Thursday 22 July 2021

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

மார்க்சியம் பேசுவோர் மத்தியில் அதிகமாகப் புழங்கும் சொற்களில் ‘அறிவுஜீவிகள்’ (intellectuals) என்ற சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால் தோழர்களுக்கிடையில் பிணக்குகள் எழும்போது இச்சொல் படாதபாடுபடுகிறது.

பூவுலக மாந்தர்கள் அனைவருமே, தங்கள் வாழ்வியில் தொடர்பானவற்றில் குறிப்பிட்ட அளவு அறிவுத் திறனைப் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட துறையிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ ஆழமானப் புரிதலையும், அறிவையும் பெற்றிருக்கின்றனர். இவர்கள்தான் ‘அறிவுஜீவிகள்’ என்று கருதப்படுகின்றனர். தமிழும் வடமொழியும் கலந்த இச்சொல்லைவிட அறிவாளிகள் அல்லது அறிஞர்கள் என்று சொல்வதே சாலப் பொருந்தும். அறிவாளிகள் என்ற சொல் பொருத்தமான சொல் என்றாலும், ”மற்றவர்கள் எல்லாம் முட்டாள்களா?” என்று குதர்க்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால் இத்தகையோரை அறிஞர் (intellectual) / அறிஞர்கள் (intellectuals) என்றே இனி பயன்படுத்துவோம்.

“நடுநிலைப் பள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பயின்றோர், மற்றும் அதற்கு இணையான கல்வியைப் பயின்றோர் அனைவரும் அறிஞர்கள் என்றே அறியப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தொழிற்சார் பிரிவினர் (professionals), பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் (technicians) ஆகிய அனைவரும் இதில் அடங்குவர். இவர்களில் நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.” அறிஞர்கள் பற்றிய மாவோவின் வரையறை இது.

மேற்கண்ட அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட துறையில் மாற்றமோ, வளர்ச்சியோ அல்லது சமூக மாற்றமோ, புரட்சியோ சாத்தியமில்லை. அதனால்தான், “புதிய சீனாவை கட்டியமைப்பதற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலட்சக் கணக்கான உழவர்களை அணி திரட்டவும், புரட்சிகரப் பண்பாட்டு இயக்கத்தை வளர்த்தெடுக்கவும், புரட்சிகர ஐய்க்கிய முன்னணியை விரிவுபடுத்தவும் அறிஞர்களைப் பெருமளவில் கட்சியில் இணைக்க வேண்டும். அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை” என்கிறார் மாவோ.


“கட்சி, படை, அரசாங்க உறுப்புகள், பண்பாட்டு இயக்கம் மற்றும் மக்கள் திரள் உள்ளிட்டவைகளில் பெருமளவில் அறிஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் கட்சியில் உள்ள ஒரு சிலர், அறிஞர்களை அச்சத்தோடு அணுகி, அவர்களிடம் பாகுபாடு காட்டியதோடு, அவர்களின் வாயை அடக்கவும் முயற்சி செய்தனர். உள்ளூர் கட்சி அமைப்புகள், அறிஞர்களை இணைப்பதற்கு முனைப்பு காட்டுவதில்லை. புரட்சியில் அறிஞர்களின் முக்கியத்துவத்தை உணராதது மட்டுமல்ல, அறிஞர்களை வழிநடத்துகிற அளவுக்குக் கட்சி திறன் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவாகத்தான் ஒரு சிலர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.”

“எனவே, கடினமாகப் பணிபுரிகிற, துன்பத்தைத் தாங்கக்கூடிய அறிஞர்கள் அனைவரையும் பெரும் அளவில் சேர்க்க வேண்டும். பல்வேறு தளங்களில் அவர்கள் வேலை செய்வதற்கு உதவ வேண்டும். கட்சியில் இணையத் தகுதி பெறாதவர்கள் அல்லது விரும்பாதவர்களோடு நல்லுறவைப் பேண வேண்டும். அவர்களின் பணிகளுக்கு உதவ வேண்டும்”.

“எதிரிகளால் அனுப்பப்படும் ஊடுருவல்காரர்கள், விசுவாசம் இல்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் நியாயமான, பற்று கொண்ட அறிஞர்கள் மீது ஐயம் கொள்ளக் கூடாது”.

“அறிஞர்கள் அனைவருக்கும் உகந்தப் பணியை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் கல்வி மற்றும் வழிகாட்டுதல் கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களைக் களைந்து கொள்வதோடு, புரட்சிகரத் தன்மையை வளர்த்துக் கொண்டு பழைய கட்சி உறுப்பினர்கன், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களோடு ஐய்க்கியப்படுவார்கள்”.

“நமக்கு ஆதரவாக உள்ள, அதே வேளையில் கட்சியில் சேராத அறிஞர்களை பண்பாட்டு இயக்கத்திலும், ஐயக்கிய முன்னணிப் பணியிலும் இணைக்க வேண்டும்”.

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. 

அறிஞர்கள் குறித்த மாவோவின் மேற்கண்ட வழிகாட்டுதலை இந்தியப் பொதுவுடமை இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே புரட்சியை நேசிப்போரின் அவாவாகும்.

தமிழ்மணி

Ref: பெரும் எண்ணிக்கையில் அறிஞர்களைச் சேர்ப்பீர்!” - மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி-2, விடியல் பதிப்பகம்

தொடர்புடைய பதிவுகள்

நீங்கள் குட்டி முதலாளியா?

No comments:

Post a Comment