Thursday 8 June 2023

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

பொதுவுடமை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் 2020 ஆம் ஆண்டு இரண்டாகப் பிளவு பட்டன. 

இந்தப் பிளவின் போது வழக்கறிஞர் ராஜு தோழர் கோவன், தோழர் காளியப்பன் இவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு மொத்த அணிகளில் கிட்டத்தட்ட 80% சேர் ஒரு அணியாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து பிரிந்த மற்ற 20% பேர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களின் தலைமையில் ஓர் அணியாகவும் சில காலம் செயல்பட்டனர்.

இந்தப் பிளவிற்குப் பிறகு தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையிலான அணி 50:50 என்ற அளவில் இரண்டாகப் பிளவு பட்டு, ஒரு தரப்பு வினவு அணியாகவும், மற்றொரு தரப்பு செங்கனல் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

மூன்று அணிகளுமே மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுகின்றனர். அதேபோல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற தொழிற்சங்கத்தின் பெயரை மூன்று அணிகளுமே பயன்படுத்துகின்றனர். 

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய  அமைப்புகளின் பெயரை ராஜு தரப்பினரும், வினவு தரப்பினரும் பயன்படுத்திய வருகின்றனர். 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் பெயரை ராஜு தரப்பினர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட அமைப்புகள் பிளவு படும் போது அரசியல் ரீதியான காரணங்களுக்காக பிளவு படவில்லை. மாறாகத் தோழர்கள் மருதையன் மற்றும் நாதன் ஆகிய இருவரும் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து விலகிய போது அது குறித்த பரிசீலனையில் அரசியல் தலைமை குழுவில் இருந்த பிற தோழர்களின் அமைப்பு ரீதியிலான தவறான அணுகுமுறையினால்தான் அவர்கள்  இருவரும் விலக நேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து தங்களது தவறை ஒப்புக் கொண்ட அரசியல்  தலைமைக் குழு பதவி விலகியது. மேற்கொண்டு அமைப்பை வழிநடத்திச் செல்லவும் இந்த விலகள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கும் ஒரு தற்காலிகத் தலைமைக் குழு தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வந்த போதுதான், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைமையில் இருந்த ஒருவரின் பெல் சிட்டி ஊழல் நக்கீரனில் வெளிவந்தது. ஊழலில் சம்பந்தப்பட்டத் தோழரை வழிநடத்தியவர்கள், பழைய அரசியல் தலைமைக் குழுவின் செயலாளர் மற்றும் மற்றொரு உறுப்பினர் இருவரும் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். மருதையனின் விலகளைக் கூட எளிதில் எதிர்கொள்ள முடியும், ஆனால் பெல் சிட்டி ஊழலை அணிகளிடம் எதிர்கொள்ள முடியாது என்று அஞ்சி நடுங்கிய பழைய செயலாளர் இடைக்கால குழு மீதும், மருதையன் மீதும் சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அமைப்பை உடைத்துக் கொண்டு 20% ஆட்களுடன் வெளியேறினார். இதுதான் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பிளவுக்கான உண்மையான காரணம்.

அதன் பிறகு அந்த 20% பேரும் இரண்டாகப் பிளவுபட்டனர் எனபது தனிக்கதை.

உண்மை இவ்வாறு இருக்க, மருதையன் என்கிற பார்ப்பனர்தான் இந்தப் பிளவுக்குக் காரணம் என்று அவரது பிறப்பை சுட்டிக் காட்டி வினவு தரப்பு, செங்கனல் தரப்பு, மே 17 இயக்கம், நாம் தமிழர், ஏஎம்கேவின் சில சீடர்கள் மற்றும்  ஊழல்-பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்பு விரோத செயல்பாடுகளுக்காக ஏற்கனவே அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட சில உதிரிகள் உள்ளிட்ட சிலர் தோழர் மருதையன் மீது அவதூறு பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்றனர். 

பிஎஸ்என்எல் என்கிற பொதுத்துறை நிறுவன வேலையை விட்டுவிட்டு, நீண்ட நாள் திருமணம் செய்து கொள்ளாமல், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, 40 ஆண்டு காலம் முழு நேரமாக ஒரு பொதுவுடமை இயக்கத்தில் வேலை செய்த ஒருவரை, அந்த அமைப்பை உடைப்பதற்காகவே அமைப்பில் பதுங்கி இருந்து வேலை செய்தார் என்று மேற்கண்ட நபர்கள் பழி சுமத்துகின்றனர். ஒரு அரை கிறுக்கன் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் மேற்கண்ட கேனக் கிறுக்கர்கள் தொடர்ந்து மருதையன் மீதான அவதூறுப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்குக் காரணம் மருதையன் என்கிற பார்ப்பனர்தான் என்று அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கேனக் கிறுக்கர்கள் கீழ்கண்ட அமைப்புகள் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர்கள் காரணம் என்பதை பட்டியலிடுவார்களா?

