Tuesday, 11 November 2025

சனாதன (=பாசிச) எதிர்ப்பு பேசுவோர் ஏன் ஒன்றிணைய வேண்டும்?

அலுமினியம், செம்பு, தங்கம், இரும்பு, ஆக்சிஜன், குளோரின் போன்ற தனிமங்களின் தனித்தனியான பயன்பாடு ஒருபக்கம் இருந்த போதிலும், அவை பிற தனிமங்களோடு சேர்ந்து மூலக்கூறுகளாக மாறும்போது அவற்றின் பயன்பாடு மேலும் பரந்த அளவில் அதிகரிக்கின்றன.


11 புரோட்டான் மற்றும் 11 எலக்ட்ரான்களைக் கொண்ட சோடியம் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானும், அதேபோல 17 புரோட்டான் மற்றும் 17 எலக்ட்ரான்களைக் கொண்ட குளோரின் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 7 வேலன்ஸ் எலக்ட்ரான்களும் இணைந்து சோடியம் குளோரைடு (NaCl) எனும் மூலக்கூறு உருவாகும்போதுதான் நமக்கு சுவை சேர்க்கும் உப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டுக்கு நேட்ரம் மூரியாடிக்கம் (Natrum Muriaticum) என்று பெயர். 

NaCl

இந்த நேட்ரம் மூரியாடிக்கத்திலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்து, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவற்றை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

உயிரற்ற தனிமங்களே மனிதர்களுக்குப் பயன்படும் பொழுது, உயிருள்ள மனிதர்கள் பலரும் சோடியத்தில் உள்ள ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானைப் போல தனித்தோ, குளோரினில் உள்ள ஏழு வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல ஒரு சிறு கூட்டமாகவோ ஒன்று சேராமல் வனாந்தரத்தில் அனாதியாக எவருக்கும் பயனின்றி வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

சனாதனம் எனும் நச்சுக்கழிவு இந்த நாட்டின் மொத்த செயல்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த சனாதனக் கழிவுகளை வெளியேற்ற கரிப்புத் தன்மை கொண்ட நேட்ரம் மூரியாடிக்கம் எனும் உப்பு தேவைப்படுகிறது. அதற்கு, வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல தனித்தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், சிறுசிறு கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு சார்ந்த களப்போராளிகளும் இணைந்து நேட்ரம் மூரியாடிக்கம் எனும் மூலக்கூறாக மாறவில்லை என்றால் சனாதனம் எனும் நச்சுக் கழிவுகளால் இந்த நாடு அழுகிப் போவதைத் தடுக்க முடியாது.

மூன்று, ஐந்து உள்ளிட்ட சிறு சிறு எண்ணிக்கையில் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக சுற்றிக்கொண்டிருக்கும் இயக்கத்தாருக்கும் இது பொருந்தும். ஒரு தனிமத்தில் உள்ள மூன்று வேலன்ஸ் எலக்ட்ரான்களும், மற்றொரு தனிமத்தில் உள்ள ஐந்து வேலன்ஸ் எலக்ட்ரான்களும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே மூலக்கூறாக உருவாக முடியும்.

இந்த நிலையிலும், இன்னமும் நீங்கள் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக தனித்தனியே சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா அல்லது மூலக்கூறுகளாக ஒன்றிணைந்து மக்களுக்குப் பயன்படப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்!

தமிழ்மணி

No comments:

Post a Comment