Saturday, 25 April 2026

பசித்தவனுக்கு ஏதடா ருசி?

நமது நாட்டில் தேர்தல் வரும்போது மட்டும் ‘ஜனநாயகம்’ என்ற சொல் ஊர் முழுக்கத் தாரை தப்பட்டையோடு வலம் வரும். ஆனால், சாமானியனின் சட்டைப் பையைச் சல்லடை போட்டுத் தேய்க்கும் ‘கல்லா பெட்டி’ ரௌடித்தனங்கள் அன்றாடம் அரங்கேறுவதுதான் நிதர்சனம்.

அந்த நூற்றி ஐந்து ரூபாய் ‘பிரிஞ்சி’!

கடந்த வாரம் விஷாரத்திலிருந்து திரும்பியபோது, ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ‘பிரிஞ்சி’ சாப்பிட நேர்ந்தது. காலை உணவைத் தவிர்த்த அகோரப் பசியில் இருந்த எனக்கு, அந்தப் ‘பிரிஞ்சி’ வந்த கிண்ணத்தைப் பார்த்தபோது அது உணவாகத் தெரியவில்லை; ஏதோ ருசி பார்க்கக் கொடுத்த ‘சாம்பிள்’ போலத் தெரிந்தது. நாகரிகமாக ‘ஸ்பூனில்’ சாப்பிட்டதால் பிழைத்தேன்; கைப்பிடியில் அள்ளியிருந்தால் இரண்டு வாய் கூடத் தேறியிருக்காது.


சாப்பிட்டு முடித்துவிட்டு 105 ரூபாய் ‘பில்லைப்’ பார்த்தபோது ‘பகீர்’ என்றது. இதேபோல மூன்று மடங்கு ‘பிரிஞ்சி’ வாலாஜாவில் நாற்பது ரூபாய்க்குத் தருகிறானே என்று எண்ணியவாறு வெளியே வந்தேன். 

அரிசி, பீன்ஸ், கேரட், பட்டை, லவங்கம் என இரண்டிலும் மூலப்பொருட்கள் ஒன்றுதான். பிறகு ஏன் இந்த மூன்று மடங்கு விலை? 

ஒப்பனை உணவகங்களில் ஜி.எஸ்.டி வேறு. பசித்தவன் உண்டதைக் கூடத் தொண்டையில் விரல் விட்டு எடுக்கும் அவலமல்லவா இது?

ருசி எனும் போதை!

உண்மையில், ருசி என்பது உணவகக்காரன் நம்மை ஏமாற்றப் பயன்படுத்தும் ஒரு மாயக்கவர்ச்சி. நடிகர் நடிகைகளின் கவர்ச்சிக்கு மயங்கும் ‘தற்குறிகளைப்’ போல, நாம் ருசி எனும் போதையில் சிக்கிக் கிடக்கிறோம்.

மைதா மாவும்... முன்னூறு ரூபாய் பன்னீரும்!

இருபது நாட்களுக்கு முன்பு முடிச்சூர் அருகே ஒரு ‘உணவகக் குடிலுக்கு’ சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடுத்தர வர்க்கம் தன் ருசி ஆசையைத் தீர்த்துக்கொள்ள குடும்பம் குடும்பமாக மொய்த்திருந்தது. காத்திருந்து இடம் பிடித்து மெனு கார்டைப் பார்த்தால் எல்லாம் வட இந்திய ‘நாண்’ மற்றும் ‘பன்னீர்’ ரகங்கள்.


உள்ளங்கை அளவு மைதா மாவை எடுத்து அதை வீசி வீசி அடித்து, சுடுகல்லில் போட்டு எடுத்த ஒரு நாண் தொண்ணூறு ரூபாய். அதற்குத் தொட்டுக்கொள்ள கொஞ்சம் பாலாடைக்கட்டியும் மசாலாவும் கலந்த ‘பன்னீர் பட்டர் மசாலா’ முன்னூறு ரூபாய்! ஒரு கிலோ பன்னீரே முன்னூறு ரூபாய்க்கு வாங்கிவிடலாம்.

ஆனால், இவர்கள் தரும் ஒரு சிறிய கிண்ணம் மசாலாவிற்கு இவ்வளவு விலையா? யாரிடம் கேட்க? 

இந்த விலை எல்லாம் ‘மிடில் கிளாஸ் ஓட்டல்'களில்தான். இதுவே மேட்டுக்குடிகளுக்கான நட்சத்திர ஓட்டல் என்றால் விலை கற்பனைக்கு எட்டாது.

மூலப்பொருள் ஒன்றுதான்... ஆனால் விலையோ பலவிதம்!

பிரிஞ்சி, நாண் மட்டுமல்ல... இனிப்பு, கார வகைகள், பிரியாணி, பழச்சாறுகள் என எதை எடுத்தாலும் இதுதான் நிலை. 

ஒரு கிலோ ஆட்டுக்கறி விலை எல்லாருக்கும் ஒன்றுதான்; ஒரு கிலோ சர்க்கரை விலை எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால், கடையைப் பொறுத்து விலை பல மடங்கு எகிறுகிறது.

சாலையோரத்தில் 10 ரூபாய்க்குத் தாகம் தீர்க்கும் அதே எலுமிச்சை சாறு, பெரிய ஹோட்டல்களில் 'மின்ட் லெமனேட்' என்று பெயர் சூட்டப்பட்டு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வேளாண் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி தன் விளைபொருளுக்கு விலை வைக்க முடியாது; அதை வாங்கும் இடைத்தரகனோ அல்லது வியாபாரியோதான் முடிவு செய்கிறான். ஆனால், அதே பொருளைச் சமைத்து விற்கும் ஹோட்டல்காரன் மட்டும் தன் இஷ்டத்திற்கு விலை வைக்கிறான். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லை.

சட்டம் ஒரு இருட்டறை!

உணவின் தரத்தைக் கட்டுப்படுத்த ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (FSSAI)’ இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், விலையைக் கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று பார்த்தால், “விலையைத் தீர்மானிக்க ஓட்டல்காரனுக்குச் சுதந்திரம் இருக்கிறது” என்பதே கசப்பான உண்மை. முப்பது ரூபாய் பன்னீர் மசாலாவை முன்னூறுக்கு விற்க அனுமதிக்கும் இந்தச் சட்டமும் நியாயமும் எங்கே போயின?

நாறுகிறது நாடு!

விலையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லை, தரத்தைக் கண்காணிக்க நேர்மை இல்லை. இந்தத் தைரியத்தில்தான் வேலூர் புதிய பேருந்து நிலையக் கழிவறையில் மூத்திரம் பெய்யக்கூட ஒரு முரட்டுத் தாடிக்காரன் பத்து ரூபாய் கேட்கிறான்.

இவை எதுவும் உரிய அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாது. எட்டினாலும் அவர்கள் வாய்கள் ஏற்கனவே ‘எலும்புத் துண்டுகளைக்’ கவ்விக் கொண்டிருப்பதால் அவை பேசாது. 

கொள்ளைக்காரர்களுக்கு நாம் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றி ஏமாறுவது போல, நம்மை அறியாமலேயே நமது பாக்கெட்டில் இருந்து பணம் பறிபோவதை ருசியின் மயக்கத்தில் மறந்து போகிறோம்!

ஊரான்

No comments:

Post a Comment