிந்ததா???

சனாதனம் என்ன என்று எனக்கு தெரியாமல் இருக்கலாம்!

ஆனால் இங்கு தமிழ் தேசிய அரசியலில் பண்பாட்டு புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி வெல்லாது ஐயா

இறுதியாக மனித குலம் உள்ளவரை கம்யூனிசம் வாழும் மறுக்க முடியாத உண்மை!!!!!

சரி இன்றைய அரசியலில் யார் சரியானவர்கள் உங்களின் பார்வையில்???

ஊரான்:

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் பொதுவுடமை சித்தாந்தத்தை மட்டும் பாருங்கள். பொதுவுடமையைப் பேசும் கட்சிகளைப் பார்க்காதீர்கள் என்று. மீண்டும் நீங்கள் தேர்தல் அரசியலில் நிற்கும் பொதுவுடமைக் கட்சிகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

"இறுதிவரை மனித குலம் உள்ளவரை கம்யூனிசம் வாழும். மறுக்க முடியாத உண்மை" என்ற உங்களின் கூற்றுதான் மிகச் சரியானது. அதற்காகத்தான் மனிதச் சமூகம் பாடுபட வேண்டும். அதை விடுத்து இடையில் வந்தவர்களை அவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு மயங்குவது மிகவும் ஆபத்தானது.

சனாதானத்தை மறுக்கின்ற அல்லது அதற்கு எதிராகக் களமாடும் கட்சிகளுக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் நாம் ஆதரவு தரலாம். மற்றபடி அவர்கள்தான் மாற்று என்று பேசுவது பொருத்தமானது அல்ல. அந்த வகையில்தான் திமுகவையோ, காங்கிரசையோ, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்ட்களையோ அணுக வேண்டும். சனாதனத்தை ஆதரிக்கும் கட்சிகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

‘தமிழ் தேசிய அரசியலில் பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி வெல்லாது' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

பண்பாடு என்பது அரசியல் பொருளாதாரத்தின் ஒரு வெளிப்பாடு. என்ன வகையான அரசியல் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பதான் மக்களின் பண்பாடு தீர்மானிக்கப்படும். எனவே அரசியல் பொருளாதாரம் மாறாமல் பண்பாட்டை முதலில் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். பண்பாட்டை மாற்ற வேண்டும் என்றால் கூட நாம் அரசியல் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலக்கை நோக்கி முன் செல்ல வேண்டும். வெறும் பிரச்சாரங்களால் அல்லது வாய் வீச்சுப் பேச்சுக்களால் மக்களின் பண்பாட்டை மாற்றி விட முடியாது.

பொதுவாகவே நாம் தமிழர் கட்சியை, சீமானை ஆதரிக்கின்ற இளைஞர்கள் உணர்ச்சிக்கு ஆட்பட்டுதான் அவரை ஆதரிக்கிறார்கள். மற்றபடி அதற்குப் பின்னால் ஒரு தெளிவான அரசியல் சித்தாந்த கோட்பாடு எதுவும் கிடையாது என்பது இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்திலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நான் உங்களைக் குறை கூறுவதாகத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுதான் எதார்த்தம்.

மிகச் சரியானவர்கள் யார் என்று இறுதியாகக் கேட்டிருக்கிறீர்கள். பொதுவுடமை பேசக்கூடிய மார்சிய-லெனினிய கட்சிகளைச் சார்ந்தவர்கள்தான் மிகச் சரியானவர்கள்.  அவர்களுக்கிடையே கூட சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் பல்வேறுத் தியாகங்களைப் புரிந்து கம்யூனிசத்தை நிறுவுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள் அணிதிரளுவது ஒன்றுதான் மாற்று. அத்தகையப் பாதையைக் கடந்து வந்தவன்தான் நான்.

மத்திய அரசின் பொதுத்தறை நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து கொண்டே, தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்று, அரசியல் பண்பாட்டுத்தளத்தில் ஒரு கலை இலக்கியவாதியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைது சிறை என எண்ணற்ற இன்னல்களை எதிர்கொண்டவன். தொழிற்சங்கப் பணிகளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு பெருத்த பொருளாதார இழப்புகளுக்கிடையில் மீண்டும் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவன். தற்போது ஒரு வழக்குரைஞராக "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தில்" என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

வழக்கறிஞர் என்ற முறையில் நீங்களும் எங்களை நோக்கி வரவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. எங்களோடு இணைந்து பணியாற்ற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். உங்களது விருப்பத்தைப் பொறுத்து மேலும் விவாதத்தைத் தொடரலாம். நாகரிகமாகவும் பொறுமையோடும் விவாதம் செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி!

தமிழ்மணி


Monday, 27 December 2021

ஆம்பூரில் கீழ்வெண்மணி நினைவு நாள்!

1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள்  எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?

தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக  இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச் சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால் ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.

நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.

சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன் நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.

00000

ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து  இராஷ்டிரத்தைக் கட்டமைக்க முயன்று வருகிறது.

மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத் திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும் மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை  உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

00000

மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரன்  அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர். 

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன் அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார். 

இடையிடையே மக்கள் கலை இலக்கியக் கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.












தகவல்

மக்கள் அதிகாரம்
திருப்பத்தூர் மாவட்டம்