ஒன்றாக இருந்த வினவு தரப்பு  2022 ல் பிளவுபட்டு வினவு தரப்பு, செங்கனல் தரப்பு என பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

கடந்த காலங்களில் ஒன்றுபட்ட CPI, CPI  -CPI(M) என இரண்டாகப் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

அதன் பிறகு CPI(M) பிளவுபட்டு CPI(ML) உருவாவதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

அந்த CPI(ML) பிளவு பட்டு CPI(ML)-விடுதலை, CPI(ML)-மக்கள் யுத்தக் குழு, CPI(ML)-செங்கொடி, MCC, உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக அகில இந்திய அளவில் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

2004 ல் CPI(ML)-மக்கள் யுத்தக் குழு, MCC, கட்சி ஐக்கியம் (PU) ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து CPI (மாவோயிஸ்ட்) கட்சி உருவானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, CPI(ML)- மக்கள் யுத்தக் குழு பிளவு பட்டு தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலை படையாகவும், ஏஎம்கே தலைமையிலான போல்ஷ்விக் அணியாகவும் பிளவுபட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்? 

சமீபத்திய சில ஆண்டுகளில் ஏ.எம்.கே தலைமையிலான போல்ஷ்விக் குழுவினர் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மற்றும் பாட்டாளி வர்க்க சமரன் அணி என மூன்றாகப் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தமிழகத்தில் உருவான மேற்கு பிராந்தியக் குழு CPI(ML)-SOC, மற்றும் CPI(ML)-TNOC (தற்போதைய TNML), என 70களின் இறுதியில் இரண்டாகப் பிளவுப்பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்? மேற்கண்ட CPI(ML)-SOC தான் தற்போது மூன்றாகப் பிளவு பட்டிருக்கிறது‌. இந்த பிளவுக்குத்தான் தோழர் மருதையனை பார்ப்பனர் என்று வசைபாடி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்.

இவை தவிர RSP, SUCI போன்ற அமைப்புகளும் பொதுவுடமை அமைப்புகளிலிருந்து பிளவு பட்டு வந்தவர்கள்தான். தோழர்கள் தியாகு,  பாலன், மிதா.பாண்டியன், அரங்க குணசேகரன் உள்ளிட்ட எண்ணற்றோர் பல்வேறு பொது உடமை அமைப்புகளிலிருந்து பிளவுபட்டு வெளியேறி தங்களுக்கான அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்‌. இவர்கள் பிளவு பட்டு வெளியேறியதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

பொதுவுடைமை இயக்கங்கள் மட்டுமல்ல திராவிட இயக்கங்கள் கூட திக, மாபெபொக, தபெதிக, திவிக, திமுக, அஇஅதிமுக, (இன்று இபிஎஸ்-ஓபிஎஸ்-டிடிவி) என பல பிரிவுகளாகப் பிளவுபட்டதற்கு யார் காரணம்? பார்ப்பனரா?

இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பொதுவுடமை இயக்க வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல்-அமைப்பு சூழ்நிலைகளையொட்டி பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் பிளவுகளுக்கான காரணங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கான காரணத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பரிசீலிக்க வேண்டும். இந்தப் பிளவுக்கான காரணத்தை ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இத்தகைய வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு மருதையன் பார்ப்பனராக இருப்பதுதான் காரணம் என்று பிதற்றுகின்றனர். 

தோழர் மருதையன்

அமைப்பிலிருந்து வெளியேறிய வினவு மற்றும் செங்கனல் ஆகிய இரண்டு தரப்பும் சிறுபான்மையினர். நியாயமாகப் பார்த்தால் வெளியேறிய சிறுபான்மையினர் புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகம்.  ஆனால் இதை கிஞ்சித்தும் மதிக்காமல் ஒரே பெயரில் செயல்படுகின்றனர். காரணம் புதிய பெயரில் செயல்பட்டால் அவர்கள் போணியாக மாட்டார்கள். அதற்கான அரசியல் மற்றும் அமைப்பு பலமும் அவர்களிடம் கிடையாது. அதனால்தான் அழிச்சாட்டியமாக பிளவுக்குக் காரணம் மருதையன் என்கிற பார்ப்பனர்தான் என்று பிதற்றி வருகின்றனர். இதற்கு சில அனாமதேயங்களையும் உடன் அழைத்துக் கொள்கின்றனர்.

தமிழ்மணி


 

No comments:

Post a Comment