Sunday 29 November 2020

வேலூரில் களை கட்டிய நவம்பர் புரட்சி விழா!

எட்டு வழிச் சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில் என நமது மண்ணைப் பறித்து, ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகளால் நீர் - நிலம் - காற்று என அனைத்தையும் கெடுத்து, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறித்து, இந்தித் திணிப்பு - பசு புனிதம் பேசி தமிழர் பண்பாட்டை அழித்து, அரசு - பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, வேளாண் திருத்தச் சட்டம் - தொழிலாளர் நல திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்து, எதிர்த்துக் கேள்வி கேட்டால் கைது - சிறை - துப்பாக்கிச்சூடு - படுகொலை என மக்களுக்கு எதிரான மாபாதகச் செயலைச் செய்து வரும் கார்ப்பரேட் காவிக் கும்பலின் பாசிசக் காட்டாசிக்கு முடிவு கட்டாமல் மக்களுக்கு இனி வாழ்வு இல்லை.

உழைப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் தொடரும் வரை மக்களுக்கு விடிவு இல்லை. முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு சோசலிச சமூக அமைப்பை கொண்டு வந்தால் மட்டுமே மக்கள் தங்களது அனைத்துத் தேவைகளையும் பெறமுடியும் என்பதை நிலை நாட்டிய ருஷ்ய சோசலிசப் புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழா உலகமெங்கும் உழைக்கும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 7 அன்று கிளைச் சங்கங்களில் கொடியேற்றுதல், அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்திய பிறகு இறுதியில் குடும்ப விழா என நவம்பர் புரட்சி விழா இனிதே நிறைவு பெற்றது.

29.11.2020 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தோழர்கள் வேந்தன் மற்றும் முத்துராமன் ஆகியோர் கவிதை வாசிக்க, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக வெளிவரவுள்ள வசந்தத்தின் இடிமுழக்கம் கவிதை நூல் குறித்து தோழர் ரமணி அறிமுகம் செய்ய, ஓவியம், கலை நிகழ்ச்சி, மாறுவேடம், சிலம்பம், பறை இசை என விழா குதூகலமாய் களைகட்டியது. 

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் பாலு, ஆட்டோத் தொழிலாளர்களின் போராட்ட அனுபவம் குறித்து தோழர் செல்வம், டாஸ்மாக் சாராயக் கடைகளால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை குறித்து தோழர் உமா, தரைக்கடை வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சனைகள்-சங்கமாய் சேர்ந்து அவற்றை எதிர் கொண்ட அனுபவம் குறித்து தோழர் சுப்பிரமணி, தனியார் துறை மற்றும்  பொது துறை தொழிலாளர்களின் இன்றைய அவல நிலை குறித்து தோழர் சாமி, முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம்தான் என்பதை நிலைநாட்டிய ருசிய சோசலிசப் புரட்சியை நாம் ஏன் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் பொன்.சேகர் ஆகியோர் விழாவில் உரையாற்றினர்.

இறுதியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு தோழர் சலீனா அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. 

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் குடும்பத்தோடு பங்கேற்ற இந்த விழா உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப விழா என்பதை பறை சாற்றியது.






























தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment