Monday 15 May 2023

கோவன் திமுக-வுக்கு விலை போகிறாரா?

கார்ப்பரேட்-காவிப் பாசிச அபாயமே இன்றைய பிரதான, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமான பிரச்சனையாக இருப்பதினால் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டி உள்ளது. 

பார்ப்பனிய மேலாதிக்கத்தை அதாவது சனாதன தர்மத்தை முழுமையாக நிலை நாட்டுவது மற்றும் தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக விலகிக் கொண்டு அவற்றையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற இரண்டு முக்கியமானத் திட்டங்களை முன்வைத்துதான் பாரதிய ஜனதாக் கட்சி செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் அரசியல்-பொருளாதார-பண்பாட்டுத் துறையில் பாஜக மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பரிசீலனை செய்தால் இது மிகத் தெளிவாகப் புரியும். விரிவஞ்சி நான் இங்கே அதை விளக்கவில்லை. இது குறித்து ஊரான் வலைப்பூவில் ஏற்கனவே நிறையவே எழுதி இருக்கிறேன். மக்கள் அதிகாரம் இணையதளத்திலும் இது குறித்து விரிவான செய்திகளைக் காணமுடியும்.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், கோவனின் செயல்பாட்டையும் அவர் சார்ந்திருக்கிற மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் செயல்பாடுகளையும் பரிசீலிக்க வேண்டும். கோவன் தனிநபர் அல்ல. அவர் சார்ந்திருக்கிற இயக்கத்தின் மூலமாகத்தான் எதையும் மேற்கொள்ள முடியும். 

நிற்க, கடந்த தேர்தலில் திமுக-வா அதிமுக-வா என்று வரும் பொழுது, பாஜகவுக்கு முற்றிலுமாக விலை போன அதிமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சனாதன எதிர்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களை மையமாக வைத்துதான் திராவிடக் கருத்தியல் தமிழகத்தில் வலுவாக பேசப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்த கட்சிகளாக இருந்தாலும், சனாதன எதிர்ப்பை முற்றிலுமாக என்றோ கைவிட்டு விட்டது அதிமுக. 

இன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. அன்று மூடு டாஸ்மாக்கை என்று பாடிய கோவன் இன்று ஏன் பாடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர். 

சனாதனமா, சாராயமா என்று வருகிறபோது சனாதனமே மிக முதன்மையான ஆபத்தாக உருவெடுத்துள்ளது. அதற்கு எதிரானப் பிரச்சாரத்தையே கோவனும் அவர் சார்ந்த இயக்கமும் முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, திமுக அரசின் மக்களுக்கு எதிரானத் திட்டங்களை, செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கவில்லை. மாறாக, அதற்கு எதிரானப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் பத்து மணி நேர வேலை சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது குறித்த செய்திகளை மக்கள் அதிகாரம் (https://makkalathikaram.com/) இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் காண முடியும்.

எனவே, கோவனும் அவர் சார்ந்த இயக்கமும் திமுக-வுக்குத் துணை போகிறது என்று பேசுவது, கோவனையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் இழிவு படுத்துவதற்கான அல்லது மட்டுப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாக, ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய பிரச்சாரங்கள் சனாதனத்திற்கே வலு சேர்க்கும் என்பதை பொதுச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஒன்றும் பாட்டாளிகளுக்கான கட்சி இல்லையே! இருந்த போதிலும் சமீபத்திய கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதனுடைய வெற்றியை கம்யூனிஸ்டுகளே கொண்டாடுகிறார்களே! ஏன்? இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தம். தேவையும் அதுதான்.

தமிழ்மணி




No comments:

Post a Comment