Thursday 31 August 2023

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம், புரட்சி, அதற்கான கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகள், நிலவுகின்ற அரசியல் சூழலில் பாசி எதிர்ப்பு மற்றும் அதற்கான ஐக்கிய முன்னணி அல்லது மக்கள் முன்னணி பற்றி இன்று எண்ணற்ற அமைப்புகள் பேசி வருகின்றன.

தங்களுடைய அமைப்புகளின் கோட்பாடு மற்றும் நடைமுறை, உண்மையில் அறிவியல் பூர்வமானதா என்பதைப் புரிந்து கொள்கிற ஆற்றல் இந்த அமைப்புகளில் உள்ள அணிகளில் பலருக்கும் இல்லை என்றாலும், தங்களுடைய அமைப்பு மட்டும்தான் மிகவும் சரியானது என நம்பி இவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாகக் களமாடி வருகின்றனர். 

மேற்கண்ட இயக்கங்களின் நீண்ட காலத் திட்டம் மற்றும் உடனடித் திட்டம் குறித்த ஆவணங்களைப் பரிசீலித்தால் மட்டுமே அத்தகைய அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். ஒரு சில அமைப்புகளைக் தவிர, பெரும்பாலான அமைப்புகளுக்கு அத்தகைய ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நிற்க, இன்று வெளிப்படையாகச் செயல்படுகின்ற சில அமைப்புகளின் தலைவர்கள், திடீர் என்று வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல; மாறாக, ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து, சில கருத்து வேறுபாடுகளுக்காக வெளியே வந்து, தனி அமைப்பு கண்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அமைப்புகளைக் குறைகூறிவிட்டு இவர்கள் வெளியே வந்தார்களோ, அந்த அமைப்புகளோடு இன்று கூட்டு நடவடிக்கை வேறு! இது கேளிக்கூத்தாக இல்லையா என்பதை வெளியே வந்தவர்களும் பரிசீலிப்பதில்லை; தாய் அமைப்பினரும் பரிசீலிப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், இதை கலைப்பு வாதம் என்றுகூட இவர்கள் முத்திரை குத்தக்கூடும். 

கனவுலகில் தலைவர்கள்

இப்படி, தாய் அமைப்பை விட்டு வெளியே வந்த பிறகு,  புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மார்க்ஸ்-லெனின்-பெரியார்-அம்பேத்கர் ரேஞ்சுக்குத் தங்களை நினைத்துக் கொள்கின்றனர். நினைக்கட்டும், அது அவர்களது உரிமை. ஆனால், ஒரு பெயர்ப் பலகை அமைப்பை வைத்துக் கொண்டு, இவர்கள் ஆடுகின்ற ஆட்டம்தான் சகிக்க முடியவில்லை. 

தாய் அமைப்பின் கோட்பாடு-நடைமுறையை குறைகூறி விட்டு வெளியே வந்த இவர்களது புதிய கோட்பாடும், நடைமுறையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிற அளவுக்குப் போதியத் தரவுகளோடு இருப்பதில்லை. கோட்பாடே இல்லாமல் நடைமுறையில் இருப்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

தாய் அமைப்பை அவதூறு செய்துவிட்டு வெளியேறி, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு ,கோட்பாட்டுத் தெளிவையும் பெறாமல், தாய் அமைப்பு என்ன செய்ததோ அதையே இவர்களும் தொடர்ந்து செய்வது என்பதுதான் நூற்றுக் கணக்கில் உள்ள உதிரி அமைப்புகளின் தற்போதைய நிலைமை. 

புகழ் நாட்டம்

நக்சல்பரி என்ற சொல்லை பல அமைப்புகள் கைவிட்ட நிலையில், இரகசிய கட்சி-ஆயுதப் புரட்சி என்ற சொல்லாடல்களை சில அமைப்புகள் கைவிட்டு தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கேற்கும் நிலையில்-இதை நான் குறையாக இங்கே குறிப்பிடவில்லை- முற்போக்கு இயக்கங்கள் மீதான அரசின் அடக்குமுறை முன்பு போல் இன்று இல்லை என்பதாலும், சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் தனிநபர் புகழ் நாட்டம் காரணமாகவும், இத்தகையோர் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக அவதாரம் எடுத்துள்ளனர். இனியும் புதிய அவதாரங்கள் வரக்கூடும். மக்களின் பின்தங்கிய அரசியல் புரிதல் காரணமாகவும், தாங்கள் சார்ந்த சாதி-மத-இன-மொழி அடிப்படையிலான ஈர்ப்பு காரணமாகவும் இத்தகையோரை சிலர் ஆதரிப்பதுதான் இவர்களின் பலம்.

உண்மையிலேயே வாய்சவடால் அடிக்கும் பல பெயர்ப்பலகை  உதிரி அமைப்புகளை அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில் அதைச் செய்வது, பாசிச சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது. இருந்தாலும், இந்த உதிரி அமைப்புகளின் நீண்ட கால-உடனடித் திட்டம் குறித்தவைகள் மீது அணிகளிடையே விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் மார்க்சியத்தின் பெயராலும், தமிழ் தேசியம் என்ற பெயராலும், அம்பேத்கர்-பெரியாரின் பெயராலும் இன்று நூற்றுக்கணக்கில் செயல்படும் உதிரி அமைப்புகள், நாளை மேலும் பெருகினால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் பலம்பெறவே உதவும்.

தமிழ்மணி

2 comments:

  1. விஜயகுமார்.கு: ஆமாம். நாம் அதைக் குறித்து நம் மக்களிடம் போதுமான அளவுக்கு நாம் பேசவில்லை.
    கை பிரதிகள் மூலமாக நம் நண்பர்கள் குடும்பத்திடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
    இக்காலத்தில் பகுத்தறிவாளர்களும் முற்போக்குவாதிகளுமே சாதியவாதிகளாகவும் காரியவாதிகளாகவும் மாறிவிட்டார்கள்.

    ReplyDelete
  2. முத்துராமன்: சமூக மாற்றம்(முற்போக்கான) வேண்டி போராடக் கூடிய நபர்கள் அவசியம் இதைப் படிக்க வேண்டும் அல்லது கொண்டு சேர்க்க வேண்டும்.நன்று.

    ReplyDelete