Monday 12 June 2023

எதிர்க் கட்சிகள் திமுக-வை எதிர்ப்பதன் நோக்கம் என்ன?

தேர்தல் அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவதும் போராடுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடுவதில் இவர்களுக்குக் கொள்கை கோட்பாடு நீதி நியாயம் என்று எந்த வெங்காயமும் கிடையாது. மாறாக ஆளுங்கட்சியைப் பலவீனப்படுத்தி அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே இவர்களுக்கு இலக்கு.

அதே வேளையில் தேர்தல் அரசியலுக்கு வெளியே உள்ள சில இயக்கங்கள், கட்சிகள் ஆளுங்கட்சியை மட்டுமே குறிவைத்து எதிர்த்து போராடுவதன் பின்னணியையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் மக்களிடையே மிக எளிதாக பிரபலமடைய முடியும். அதே நேரத்தில் தங்கள் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதைத் தவிர ஆளும் கட்சியை எதிர்ப்பதில் கொள்கை அடிப்படையில் இவர்களுக்கு வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

இந்தக் கும்பிடு எதற்காக?

இவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கோரிக்கைகள் சாத்தியப்படுமா சாத்தியப்படாதா என்பது பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களது பேச்சை பிரபலப்படுத்தச் சங்கிகளின் ஊடகங்கள் இவர்களைத் தேடி ஓடி வருவார்கள். திமுக அரசை எதிர்த்து இவர்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தினில் நிதி இல்லையே என்று இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சங்கிகளிடமிருந்து நிதி தானாகவே வந்து சேரும்.

இப்படி நான் சொல்வதன் மூலம், ஆகா திமுகவுக்கு ஜால்ரா போடுகிறார் என்று முடிச்சுப் போட்டு கம்பு சுற்ற வேண்டாம். மேற்கண்டவாறு சில இயக்கங்கள் தற்போது கிளம்பி இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. மாறாக திமுகவின் மக்கள் விரோதச் செயல்கள் எதுவாயினும் உள்நோக்கம் ஏதுமின்றி அதை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்களின் கடமை என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழ்மணி

No comments:

Post a Comment